அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்ற மாற்று வழி... செயற்கை வைரங்கள் செய்யும் மேஜிக்! | Alternate way to dispose nuclear waste and to generate electricity

வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (01/03/2018)

கடைசி தொடர்பு:16:44 (01/03/2018)

அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்ற மாற்று வழி... செயற்கை வைரங்கள் செய்யும் மேஜிக்!

ர் அணுமின் நிலையத்தில் என்ன நடக்கிறது? யுரேனியத்தை அணு பிளவு செயல்முறைக்கு உட்படுத்தும் போது, அதீத வெப்பம் வெளியேறும். இது அங்கிருக்கும் தண்ணீரை ஆவியாக்க, அந்த ஆவி மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டர் டர்பைன்களை சுற்றவைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. உலகம் முழுதும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் அதிகபட்ச மின்சாரம் இவ்வகை அணு உலைகளிலிருந்து கிடைப்பதே. இந்தியாவிலும் அணுசக்தியின் மூலம் அதிகளவில் மின்சாரம் எடுக்கப்படுகிறது. இதனால் பயன் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவு ஆபத்தும் இருக்கிறது. அதற்குக் காரணம் அணு உலைகளிலிருந்து வெளியாகும் அணுசக்தி கழிவுகள். 

அணுக்கழிவு

இந்த அணுக்கழிவுகளைக் களைவது மிகக் கடினம். பொதுவாக இவற்றை ஒரு கிராஃபைட் ஷீட் கொண்ட பெட்டியினுள் அடைத்து பூமிக்கு அடியிலோ அல்லது கடலுக்கு அடியிலே புதைத்து வைத்து விடுவார்கள். இதுதான் கழிவுகளை அகற்றும் முறையாகக் கருதப்படுகிறது. தற்போது நாம் செய்யும் இந்தக் கழிவு அகற்றும் முறையானது குறைந்த காலமே அந்தக் கதிர்வீச்சை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஆதலால் விஞ்ஞானிகள் இதற்கு மாற்றாக வேறு ஏதேனும் கழிவு அகற்றும் முறைகளைக் கொண்டு வர முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அணுசக்தி கழிவின் மூலம் வெளிவரும் கதிர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும். மேல்நாடுகளான பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் அணுசக்தி கழிவுகளை பூமியின் ஆழத்தில் புதைக்கின்றனர். ஆனால், இம்முறையினால் வெளி வரும் கதிர்வீச்சை நீண்ட நாள்கள் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது. இதற்கு மாற்றாக அந்த அணுசக்தி கழிவுகளைப் புதைக்காமல் அதனை வைத்து ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் அளவிற்கான ஆற்றலைப் பெற வழிவகைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்தக் அணுக்கழிவுகளில் கிடைக்கும் கதிரியக்கத் தன்மையுடைய கிராஃபைட்டை மீண்டும் அதீத வெப்பத்தில் வைத்தால் அது கதிரியக்கத் தன்மையுடைய வாயுக்களை வெளியேற்றுகிறது. அதை மேலும் வெப்பமூட்டி, குறைந்த அழுத்தத்தில் வைத்தால், செயற்கை வைரங்களாக மாறிவிடுகின்றன. இவ்வாறு மனிதனால் உருவாக்கப்படும் செயற்கை வைரங்கள் மீண்டும் கதிர்வீச்சுக்கு உள்ளாகும் போது மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த வைரங்கள் தங்களுக்குள் உள்ள சில கதிரியக்கத் தாதுகளைக் கொண்டு இந்த மேஜிக்கை நிகழ்த்துகின்றன. ஆனால், இதிலிருந்து எந்த வித அபாயகரமான கதிர்களும் வெளியாகாமலே மின்சாரம் உற்பத்தியாவதுதான் ஆச்சர்யமான விஷயம்! இதை பிரிஸ்டோல் யூனிவர்சிட்டியின் இயற்பியல் மற்றும் வேதியியல் நிபுணர்கள் தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். நடைமுறைக்கு இது சற்று அப்பாற்பட்டு இருப்பினும், இது பழைய கழிவு அகற்றும் வழிமுறையை விட அதிக வாழ்நாள் கொண்டுள்ளது.

அணுக்கழிவு

விஞ்ஞானிகள் முதலில் நிக்கல்-63 கதிரியக்க தாதுவை செயற்கை வைரத்தினுள் வைத்துப் பயன்படுத்தினர். அபாயகரமான கதிர்வீச்சுகள் வெளியாகாமல் தடுக்க அணு உலைகளின் வெளியே கார்பன்-14 ஐ கொண்ட கிராஃபைட் ஷீட்டை பயன்படுத்தினர். அதற்குப் பதிலாக இந்தச் செயற்கை வைரங்களைப் பயன்படுத்தினால் பயன்களைக் கொடுக்கும் என்பது விஞ்ஞானிகளின் பரவலான கருத்து. 

அணு உலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகளை இவ்வாறு செயற்கை வைரங்களில் அடைப்பதன் மூலம், அணுக்கழிவுகளிலிருந்து வெளியே வரும் கதிரியக்க கதிர்களை வெளியே வரவிடாமல் தடுக்கலாம். மேலும் இக்கதிரியக்கத் தாது கழிவுகளைக் கொண்டு மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம் என்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போலத்தான். இதுபோல் உள்ள அனைத்து அணுக்கழிவுகளையும் பயன்படுத்தினால் எவ்வளவு எரிபொருளையும், மின்சாரத்தையும் சேமிக்கலாம் என்கிற தரவு ஆச்சர்யமூட்டும் ஒன்றாய் இருக்கிறது. இந்தத் திட்டம் மட்டும் வெற்றிகரமாக மெருகேற்றப்பட்டால், அதிக அளவிலான எரிபொருள் மற்றும் மின்சாரத் தேவைக்கு மாற்றாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பற்றாக்குறை, அணு உலை ஆபத்து என இரண்டையும் நம்மால் சரி செய்ய முடியும்!


டிரெண்டிங் @ விகடன்