பாப்கார்ன் டப்பாக்களில் நெகிழ்ச்சிக் கதை... சத்யம் சினிமாஸில் இதைக் கவனியுங்கள்! | popcorn tubs at chennai sathyam cinemas gets a new makeover with the help of differently abled

வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (01/03/2018)

கடைசி தொடர்பு:20:43 (01/03/2018)

பாப்கார்ன் டப்பாக்களில் நெகிழ்ச்சிக் கதை... சத்யம் சினிமாஸில் இதைக் கவனியுங்கள்!

இந்த உலகம் எல்லோருக்குமானதாக இல்லை என்பதை இப்போதுதான் கண்டறியவும் பேசவும் தொடங்கியிருக்கிறோம். மாதவிடாய் சுகாதாரம், நாப்கின் பயன்பாடு, அத்தியாவசியமான கழிவறை என ஒரு பெண்ணின் அடிப்படைத் தேவைகளுக்கான விழிப்புஉணர்வே டிஜிட்டல் இந்தியாவில் இப்போதுதான் பரவிவருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளின் நலன், அவர்களுக்கான பிரத்யேக வடிவமைப்புகள் எல்லாம் இன்னும்கூட தொடக்க நிலையிலேயே இருப்பதை மறுப்பதற்கில்லை. மாற்றுத்திறனாளிகளைச் செயலாற்ற முடியாதவர்களாகப் பார்க்கும் ஸ்டீரியோ டைப் விஷயங்களை, சில முயற்சிகள் உடைக்குமல்லவா? அப்படியொரு முயற்சிதான் ஆட்டிசம், செரிப்ரல் பால்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் `பார்கார்ன் டப்' உருவாக்கம். 

பாப்கார்ன் டப்பாக்கள்

தியேட்டரின் டீஃபால்ட் சம்பிரதாயமான பாப்கார்ன் டப்பாக்களில் ஆட்டிசம், செரிப்ரல் பால்சி கொண்டவர்களின் திறனை வெளிக்கொணர்வதற்காக, மூன்று நிறுவனங்கள் சேர்ந்து உருவாகியிருக்கும் அமைப்பு `Differently Designed'. கைராசி, ரூப்கான், எஸ்.பி.ஐ சினிமாஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடங்கியிருக்கும் இந்த முயற்சியின் முதல் படிதான், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட பாப்கார்ன் டப்பாக்கள்.

அஞ்சனாசென்னையின் எஸ்.பி.ஐ சினிமா தியேட்டர்களின் வழக்கமான வெள்ளை பாப்கார்ன் டப்பாக்கள், `மதுபனி' மற்றும் `வார்லி' ஓவியங்களைத் தாங்கியிருக்கின்றன. இரண்டு வயதில் ஆட்டிசக் குறைப்பாடு இருப்பதாகக் கண்டறியப்பட்ட அஞ்சனாவின் கைவண்ணத்தில் வரையப்பட்ட  `மதர்ஸ்’ ஓவியம் உடைய டப்பாக்களை வீட்டுக்குக் கொண்டுசெல்கிறார்கள் குழந்தைகள். இந்திய நாட்டுப்புற வகை ஓவியங்களில், பல வகையான முயற்சிகளைச் செயல்படுத்திவரும் அஞ்சனா, தற்போது தனது குடும்பத்துடன் துபாயில் இருக்கிறார்.

சென்னையில் வசிக்கும் ஸ்வாமிக்கு 30 வயது. ஆட்டிசக் குறைபாடுள்ளவர். ஓங்கி நிமிர்ந்து நிற்கும் கட்டடங்களுக்கு முன்னால், ஒரு டயக்னல் வரிசையில் ஊர்ந்து செல்லும் மஞ்சள் நிற கார்கள், ஸ்வாமியின் உலகத்தை நமக்கும் காட்டுகின்றன. கோடுகளும் வட்டங்களுமே ஸ்வாமியின் ஓவியங்களில் பிரதானம். சிறப்பும் அதுதான்!

தியேட்டருக்குள் இருந்த ஒவ்வொருவரின் பாப்கார்ன் டப்பாவையும் எட்டிப்பார்க்கவைத்த ஓவியங்களைப் பற்றி பேசியபோது, ``நரம்பு மண்டலக் குறைபாடு, மதியிறுக்கம் எனச் சொல்லப்படும் குறைபாட்டைக்கொண்டவர்களின் திறமையைக் கவனித்தீர்களா? இந்த பாப்கார்ன் டப் முயற்சி, அவர்களின் தனித்துவமான திறமைக்கு வெளிச்சம் தந்திருக்கிறது. இத்தகைய புரொமோஷன் செயல்பாடுகள், கலைஞர்களாக அவர்களுக்குத் தேவையான வட்டத்தை, எல்லைகளை விரிவடையச் செய்யும். அவர்களின் பெயின்டிங்ஸ் விற்பனைக்குச் செல்வது மட்டுமல்லாமல், அவர்களை ஊக்கப்படுத்துபவர்களும், அவர்களிடமிருந்து இவற்றைக் கற்றுக்கொள்பவர்களும் அதிகரிப்பார்கள் அல்லவா! அவர்களது படைப்புகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்தக் கலைஞர்களின் ஒவ்வொரு ஸ்ட்ரோக்கையும், கலை வெளிப்பாட்டின் ஆழத்தையும் டிஸ்டர்ப் செய்யாமல் கொண்டுவந்திருக்கும் முயற்சி இது.

எஸ்.பி.ஐ சினிமாஸின் திரை அனுபவத் தலைமை பவேஷின் ஐடியாதான் இது. பார்சிலோனாவில் செய்யப்பட்ட இப்படியானதொரு முயற்சிதான், இந்த பாப்கார்ன் டப் ஐடியாவுக்கான அடிப்படை.  கைராசி, ரூப்கான் அலெக்ஸாண்டர் செக், எஸ்.பி.ஐ சினிமாஸ் என நாங்கள் அனைவரும் இணைந்த இந்த முயற்சியின் நோக்கம், மாற்றுத்திறனாளிகளை அவர்களது கலையின் மூலமாகவே அறிமுகப்படுத்துவதும் ஆற்றல்கொள்ளவைப்பதும்தான்” என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனநல ஆலோசகரும் disability studies பட்டதாரியுமான இந்திரா ரெட்டி.

                                                                                                       பாப்கார்ன்

`கலைப் படைப்பு, தனித்துவமான மனநிலையின் மிகத் தனித்துவமான வெளிப்பாடு. படைப்பவர் எதுவாக இருக்கிறாரோ, அவரது உண்மையிலிருந்து அந்தக் கலையின் அழகு பிரதிபலிக்கும்' - ஆஸ்கர் வைல்டின் இந்த வாக்கியத்துக்கான பொருளை, மாற்றுத்திறனாளிகளின் ஒவ்வொரு படைப்பும் உரக்கச் சொல்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்