வெளியிடப்பட்ட நேரம்: 08:33 (28/02/2018)

கடைசி தொடர்பு:08:41 (28/02/2018)

வாழ்க்கை, காதோடு பேசுவதைக் கவனித்திருக்கிறீர்களா? - சிறுவன் பாடமெடுத்த கதை! #FeelGoodStory

கதை

`நாம் நாள்களை நினைவில் வைத்திருப்பதில்லை; தருணங்களைத்தான் நினைவில் வைத்திருக்கிறோம்’ - அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் இத்தாலியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் செசாரே பாவேஸே (Cesare Pavese). ஆனால், நம்மில் பலர் அப்படிப்பட்ட வாழ்வின் மிக முக்கியமான அனுபவங்களை, மகத்தான தருணங்களை நழுவவிட்டு விடுகிறோம். `வேகம், வேகம், மேலும் வேகம்...’ என்கிற எழுதப்படாத மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு, விரைந்துகொண்டேயிருக்கிறோம். அந்த வேகத்தில், வாழ்க்கை நம் ஆன்மாவிடம் முணுமுணுப்பதை, இதயத்துடன் பேசுவதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அப்படிக் கவனிக்காமல் விடும்போது சில நேரங்களில் நம் மேல் கல் ஒன்று வீசியெறியப்படலாம். ஆக, நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, வாழ்க்கை நம்மோடு பேச முற்படும்போது, அதற்கு செவி கொடுப்பது அல்லது நம் மேல் கல் வந்து விழும்வரை காத்திருப்பது. இந்த யதார்த்தத்தை எடுத்துச் சொல்லும் கதை இது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரம், மாலை நேரம். அந்த இளைஞன் ஓர் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பிலிருப்பவன். புதிதாக ஒரு கார் வாங்கியிருந்தான். அலுவலகம் முடிந்து, திரும்பிக்கொண்டிருந்தான். அன்று இரவு ஒரு பார்ட்டிக்கு அவன் போகவேண்டியிருந்தது. காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு பெரிய கட்டடத்தின் பார்க்கிங் பகுதியில் ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதையும், அவன் தன் கையில் எதையோ மறைத்து வைத்திருப்பதையும் பார்த்தான். காரின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்தான். அந்தச் சிறுவனைப் பார்த்தபடியே காரை ஓட்டினான். அந்தச் சிறுவன் நின்றுகொண்டிருக்கும் இடம் நெருங்கியதும், எங்கிருந்தோ ஒரு கல் பறந்து வந்து கார் கண்ணாடியில் விழுந்தது. கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இளைஞன் பதறிப் போனான். அந்தக் கல்லை எறிந்தது அந்தச் சிறுவன்தான் என்பதையும் யூகித்தான்.

கார்

`நல்லவேளை... பதற்றத்தில் கார் எங்கேயாவது மோதியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அந்தக் கல் என் மேல் விழுந்து அடிபட்டிருந்தால்..?’ நினைக்க நினைக்க அந்த இளைஞனுக்குக் கோபம் எழுந்தது. அந்தச் சிறுவனை ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. காரைப் பின்னோக்கிச் செலுத்தி, அந்தச் சிறுவன் நின்றிருந்த கட்டடத்துக்கு அருகே வந்தான். காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, அவசரமாக இறங்கினான். சிறுவனைத் தேடினான். சிறுவன் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான். இளைஞன் ஓடிப் போய் அவனைப் பிடித்தான்.

``என்னடா இது... எதுக்கு என் கார் மேல கல்விட்டு எறிஞ்சே... ஏன் அப்படி செஞ்சே... சொல்லு?’’ என்றபடி அடிக்கக் கையை ஓங்கினான்.

சிறுவன் பயந்துபோய் இளைஞனைப் பார்த்தான். அவன் கை விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. அமைதியான, கெஞ்சும் குரலில் இப்படிச் சொன்னான்... ``மன்னிச்சுக்கங்க சார்... தெரியாம பன்ணிட்டேன்... எனக்கு வேற வழி தெரியலை. இந்தப் பக்கமா போன எத்தனையோ கார்களைக் கை நீட்டி நிறுத்திப் பார்த்துட்டேன், சத்தம் போட்டுக் கூப்பிட்டுப் பார்த்துட்டேன். ஒருத்தர்கூட காரை நிறுத்தலை. அதான் என்ன செய்யறதுனு தெரியாம கல்லை எடுத்து வீசிட்டேன்...’’

இப்போது சிறுவனின் கண்களில் வழிந்த கண்ணீர், அவன் கன்னங்களில் இறங்கி வழிந்தது. அவன், அந்த பார்க்கிங் பகுதியில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினான்... ``அங்கே... அங்கே... என் அண்ணன் கீழே விழுந்துட்டான். அவனுக்கு நல்லா அடிபட்டிருக்கு... என்னால அவனைத் தூக்க முடியலை... அதான் கல்லை எடுத்து எறிஞ்சுட்டேன்...’’ என்ற சிறுவன் தேம்பியபடியே சொன்னான்... ``கொஞ்சம் உதவி செய்ங்க சார்... கீழே விழுந்ததுல அவனுக்கு நல்ல காயம்... ரொம்ப கனமா வேற இருக்கான்...’’

சிறுவன்

இளைஞன் தன்னை நிதானப்படுத்திக்கொண்டான். சிறுவன் காட்டிய திசையில் அவனுடன் நடந்தான். அங்கே ஒரு சக்கர நாற்காலி ஒருபுறம் கிடக்க, மற்றொரு புறம், சிறுவனின் அண்ணன் கிடந்தான். கொஞ்சம் குண்டான உடல்வாகுகொண்ட மாற்றுத்திறனாளிச் சிறுவன். அந்தக் கட்டடத்தின் சற்று உயரமான விளிம்பில் அவன் தன் வீல்சேரில் போயிருந்தபோது விழுந்துவிட்டதாகச் சிறுவன் சொன்னான்... அந்த இடத்தையும் காட்டினான்.

இளைஞன், சிறுவனின் அண்ணனைத் தூக்கினான். சக்கர நாற்காலியில் அவனை உட்காரவைத்தான். தன் கார் நிற்குமிடத்துக்கு ஓடி, அவன் அதில் வைத்திருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தான். சிறுவனின் அண்ணனுக்கு ஏற்பட்டிருந்த காயங்களிலும், சிராய்ப்பிலும் மருந்து தடவினான்.

``இது ஃபர்ஸ்ட் எய்டுதான் தெரியுமில்லை... வீட்டுக்குப் போனதும் உன் அப்பாகிட்ட சொல்லி, இவனை ஏதாவது ஒரு கிளினிக்குக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லு! சரி, உங்க வீடு எங்கே இருக்கு/’’

``பக்கத்துலதான் சார்... இனி நாங்க போயிடுவோம். ரொம்ப தேங்க்ஸ் சார்... காட் பிளஸ் யூ!’’ என்ற சிறுவன், அண்ணன் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை மெதுவாகத் தள்ளிக்கொண்டு போனான்.

மாற்றுத்திறனாளிச் சிறுவன்

இளைஞன் காருக்குத் திரும்பினான். காருக்கு பலமாகத்தான் சேதம் ஏற்பட்டிருந்தது. அவன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அதைச் சரிசெய்துவிடலாம். ஒரு சிறுவனுக்கு உதவி செய்ய முடிந்ததே என்கிற எண்ணம் அவனுக்கு ஒரு நிறைவைத் தந்திருந்தது. அதோடு, அன்றைக்குக் கற்றுக்கொண்ட பாடத்தை மட்டும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தான்... `வாழ்க்கை முழுக்க வேகமெடுத்து ஓடிக்கொண்டே இருக்கக் கூடாது. தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக யாராவது தன் மீது கல்லை எடுத்து வீசினாலும் வீசுவார்கள்!’

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்