‘மிஸ் யூ டூ வாசகர்களே..!’ - சுஜாதா சொன்ன தலைப்பு #RememberingSujatha | This might be the title suggested by sujatha

வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (27/02/2018)

கடைசி தொடர்பு:14:44 (27/02/2018)

‘மிஸ் யூ டூ வாசகர்களே..!’ - சுஜாதா சொன்ன தலைப்பு #RememberingSujatha

சுஜாதா!  ​​‘இணையம் ​ரொம்பவும் மிஸ் செய்கிற எழுத்தாளர்; இந்த ட்விட்டர் யுகத்தில் இவர் இருந்திருக்கலாம்; ஃபேஸ்புக்கில் இவர் இருந்திருந்தால் என்னென்ன எழுதியிருப்பார்; ஷங்கர் - மணிரத்னம் மிஸ் செய்கிற எழுத்தாளர்....’ என்னென்ன எழுதியாயிற்று இவரைப் பற்றி. இதோ... இன்றோடு பத்தாண்டுகள் கடந்துவிட்டன இவர் நம்மை விட்டுச் சென்று.  


Sujatha Vikatan


ஓர் எழுத்தாளராகப் பெயரும் பெரும் புகழும் பெற வேண்டுமென்பதெல்லாம் சுஜாதாவின் நோக்கமாக இருந்ததில்லை. அவருக்கு எல்லாமே அவர் ‘மனப்படி’ அமைந்தன. தனக்குப் பிடித்ததைச் செய்கிறவராகத்தான் அவர் இருந்தார். படிப்பு, கிரிக்கெட், அரசு வேலை, ‘பெல்’ நிறுவன வேலை, எழுத்து, சினிமா என்று எல்லாமே அதனதன் போக்கில் போகவிட்டு, ரசித்து ஈடுபட்டு செய்துகொண்டிருந்தார். எங்கும் எதைப் பற்றிய பெரும்குறைகளை அவர் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. அப்படியே சிலவற்றிலிருந்தாலும், சுய பகடியுடனும், எளிமையான மனதுடனும் அதைக் கடந்து சென்றவராகத்தான் இருந்தார். 

இவரளவுக்கு, சமகால எழுத்தாளர்களை, கவிஞர்களை அறிமுகப்படுத்தியவர்கள் என்னளவில் சொற்பமே. இவர் ஒருவரை அறிமுகப்படுத்தி ஒருவரி, ஒரு பத்தி எழுதிவிட்டாலே அது ஒரு ஐ.எஸ்.ஐ முத்திரை. அப்படித்தான் அவரது தெரிவுகளும் இருந்தன. சில இலக்கியவாதிகள் இவருக்கு வேறுமுகம் காட்டினாலும், ‘லைட் ரீடிங்க்பா இவரு’ என்று சிலர் சொன்னாலும் இவர் படித்துப் பகிர்ந்துகொண்டவைகள் மூலம் நிறைய தெரிந்துகொண்டவர்கள் இருந்தார்கள். இவரது பரிந்துரைகளை நாம் ரசிக்கக்காரணம், இவரது அறிவல்ல.. இவரது உணர்வு. உணர்வுபூர்வமாக இவர் ரசிப்பதைத்தான் நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதனாலேயே நமக்கும் அவை பிடித்துப் போயின.

எதிலும் அவருக்குக் குறைகள் இருக்கவில்லை என்பதற்குக் காரணம், அவையவற்றை (இப்படி ஒரு வார்த்தை இருக்கா வாத்யாரே?) அவையவையின்  (மறுபடி அதே கேள்வி) போக்கில் அவர் புரிந்துகொண்டதுதான். தன் நாவல் சினிமாவாகும்போது அது சின்னாபின்னமாவதை அருகிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தார். ‘அது வேறு உலகம். அங்கே டைரக்டர்கள்தான் மகாவிஷ்ணுவுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்தவர்கள்’ என்கிறார். அந்தப் புரிதல் இருந்ததால்தான் அத்தனை காலமும் தாக்குப்பிடிக்க முடிந்தது இவரால். எத்தனை காலம்? 

சினிமாவாக்கப்பட்ட இவரது முதல் நாவல் காயத்ரி. 1977. அதைப் பற்றிக்குறிப்பிடும்போதே, ‘ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும்’ என்கிறார். இவர் கடைசியாகப் பணியாற்றிய படம், எந்திரன். அப்போது ரஜினிகாந்த் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. எத்தனை காலம் இவர் தாக்குப்பிடித்தார் என்பதை இதைவிட  சுருக்கமாக  சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 

எல்லாவற்றிலும் துல்லியம் தேடி, சிரமப்படுவதில் சுஜாதாவுக்கு உடன்பாடில்லை. கதை முக்கியம் என்பார். அது சொல்லும் ஆதாரக்கருத்து போய்ச்சேர வேண்டும் என்பார். ‘எழுத்தாளர் பால் கலிக்கோ (Paul Gallico) குத்துச்சண்டை பற்றிய சிறுகதை எழுத நினைத்து, நேரடி அனுபவத்துக்காக சாம்பியன் ஒருவனிடம், ‘முகத்தில் குத்தினால் எப்படி இருக்கும்?’ என்று கேட்டார். அவர், ‘வலிக்கும்’ என்று சொல்வதற்குப் பதிலாக, முகத்தில் குத்துவிட்டாராம். சரியான குத்து. எழுத்தாளர் மல்லாக்க விழுந்து, தாடை உடைந்து, பல் சிதறி.. இந்த அளவுக்கு வாழ்க்கையைப் பிரதிபலிக்க விரும்பவில்லை நான்’ என்கிறார்.

சுஜாதாசுவாரஸ்ய எழுத்துக்கு இவரே எனக்கு ஆசான். நகைச்சுவை ஆனாலும் சரி, மரணமானாலும் சரி.. இவரது நடையில் படிப்பதென்றால் இருட்டுக்கடை அல்வாதான். வழுக்கிக்கொண்டு வயிற்றுக்குள்... ஸாரி.. மனதுக்குள் சென்றுவிடும். ‘தேர்ந்த நடிப்பில் அந்த நடிகரும், அவர் மேல் தீராத காதலில் அந்த  நடிகையும் திரை முழுவதும் நடிப்பென்ற பெயரில் வியாபித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க, நிச்சயம் இதில் இயக்குநரின் கைவண்ணம் என்னவென்று நாம் நினைக்கும்போதுதான், எங்கிருந்தோ வரும் வில்லன்...’ என்று இவரெழுத்தில் மூச்சடக்கிப் படிக்கவே எந்த வரியும் இருக்காது. ‘படம் தேறாது’ என்றுவிடுவார். எல்லாமே ‘அண்ணனுக்கொரு ஊத்தாப்பம்’தான். தவளைப்பாய்ச்சல் நடை என்பார்கள். அப்படி!

எக்கச்சக்கமாக எழுதித்தள்ளுவார். ஒரே சமயத்தில் ஏழு வாரப்பத்திரிகைகளில் தொடர்கதைகள். ‘வாரத்துக்கு 28 பக்கம் எழுத முடியாதா?’ என்பார். (நாம் 28 பக்கங்களாவாது படிக்கிறோமா?) அப்படி நிறைய தொடர்கள் எழுதும்போது, அடுத்த அத்தியாயம் எழுத வேண்டுமென்றால், முதல் அத்தியாயத்தில் கடைசி வரியை மட்டும் படித்துவிட்டு, தொடர்ந்து எழுதுவார். திரும்பி வந்த கதைகளைக் கிழித்துப்போட்டுவிடுவார். மொழிகள் பற்றிக்கேட்டால், ‘இந்தி எழுதப்படிக்கத் தெரியும். ஆங்கிலம், கன்னடம் தெரியும். தமிழ் சுமாராகத் தெரியும்’ என்பார். இவர் பிஸியாக இருந்த காலத்தில் - ஒரு நடிகருக்கு இருந்ததைப்போல - இரண்டு வருடங்கள் முன்னதாக இவரது கதை கேட்டுக்  காத்திருந்த பத்திரிகைகள்  உண்டு. 
 
தீர்க்கதரிசி. செய்திச்சேனல்கள் வருவதற்கெல்லாம் முன்னோடியாக, என்.டி.டி.வி, வாராவாரம் செய்திப்படம் தயாரித்து வீடியோ கேசட்டாக விற்பார்கள். அப்படி ஒரு கேசட்டில் பார்த்த காட்சியை மணிரத்னத்தோடு பகிர்ந்துகொள்கிறார். அதுதான் ரோஜாவில் தீவிரவாதிகள் பற்றவைக்க.. அரவிந்த்சாமி, தேசியக்கொடியை பாய்ந்து அணைத்த அந்தக் காட்சி. கே.கே.நகரில், சிறிய ஸ்டுடியோவில் ‘சின்னச்சின்ன ஆசை’யைப் போட்டுக்காட்டி, மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தபோது,   சுஜாதா ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொன்னது: ‘புகழுக்குத் தயாராகுங்கள்!’ 

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே என்ன தலைப்பு வைக்கலாம் என்று உள்ளுணர்வு கேட்டுக்கொண்டிருக்கிறது. நள்ளிரவு. கொஞ்சம் மெதுவாக, தூரத்தில் கேட்பது போல அவர்குரல் கேட்கிறது.

“வாத்யாரே... நீங்களா? நம்ப மாட்டாங்களே?”

“நானே நம்ப மாட்டேன். அதைவிடு. வழக்கமான ஜல்லிதானே? என்ன புதுசா எழுதியிருக்கப்போற?”

“அதை விடுங்க வாத்யாரே.. நாட்டு நடப்பெல்லாம் கேள்விப்பட்டீங்களா?”

“டேன்”

“கேரளாவில மது...”

“இங்கயே வந்துட்டானே... உங்களுக்கெல்ல்லாம் அருகதை இல்லடா.. அவனை வெச்சுக்க. அவன் வந்ததுமே, பக்கத்துல இருந்த வாலி சொன்னார்.. ‘இவன் பெயர்தான் மது. ஆனால் போதையிலிருந்து அவர்கள்தான்’ அப்டினு. சரியாத்தான் இருக்கு.”

“கமல் கட்சி ஆரம்பிச்சுட்டார்”

”அதும் கேள்விப்பட்டேன். நான் இருந்திருந்தா என்னையும் வந்து பார்த்திருப்பாரு..”

“ஆலோசனைக்கா?”

“மய்யம்னு எழுதறது சரியானு கேட்க”

“நீங்க என்ன சொல்லிருப்பீங்க?”

” ‘மையமா’ புன்னகைச்சிருப்பேன்”

“ரஜினி?” 

“காலாவுக்கு வாழ்த்துகள்”

“வாத்யாரே... ரஜினி அரசியலைப் பத்தி சொல்லுங்கண்ணேன்...”

“இரஞ்சித்கூட காலா பண்றாரே... அதுல அரசியல் இருக்காதுன்றியா?” 


“ஃபேஸ்புக்... ட்விட்டர்”

”உடனடி உணர்ச்சிகளைக் கொட்டும் கழிப்பிடங்கள்”

“தேவையில்லைன்றீங்களா?”

“மலச்சிக்கல் கெடுதி. அதனால இதெல்லாம் தேவைதான். விடு”

“அந்தச் சிலையைப் பார்த்தீங்களா?”

“இப்பதான் நாகேஷ் சொல்லிட்டிருந்தார். ‘சிற்பிட்ட குடுங்கன்னிருப்பாங்க. மியூசிக் டைரக்டர் சிற்பிட்ட கொடுத்திருப்பாங்க’ன்னு....”

“நாங்க உங்களை ரொம்ப மிஸ் பண்றோம். நீங்க யாரை மிஸ் பண்றீங்க?”

“கண்டதையும் எழுதிட்டு ‘உண்மையான தமிழன்னா ஷேர் பண்ணு’னு சொல்றானே... அவனுகளை ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரம் அவங்களை இங்க அனுப்பி வை.”

“இந்தக் கட்டுரைக்கு ஒரு நல்ல டைட்டில் சொல்லுங்களேன்”

“நீ என்ன வைக்கலாம்னு இருக்க?”

“மிஸ் யூ வாத்யாரே!”

”மிஸ் யூ டூ வாசகர்களே!” 

--

 

  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close