வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (01/03/2018)

கடைசி தொடர்பு:15:32 (01/03/2018)

கடும் புயல்... குறுகலான திசை... கடலில் கப்பல்கள் எப்படித் தாக்குப்பிடிக்கின்றன?

ப்பல்கள் மனித வரலாற்றுடன் ஒன்றாகப் பின்னிப் பிணைந்தவை. போக்குவரத்து, வணிகம், ராணுவம் போன்ற அமைப்புகளில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக கப்பல் போக்குவரத்து மாறிவிட்டது. கப்பல்கள் வரலாற்றுக் கண்டுபிடிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இப்போது வரை இருந்து வருகின்றன. கடல்வழிக் கப்பல் பயணத்தின் போதுதான் திசைக்காட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. கப்பல்கள் அடிமைத்துவம், காலனித்துவம் ஆகியவற்றிற்காகவும் பயன்படுத்தப்பட்டன. உலக நாடுகள் பலவும் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் அதிகமாகக் கப்பல்களையே சார்ந்து இருக்கின்றன. கடல் போக்குவரத்திற்கு இன்றியமையாத கருவியாக விளங்கும் கப்பல்களின் தொழில்நுட்பம் பற்றி சிலருக்குத் தெரிந்திருந்தாலும், தெரியாத சில தகவல்களும் இருக்கத்தான் செய்கின்றன. 

கடல் ராட்சஷன்

ஒரு கூழாங்கல்லைத் தண்ணீரில் போட்டாலே மூழ்கிவிடும்போது, பல ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல் மூழ்குவதில்லை. இதற்குக் காரணம் ஆர்கிமிடிஸ் தத்துவம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஒரு கப்பல் நின்றுகொண்டிருக்கும்போது அதன் இரண்டு பக்கங்களிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருப்பதை பெரும்பாலோனோர் பார்த்திருப்போம். இப்படி விழும் தண்ணீருக்கு 'பேலன்ஸ்டு வாட்டர்' என்று பெயர். ஒரு கப்பலின் அடிப்பகுதி கடலின் அடியில் மூழ்கி இருக்க வேண்டும். அப்போதுதான் கப்பல் நீரில் நிலையாக மிதக்கும். இதற்குப் பெயர் 'பேலன்ஸ்டு கண்டிசன்'. கப்பல் குறிப்பிட்ட அளவு நீரில் மூழ்கி இருக்கவில்லை என்றால் கப்பல் சம நிலையற்றதாக மிதந்து பக்கவாட்டில் சாய்ந்து மூழ்கிவிடும். சரக்கு கப்பல் அன்லோடிங் வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது கப்பலின் எடை குறைகிறது. இதனால் கப்பலின் அடிப்பகுதி நீரில் மூழ்கி இருக்காமல் வெளியே வரத் தொடங்கும். கப்பலின் அடிப்பகுதி வெளியில் வராமல் இருப்பதற்காகவும், கப்பலின் பராமரிப்புப் பணிகளுக்காகவும் கப்பலுக்கு உள்ளே இருக்கும் பேலன்ஸ்டு டேங்குகளில் கடல் தண்ணீரை நிரப்பி விடுகின்றனர். அதனால்தான் கப்பலில் எடை ஏற்றும்போது சிறிது சிறிதாகத் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

கடல்

ராட்சத இஞ்சினாக இருந்தாலும் மற்ற வாகனங்களைக் காட்டிலும் கப்பல் மெதுவாகத்தான் நகரும். மற்ற வாகனங்கள் வேகமாக செல்வதற்குக் காற்றின் விசை காரணமாக அமைகிறது. ஆனால், காற்று அடர்த்தியைவிட அதிகமான அடர்த்தி கொண்ட நீரில் கப்பலின் அடிப்பகுதி மூழ்கி இருப்பதால் குறைந்த வேகத்தில் மட்டுமே கப்பல் செல்ல முடியும். இதனை எளிமையான செய்கையின் மூலம் நாமே தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக நம் கைகளை காற்றில் தட்டுவதற்கும், தண்ணீருக்கடியில் கைகளைத் தட்டுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசம்தான். கார் போன்ற வாகனங்களில் உள்ள ஸ்டீரியங்குகள் கப்பலிலும் உள்ளன. ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்தான். கப்பல் ஸ்டீரியங்கின் உருவம் பெரிய அளவில் இருக்கும். அதனை 'ஹெல்ம்' என அழைப்பர். அதனை இயக்குபவர் பெயர் 'ஹெல்ம்ஸ்மேன்' (helmsman). இது பெரும்பாலும் வட்டவடிவமாகவோ, லிவராகவோ அல்லது ஜாய்ஸ்டிக்காகவோ இருக்கும். அது கப்பலின் இடதுபுறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ அமைந்திருக்கும். சில நேரங்களில் கப்பலின் மையத்திலும் அமைக்கப்பட்டிருக்கும். இது கப்பலின் பின்புறம் அமைந்திருக்கும் காற்றாடி போன்ற ரெட்டர் அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். ஹெல்ம் கருவியைத் திருப்பும்போது அதற்கேற்ப ரெட்டர் பகுதியும் இடது புறமாகவோ அல்லது வலதாகவோ திரும்பும். இதன்படிதான் கப்பல் வேண்டிய திசைகளை நோக்கித் திரும்பிப் பயணிக்கும். 

கடலில் செல்லும் சரக்குக்கப்பல்

கொந்தளிக்கும் புயல்களையும், வலுவாகத் தாக்கும் அலைகளையும் கப்பல்கள் எதிர்கொள்ளும் விதமே அசாத்தியமானது. புயல்களால் உருவாகும் அலைகள் கப்பலைத் தாக்க வரும்போது கப்பலின் முகப்புப் பகுதி புயல் வரும் திசையை நோக்கித் திருப்பப்படும். இந்த முகப்புப்பகுதி எதிர்வரும் புயல்களை கிழித்துக்கொண்டு சமாளித்து தன் இலக்கை நோக்கிப் பயணிக்கும். சிறிய அலை என்றால் ஒருவிதமான எண்ணெய்யை கப்பலைச் சுற்றிலும் கொட்டுவார்கள். அதன் மூலம் அலை பெரிதளவில் கப்பலைத் தாக்காமல் இருக்கும். சரி, பெரியதோர் அலை வந்தால்? கடல்மாதாவிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை!


டிரெண்டிங் @ விகடன்