வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (28/02/2018)

கடைசி தொடர்பு:17:57 (28/02/2018)

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மரங்கள் அழிக்கப்படுகின்றனவா?!

உலகம் முழுவதும் உள்ள காடுகள் மற்றும் மரங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன; அரசும், பல தனியார் அமைப்புகளும் ஏராளமான முயற்சிகள் எடுத்துவருகின்றன. இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் மரங்கள் அழிக்கப்பட்டுவருவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.  நீர் ஆதாரம் நாளுக்குநாள் மோசமாகிவருவதால் மரங்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இதன் காரணமாகவே திருமண வீடுகளில் மரக்கன்றுகள் கொடுத்தல், தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடுதல் உள்ளிட்ட சிறிய அளவிலான முன்னெடுப்புகளும் நடைபெறுகின்றன. இயற்கையின் அவசியத்தை வலியுறுத்தி, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர் அமைப்புகள் மரங்களை நட்டு வளர்க்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி வளாகத்தில்  பழைமையான மரங்கள் வெட்டப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி வளாகம், 100 வருடங்கள் பழைமையானது. இங்குதான் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இங்கு பல்வேறு துறைகளில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். இந்தக் கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பு, இயற்கையோடு ஒன்றியதாக அமைந்திருக்கும். இங்கு உள்ள பழைமையான மரங்கள், செடி, கொடிகளால் அந்தப் பகுதியே சிறு வனம்போல காட்சியளிக்கும். அங்கு பட்டாம்பூச்சிகள், சிறு வண்டுகள், அணில், தட்டான்கள் என 20-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் பயின்ற மாணவி ஹர்ஷினி, அண்ணா பல்கலைக்கழகச் சூழல் குறித்து ஓர் ஆவணப்படம் எடுத்துள்ளார். அதில் கல்லூரியில் உள்ள மரங்கள், அங்கு வாழும் உயிரினங்கள், அதன் சுற்றுச்சூழல் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மரங்கள் அழிக்கப்படுவது குறித்து ஹர்ஷினியிடம் பேசினோம்...

``நான் கல்லூரியில் படித்தபோதே சில மரங்கள் வெட்டப்படுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த மரங்கள் வெட்டாமல் இருப்பதற்கான காரணங்கள் இருந்தும், அவை அலட்சியப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, மெட்ராஸ் யுனிவர்சிட்டி வளாகத்தையும், கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தையும் பிரிக்கும் சுவர் கட்டுவதற்காக பெரிய மரம் ஒன்று வெட்டப்பட்டது.

அந்த மரத்தை வெட்டாமல் ஒருசில அடிகள் தள்ளிகூட அந்தச் சுவரைக் கட்டியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் மரத்தை வெட்டி சுவர் எழுப்பியிருக்கிறார்கள். அதேபோல் நான் கல்லூரியில் படிக்கத் தொடங்கியபோது காணப்பட்ட மான்களின் எண்ணிக்கை, அடுத்தடுத்த வருடங்களில் குறைய ஆரம்பித்தன. அங்கு இருந்த புற்கள் அழிக்கப்பட்டதே அதற்குக் காரணம். கல்லூரியில் உள்ள மரங்கள் மற்றும் உயிரினங்கள் குறித்து நானும் எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஆவணப்படுத்தினோம். அது புத்தகமாக வெளிவர, போதிய உதவிகள் கிடைக்காததால் வெளியிடப்படாமல் உள்ளது. கல்லூரியில் உள்ள இயக்கங்கள் சார்பில் மரங்களில் ஆணி அடிப்பதற்குத் தடை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புதிதாக நடப்பட்ட மரங்கள் சரியாகப் பராமரிக்க முடியாத காரணத்தால் மரம் நடுவது நிறுத்தப்பட்டது. கல்லூரி வளர்ச்சிக்குக் கட்டடங்கள் தேவைதான். அதேசமயம், மரங்கள் அழிக்கப்படுவதையும் நிறுத்தும் மாற்று நடவடிக்கைகளும் அவசியமே. கல்லூரியில் உள்ள மரங்கள் மற்றும் உயிரினங்கள் குறித்த முறையான தரவுகள் தயாரிக்க வேண்டும்" என்றார் ஆதங்கத்தோடு.

அண்ணா பல்கலைக்கழகம்

இது சம்பந்தமாக, அண்ணா பல்கலைக்கழக `எஸ்டேட் ஆபீஸர்' ஸ்டாலினிடம் ``மரங்கள் வெட்டப்படுவது உண்மையா?'' என்று கேட்டோம்...

```வர்தா' புயலின்போதே கல்லூரி வளாகத்தில் இருந்த 200 மரங்கள் விழுந்துவிட்டன. அதற்குப் பதிலாக 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கல்லூரி வளாகத்தில் ஒருபோதும் மரங்கள் வெட்டப்படுவதில்லை. மெட்ராஸ் யுனிவர்சிட்டிக்கும் எங்கள் கல்லூரிக்குமான சுவர் எழுப்பப்பட்டபோதுகூட மரங்கள் வெட்டப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், கட்டடம் கட்டுவதற்கான  திட்டத்தை செயல்படுத்தும்போது மரம் வெட்டுப்படும் சூழ்நிலை வந்தால் திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து மரத்தைக் காப்பாற்றியுள்ளோம்'' என்றார்.

``சேட்டிலைட் பிக்சரில் மரங்களின் அளவு குறைந்துள்ளதாகக் காட்டுகிறதே?'' என்ற கேள்வியை முன்வைத்தோம்.

``அது `வர்தா' புயலின்போது எடுத்தாக இருக்கும். தற்போது  அப்படி இருக்காது'' என்றார்.

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

புவி வெப்பமயமாதல், குடிநீர் பற்றாக்குறை என மனித சமூகம் சவாலான ஓர் எதிர்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இயற்கை மட்டும்தான் மனித சமூக நீட்சிக்கு வழிவகை செய்யும் என்ற புரிதலோடு இயற்கையோடு இணைவதுதான் நமது தலையாயப் பணி. மரங்களை வளர்ப்பதன் அவசியத்தை, அழித்த மரங்களின் மீது நின்று சொல்வது சரியானதாகாது.


டிரெண்டிங் @ விகடன்