வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (28/02/2018)

கடைசி தொடர்பு:10:03 (28/02/2018)

10000 வருடங்கள் ஓடக்கூடிய 200 அடி கடிகாரம்... அமேஸானின் அடுத்த பிரமாண்டம்! #ClockOfTheLongNow

பிரபஞ்சத்தில் ஒழுங்கின்றி மிதந்துகொண்டிருக்கும் பல கோடி சுற்றும் முட்களில், நாமும் ஒரு முள்! - டாவின்ஸி டீமன்ஸ் தொடரிலிருந்து...

கடிகாரம்

பொதுவாக, எதிர்காலம் குறித்த சிந்தனை என்பது நமக்குக் குறுகிய ஒன்றாகத்தான் இருக்கும். நாம்தான் நேற்றைய வேலைகளை இன்று செய்யும் பழக்கம் உடையவர்கள் ஆயிற்றே? ஆனால், இது அப்படியில்லை. இந்தத் திட்டம் அதில் சேராது. இது ஓர் அசாதாரண திட்டம். இதுவரை யாரும் கற்பனை செய்திடாத ஒன்று. ஆம், இது ஒரு கடிகாரம்! அதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. இது பத்தாயிரம் ஆண்டுகள் வரை ஓடும் என்கிறார்கள். அதாவது, இது ஓடுவதை நிறுத்தும்போது அப்போதிருக்கும் மனிதர்கள் தேதியை எழுதும்போது, வருடம் என்ற இடத்தில் தோராயமாக 12020 என்று எழுதிக்கொண்டிருப்பார்கள். அப்படியென்றால் இது எப்படிப்பட்ட கடிகாரம்?

டிக்... டிக்... டிக்... டிஜிட்டல் கடிகாரங்கள் வந்த பிறகு, கடிகாரத்தின் நொடி முள் எழுப்பும் இசை நம் செவிகளுக்கு எட்டுவதே இல்லை. அதுவும் கையில் மொபைல் போன்கள் வந்தவுடன் பலர் கைகளில் கடிகாரம் கட்டுவதையே விட்டுவிட்டனர். இருந்தும் இன்னமும் சில பழைய பாரம்பர்ய வீடுகளில் நொடி முள், நிமிட முள், நேர முள் என அனைத்தும் உடைய, சாவி கொடுத்தால் ஓடக்கூடிய கடிகாரங்கள் இருக்கும். அப்படிப்பட்ட ஒன்றுதான் இதுவும். என்ன, அளவில் மிக மிகப் பெரியது. 200 அடி (60 மீட்டர்) உயரம் கொண்டிருக்கப்போகும் இது, பள்ளத்தாக்கின் சமதளத்தில் இருந்து 2000 அடிக்கு (610 மீட்டர்) உயர்ந்து நிற்கப் போகிறது. இவ்வளவு பெரிய கடிகாரம், பத்து நூற்றாண்டுகள் ஓட, எந்தவித இயற்கை வளங்களையும் எரிபொருளையும் வீணாக்கக் கூடாது என்பதற்காக சூரியச் சக்தி (SolarEnergy) மற்றும் பாரம்பர்ய இயந்திர முறுக்கு திறன் (Mechanical Winding Force) மூலம் இயங்கும்படி இதை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். சரி, இதற்கு யார் சாவி கொடுப்பார்கள்? வேறு யார்? அந்த வழியே செல்லும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். எந்த வழியே?

200 அடி கடிகாரம்

டெக்ஸாஸ் - மெக்ஸிகோ எல்லைப்பகுதியில் இருக்கும் சியாரா டையப்லோ மலைத்தொடரில் (Sierra Diablo Mountain Range) அமைந்திருக்கும் சுண்ணாம்புச் சிகரங்களுக்கு உள்ளே 500 அடி (150 மீட்டர்) ஆழத்தில் இது இனி உறங்கிக்கொண்டிருக்கும். ஒரு தனியார் இடமான இதற்குச் செல்ல, அருகிலிருக்கும் ஒரு விமானநிலையத்தில் இறங்கிச் சிலமணி நேரங்கள் சாலையில் பயணம் செய்ய வேண்டும். இப்படியொரு யோசனை யாருக்கு எப்போது உருவானது? யார் இந்தக் கனவுத் திட்டத்திற்கு தற்போது உயிர் கொடுக்கிறார்கள்?

1995-ம் ஆண்டு. பத்திரிகை ஒன்றில் டேனி ஹில்லிஸ் என்னும் கணினி விஞ்ஞானி ஒருவர் இப்படி எழுதுகிறார். "நான் ஒரு கடிகாரம் உருவாக்க வேண்டும். அது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தன் முள்ளை நகர்த்த வேண்டும். பத்தாயிரம் ஆண்டுகள் அது ஓட வேண்டும். ஒவ்வொரு நூற்றாண்டு முடியும் போதும், உள்ளேயிருக்கும் குக்கூ பறவை வெளியே வந்து ஒலி எழுப்ப வேண்டும்" இதை அவர் வெறும் கனவாக, ஓர் ஆசையாக நிறுத்திக்கொள்ளவில்லை. லட்சியமாக எடுத்துக்கொள்கிறார். அடுத்த ஆண்டே லாங் நவ் ஃபவுண்டேஷன் (Long Now Foundation) என்ற லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்குகிறார். இதன் முக்கிய நோக்கமே அந்தக் கடிகாரத்திற்கு உயிர் கொடுப்பதுதான். மூன்று வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, 1999-ம் ஆண்டு, அந்தக் கடிகாரம் எப்படியிருக்கும் என்பதற்கான ஒரு மாதிரியை (prototype) உருவாக்குகிறார். அதுவே 8 அடி (2.4 மீட்டர்) இருந்தது. அடுத்துப் பிறக்கவிருக்கும் ஆண்டு மில்லேனியம் (2000) என்பதால் லண்டன் அறிவியல் அருங்காட்சியகம் அதை எடுத்துக் காட்சிப்படுத்திக் கொண்டது.

2011-ம் ஆண்டு, தன் திட்டப்படி 200 அடி (60 மீட்டர்) உயரம் இருக்கப் போகும் இந்தக் கடிகாரத்தை கட்ட வேலைகளைத் தொடங்கினார் டேனி ஹில்லிஸ். இதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம்தான் அந்த டெக்ஸாஸ் எல்லையில் இருக்கும் மலைத்தொடர். இந்த இடம் பிரபல அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) அவர்களுக்குச் சொந்தமானது. இந்தக் கடிகாரம் கட்ட எவ்வளவு செலவு ஆகும்? 42 மில்லியன் டாலர்கள் என்கிறார் டேனி ஹில்லிஸ். நிற்க. இதுவரை கிடைத்த தரவுகளை ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம்.

மணியோசை

ஒரு கடிகாரம் இருக்கிறது. அதன் விலை 42 மில்லியன். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அதன் முள் நகரும். அதுவும் 500 அடி (150 மீட்டர்) ஆழத்தில் அது எப்போதும் உறங்கிக்கொண்டிருக்கும். அதன் உயரம் 200 அடி (60 மீட்டர்). அது ஓடுவதற்கு மனிதர்கள், தங்கள் உடல் உழைப்பில் சாவி கொடுக்க வேண்டும். இப்படி ஒரு திட்டம். இதற்கு யார் நிதியுதவி அளிப்பார்கள்? அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் முன்வந்தார். சமீபத்தில், இவர் இந்தக் கடிகாரம் குறித்து வெளியிட்ட வீடியோவில், இதன் கட்டுமான பணிகள் எவ்வாறு நடக்கின்றன என்று விளக்கியுள்ளார். இதைக் கட்டும் தொழிலாளர்கள், தற்போது 500 அடி ஆழம் போய் பேழை ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதுதான் இந்தக் கடிகாரத்தை சுமக்கப் போகிறது. சுண்ணாம்பு மலையை உடைத்து மணிக்கூண்டில் இருப்பதுபோல் சுற்றி வளைந்து செல்லும் படிக்கட்டுகள்  அமைப்பதற்காக சியாட்டிலில் (Seattle) இருந்து நவீன ரோபோக்களை வரவழைத்து இருக்கிறார்கள்.

இந்தக் கடிகாரத்திற்கான மின் நிலையத்தில் 4500 கிலோ எடையுள்ள பொருள் ஒன்றும் இருக்கிறது. வரும் பார்வையாளர்கள், கடிகாரத்திற்குச் சாவி கொடுக்க ஏதுவாக மூன்று பக்கங்கள் கொண்ட நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ஒருவேளை, பல வருடங்கள் இதற்கு யாரும் சாவி கொடுக்க வரவில்லை என்றால்கூட, சூரிய ஒளியைக்கொண்டு இது செயல்படும் என்கிறார்கள். இந்த மின் நிலையத்திற்கு மேலேயே ஓர் அடுக்கு கோபுரம் கட்டப்படுகிறது. இதில் 20 கனரக பற்சக்கரங்கள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் 450 கிலோ இருக்கும். இதை ஜெனீவா சக்கரங்கள் (Geneva Wheels) என்கிறார்கள். இது அங்கிருக்கும் பத்து மணிகளை ஒலிக்கச் செய்யும். பத்தாயிரம் வருடங்களுக்குத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், இது ஒலி ஏற்படுத்தும் என்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள். குக்கூ பறவை மட்டும் நூறு வருடங்களுக்கு ஒரு முறை வெளியே வரும்.

இன்னும் மேலே போனால், ஒரு மிகப் பெரிய பெண்டுலம் ஒன்று இருக்கும். 136 கிலோ இருக்கும் இது டைட்டேனியம் (Titanium) உலோகத்தால் ஆனது. மிக மெதுவாக 10 நொடிகள் கொண்ட சுழற்சி வேகத்தில் இது இயங்கும். இதன் அருகே நிறுவப்படும் டிஸ்ப்ளே சரியான நேரத்தை மக்களுக்குக் காட்டும். இந்தக் கடிகாரம் எப்போதிலிருந்து பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இப்போதே இது கட்டப்பட்டாலும், அடுத்த குக்கூ பறவை வெளியே வந்து ஒலி எழுப்ப இன்னமும் 982 ஆண்டுகள் இருக்கின்றன.

எல்லாம் சரி! எதற்காக இந்த முயற்சி? தொலைநோக்கு பார்வை, எதிர்காலம் குறித்த சிந்தனை, அச்சம் மனிதனுக்கு எப்போதும் இருக்க வேண்டும். அதை மனித இனம் இருக்கும் வரை நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிகாரம் நிறுவப்படுகிறது என்கிறார் டேனி ஹில்லிஸ். நல்ல எண்ணம்தான். வாழ்த்துகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்