பூமியை பஸ்பமாக்கும் திறன்கொண்ட மேக்னெட்டார் நட்சத்திரங்கள்... இப்போது எங்கே இருக்கின்றன? #Magnetar

மேக்னெட்டார் (Magnetar) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தப் பிரபஞ்சத்தில் மிக அதிக அளவிலான காந்தவிசைகொண்ட ஒரு வகையான  நியூட்ரான் நட்சத்திரங்களே மேக்னெட்டார் எனப்படுகிறது. இதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் அளவிற்கு முக்கியமானதா என்ற கேள்வி எழும். கட்டுரையின் முடிவில் நீங்களே சொல்வீர்கள், ‘அட’ என்று.

மேக்னெட்டார்

Photo Courtesy: ESO/L. Calçada

மேக்னெட்டார் என்றால் என்ன... அது எப்படி உருவாகின்றது?

ஒரு நட்சத்திரம் அதன் ஆயுளின் முடிவில் சூப்பர் நோவா என்ற பெருவெடிப்பிற்கு உள்ளாகின்றது. அப்படி நிகழும் அந்த நிகழ்வின் முடிவில் அதைவிட சிறியதாக (ஒரு சராசரி நகரத்தின் அளவு வைத்துக்கொள்ளலாம்) ஆனால், மிகுந்த அடர்த்தியான ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தின் பிறப்பிற்கு வழிவகுக்கும் (எல்லா நட்சத்திரங்களும் அல்ல, அளவில் பெரியவை மட்டும்). அந்த நியூட்ரான் நட்சத்திரத்தின் அடர்த்தி மிக மிக அதிக அளவு இருக்கும். அதனை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து எடை போட்டால் குறைந்தது ஒரு பில்லியன் டன் இருக்கும். அந்தளவிற்கு அடர்த்தியானதாக இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் இருக்கும். இதன் சுழற்சி விகிதம் மிக மிக அதிகமாக இருக்கும். அதாவது நொடிக்கு நூறு சுழற்சிகள் அளவிற்கு. இந்தச் சுழற்சி விகிதம் மிக வலிமையான காந்தப் புலத்திற்கு வழிவகுக்கும். அதனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்களின் ஈர்ப்புவிசையானது பூமியின் ஈர்ப்புவிசையை விட ட்ரில்லியன் (Trillion) மடங்கு அதிகமாக இருக்கும். இதைத்தான் மேக்னெட்டார் என்று அழைக்கிறார்கள்.

மேக்னெட்டார் உதாரணங்கள்

Photo Courtesy: NASA/CXC/INAF/F. Coti Zelati et al.

எப்படி இவற்றின் இருப்பு கண்டறியப்பட்டது?

1979, மார்ச் 5, ரஷ்யா தனது செயற்கைக் கோள்களை புதன் கோளின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி, இரண்டு ஆளில்லா விண்கலங்களை (venera 11 மற்றும் 12) அனுப்பி அந்தக் கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்துகொண்டிருந்த நேரம். திடீரென தீவிர காமா கதிர்களால் அந்த விண்கலங்கள்  தாக்கப்பட்டன. கதிர்வீச்சின் அளவீடு நூறு எண்ணிக்கையில் இருந்து சட்டென இரண்டு இலட்சத்தை எட்டியது. சரியாக 11 நொடிகள் கழித்து சூரியனைச் சுற்றுப்பாதையில் சுற்றி வந்துகொண்டிருந்த ஹெலியோஸ் 2 (helios 2) நாசாவின் ஆளில்லா விண்கலமும் அதே காமா கதிர்வீச்சினால் தாக்கப்பட்டது. சில நொடிகளிலேயே பூமியின் சுற்றுப்பாதையில் இருந்த அமெரிக்காவின் மூன்று ஃடிபன்ஸ் வேலா ( Defence vela) செயற்கைக் கோள்கள், ரஷ்யாவின் ப்ரக்னாஸ் 7 (Prognoz 7) செயற்கைக் கோள் மற்றும் ஐன்ஸ்டின் அப்சர்வேட்டரி (Einstein observatory) ஆகியவற்றின் டிடெக்டார்களை நிலைகுலையச் செய்தது. அந்தக் கதிர்வீச்சு, சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறும் முன் இன்டர்நேஷனல் சன் – எர்த் எக்ஸ்புளோரரையும் (International sun-earth explorer) தாக்கிச் சென்றது. இந்த நிகழ்வுக்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்க, அவர்கள் தேடல் முடிந்த இடம் ‘எஸ்.ஜி.ஆர் 0525-66’ (SGR 0525-66). இது கிறிஸ்து பிறப்பிற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நட்சத்திரப் பெருவெடிப்பில் தோன்றிய ஒரு மேக்னெட்டார். ஆனால், இது 1,63,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, அவ்வளவு தொலைவில் இருந்து பூமியின் அருகில் உள்ள விண்கலத்தில் பாதிப்பை ஏற்படுத்த முடியுமென்றால், மேக்னெட்டாரின் திறனை நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உத்தேச வரைபடம்

Photo Courtesy: CSIRO

இதுவரை எத்தனை கண்டறியப்பட்டுள்ளன? அதில் எவை பூமிக்கு அருகில் உள்ளன?

2016 மார்ச் 13 வரை 23 மேக்னெட்டார்கள் கண்டறிப்பட்டுள்ளன. இன்னும் 6 உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருக்கின்றன. எல்லா மேக்னெட்டார்களுக்கும் தொலைதூரம்வரை தாக்கம் ஏற்படுத்தும் அளவிற்கு ஆற்றல் இருப்பதில்லை. பூமியில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவு ஆற்றல்கொண்ட ஒரு மேக்னெட்டார், ‘எஸ்.ஜி.ஆர் 1806-20’ (SGR 1806-20) 50,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

மேக்னெட்டார் பெரியதோ, சிறியதோ அவைதான் இவ்வண்டத்தில் வலிமையான காந்தச்சக்தி கொண்ட பொருள்கள். ஒரு மேக்னெட்டாரின் காந்தப்புலத்தில் 600 மைல்களுக்குள் நீங்கள் நுழைந்தாலே உங்கள் உடலின் நரம்பு மண்டலத்தை அழித்து உடற்கூற்றை மாற்றியமைத்து விடும். சில அடிகள் சேர்த்து எடுத்து வைத்தால் உங்கள் உடலில் உள்ள அணுக்களே அணு அணுவாகக் கிழித்தெறிந்து விடும், அந்தளவிற்கு வலிமை ஒரு மேக்னெட்டாரின் காந்தப் புலத்திற்கு உண்டு. எனினும் நமக்கு மிக அருகில் உள்ள மேக்னெட்டாரே 1000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதால் சிறிது மூச்சுவிட்டுக்கொள்ளுங்கள். விஞ்ஞானிகள் இந்த வழக்கத்திற்கு மாறான காந்தங்களைப் பற்றி இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், ஆராய்ச்சிகள் தூரத்தில் இருந்தே நடைபெறும். இப்போது புரிந்திருக்கும். மேக்னெட்டார் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம் என்று! இது நீங்கள் 'அட' சொல்லும் நேரம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!