வெளியிடப்பட்ட நேரம்: 21:27 (27/02/2018)

கடைசி தொடர்பு:21:27 (27/02/2018)

”இதுதான் குப்பைகளைச் சமாளிக்க ஒரே வழி..!” - மயிலாப்பூரில் களைகட்டிய குப்பைத் திருவிழா

டந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25, 2018) மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில், குப்பை மேட்டர்ஸ் (பதினெட்டு அமைப்புகள் ஒன்று சேர்ந்து தொடங்கிய ஆரம்ப முயற்சி)  என்கிற குழு, திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புஉணர்வுக்காக “குப்பைத் திருவிழா” எனும் பெயரில் ஒரு திருவிழாவை நடத்தியது. "பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப்பொருளாக எதை பயன்படுத்தலாம்? ஒரு பொருளைக் கழிவு எனத் தூக்கிப்போடாமல் அதனை எந்த அளவு பழுது பார்த்துப் பயன்படுத்தலாம்?" என்பது போன்ற வழிமுறைகளைச் சொல்லும் பயிற்சிக்கூடமாகவும், பிளாஸ்டிக்கிற்கு பதில் வேறு மாற்றுப்பொருளில் செய்யப்படுகிற நம் அன்றாட தேவைக்குரிய பொருள்கள் கிடைக்கும் சந்தையாகவும் அது இருந்தது. இயற்கையான முறையில் ஒரே ஆண்டில் பதினைந்து அடி அளவுக்கு மரத்தை வளர வைக்கும் விவசாய முறைகள், இயற்கை விதைகள் எனச் சுற்றுச்சூழலுக்கு நன்மை மட்டுமே தருபவற்றை பற்றியும், சுற்றுச்சூழலுக்குக் கேடு மட்டுமே தருபவற்றை பற்றியும் சொல்லும் இடமாக அமைந்தது இந்தக் குப்பைத் திருவிழா.

குப்பைத் திருவிழா

இந்தக் குப்பைத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான க்ரிபா இராமச்சந்திரனிடம் பேசினோம்...    

“‘குப்பை மேட்டர்ஸ்’ என்கிற இந்த ஸ்டார்ட்அப்பை 2017 அக்டோபர் இல் தொடங்கினோம். இதன் நோக்கம் என்னவென்றால் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புஉணர்வை மக்களிடம் கொண்டு செல்வது. பிற ஊர்களை ஒப்பிடும்போது குறிப்பாக சென்னை நகரத்தில் தனிநபர் கழிவுகள் மிக அதிகம், நாளொன்றுக்கு 0.71 கிலோகிராம் தனி நபர் கழிவுகள் உற்பத்தியாகிறது. இதற்கு மோசமான நடைமுறைகள் காரணம் என்றோ, கழிவை நீக்குவதில் உள்ள பிரச்னைகள் என்றோ, மாநகராட்சிதான் இதைக் கையில் எடுக்க வேண்டும் என்றோ, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ, தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது, இதற்கு ஒரே காரணம் பொது மக்களின் பங்களிப்பு அதிகம் இல்லாததுதான். 

க்ரிபா ராமசந்திரன்

விழிப்புஉணர்வு மக்களிடம் இல்லையென்பது ஒருபுறம் இருந்தாலும், இதைப் பற்றி அறிந்தவர்கள் கூட இதை ஒரு பெரிய விஷயமாகப் பொருட்படுத்துவதில்லை. கழிவுகள் பற்றிய விழிப்புஉணர்வு கொண்டவர்களில் எத்தனை பேர் அதனைச் சீர் செய்ய முன்வந்து அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்? மிகவும் குறைவானவர்களே... இதற்கு ஒரே தீர்வு பொது மக்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதே. பொது மக்களின் பங்களிப்பு அதிகரிக்காவிட்டால் திடக்கழிவு மேலாண்மையைச் சீர்செய்யவே முடியாது. குப்பைகளைப் பிரிக்கும் நடைமுறைகள் மட்டுமில்லாமல், கழிவு நீக்கம் செய்வதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டதே இந்த ‘குப்பை மேட்டர்ஸ்’.

குப்பைத் திருவிழா

‘Citizen Consumers and Civic Action Group’ என்கிற எங்களுடைய அமைப்பு ‘குப்பை மேட்டர்ஸ்’ எனும் யோசனையை முன்வைத்தபோது பதினெட்டு அரசு சாரா அமைப்புகள் எங்களுடன் ஆர்வத்தோடு இணைந்துகொண்டார்கள். சில அமைப்புகள், "ஊழியர்களின் உரிமை என்ன? அவர்கள் என்ன செய்ய முடியும்?" போன்ற உரிமை சார்ந்த விஷயங்களில் தங்களின் பங்களிப்பை ஆற்றி வருகின்றன. இன்னும் சில, இந்தச் செயல்பாடுகளை மாநகராட்சி எடுத்துச் செய்தால் எப்படி இருக்கும் என்றும் தனியார்மயம் ஆக்கினால் எப்படி இருக்கும் என்றும், இதைப் பரவலாக்குவதில் ஆர்வத்தோடு செயல்படுகின்றன. மற்ற அமைப்புகள், எல்லா விதமான செயல்பாடுகளிலும் பங்கு கொள்கிறது. ஆக மொத்தம் இது பொது மக்களுக்காக பொது மக்களால் நடத்தப்படக் கூடிய ஓர் இயக்கமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

குப்பைத் திருவிழாஇதை மக்களிடம் கொண்டு செல்கையில் "வாருங்கள், திடக்கழிவு மேலாண்மை பற்றி சொற்பொழிவு ஒன்று நடத்துகிறோம்" என்றால் எத்தனை பேர் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு அதுவும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று வருவார்கள்? அதனால்தான் இதைத் திருவிழா என்ற வகையில் கொண்டு சேர்க்கலாம் என்று முடிவெடுத்தோம். அதுவும் இதைப் பூங்கா போன்ற பொதுஇடத்தில் வைத்தால், நடைப்பயிற்சிக்கு வருபவர்கள், ஓய்வெடுக்க வருபவர்கள் என நிறையப் பேருக்கு இது போய் சேரும். எனவே, இதை எவ்வாறு மக்களை ஈர்க்கும் வகையில் நடத்தலாம் என யோசித்து, கடைகள் மட்டுமன்றி நாம் உபயோகிக்கும் பொருள் பழுது அடைந்தால் மென்மேலும் பொருள் வாங்காமல் இருப்பதையே எப்படிப் பழுது சரி பார்த்து உபயோகிப்பது போன்ற பயிற்சி வகுப்புகளும் இங்கே நடத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் என்று எடுத்துக்கொண்டால் அதை முழுவதுமாக மறுசுழற்சி செய்ய முடியாது, செய்தாலும் இருந்ததை விடக் கீழ்த்தரத்தில்தான் கிடைக்கும். பிளாஸ்டிக்கில் சேமித்து வைத்துச் சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதுமே கேடு விளைவிக்கும். அதிலும் அதன் தரம் குறைவானது என்றால், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிக அதிகம். அதனால், எவ்வாறு பிளாஸ்டிக் உபயோகிப்பதைக் குறைப்பது, பிளாஸ்டிகிற்கு பதிலாக வேறு எதை நாம் பயன்படுத்தலாம்,  அதன் வழிவகைகள் என்பது குறித்த பயிற்சி வகுப்புகளையும் இணைத்துக் கொண்டோம். இதில் நாங்கள் எதுவும் புது முறையைக் கண்டுபிடித்து கையாளவில்லை. ஏற்கெனவே உள்ள விஷயத்தை, நாம் மறந்து கடைப்பிடிக்காமல் போனவற்றை ஞாபகப்படுத்துகிறோம் அவ்வளவுதான்.

திடக்கழிவுகளில் முக்கியமான பங்கு வகிப்பவை இந்த சானிட்டரி நாப்கின்கள். ஒரு பெண் தன் வாழ்நாளில் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் மூலம் மொத்தம் 150 கிலோகிராம் கழிவுகள் உற்பத்தியாகிறது. ஒரு நாப்கின் மக்குவதற்கு 800 வருடங்கள் ஆகும். நாப்கின்களை எரிப்பதினால் டையாக்சின் (dioxin), ஃபியுரான் (furan) போன்ற ஆபத்தான வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. இதிலும் அதிக உறிஞ்சும் தன்மை கொண்ட நாப்கின் என்று சொல்லி அதிகப்படியான வேதிப்பொருள்களை அதில் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் இதை பயன்படுத்தும் பெண்களுக்கு உடல் ரீதியாக அதிக பாதிப்புகள் ஏற்படும். சானிட்டரி நாப்கின்களுக்குப் பதிலாக துணியில் செய்யப்பட்ட பேடுகளை பயன்படுத்தலாம். இவற்றை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். நாம் உடுத்தும் ஆடை போல எத்தனை முறை வேண்டுமானாலும் துவைத்து உடுத்திக்கொள்ளலாம். ஐந்து ஆண்டுகள் வரை இதன் ஆயுள் இருக்கும்.

பங்கேற்ற மாணவிகள்

இங்கே கடைகளுக்கு கூட நாங்கள் மரத்தினால் ஆன மேசை மற்றும் நாற்காலியைத்தான் பயன்படுகிறோம். மேலும் மேலே கடைகள் புடவை மூலம்தான் மூடப்படுகின்றன. இந்தத் திருவிழா முடிந்த பின்னர் இவை யாவும் கழிவுகளாக ஆகாது. “கூஞ்” என்ற அமைப்பு இவற்றை எடுத்துக்கொண்டு, தேவையுள்ளோர்களுக்குக் கொடுத்துவிடும். இதைப் பற்றிய அதிகப்படியான விழிப்புஉணர்வு ஏற்படுத்தி, பொது மக்கள் பங்களிப்பை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். நாங்கள் செய்யும் இச்செயலைப் பார்த்து எல்லோரும் அவரவர் அக்கம்பக்கத்தில் இப்படிப்பட்ட முயற்சியைக் கையாண்டால்தான் திடக்கழிவுகளை முடிந்தவரை குறைக்க முடியும்” என்றார்.

ஊர்கூடிதானே தேர் இழுக்க வேண்டும்?


டிரெண்டிங் @ விகடன்