Election bannerElection banner
Published:Updated:

மண் அரிவாள் கொண்டு ஆடு வெட்டிய அற்புதம்! -  கிராமத்து திருவிழாவின் ருசிகர வரலாறு

மண் அரிவாள் கொண்டு ஆடு வெட்டிய அற்புதம்! -  கிராமத்து திருவிழாவின் ருசிகர வரலாறு
மண் அரிவாள் கொண்டு ஆடு வெட்டிய அற்புதம்! -  கிராமத்து திருவிழாவின் ருசிகர வரலாறு

மண் அரிவாள் கொண்டு ஆடு வெட்டிய அற்புதம்! -  கிராமத்து திருவிழாவின் ருசிகர வரலாறு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற கிராமத்துத் திருவிழாவான குளமங்களம் புரவி எடுப்புத் திருவிழா நேற்று தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அருகில் உள்ளது குளமங்களம். இந்த ஊரின் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த  கூடிய பெருங்கரையடி மீண்ட அய்யனார் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பே இங்குள்ள பிரமாண்டமான குதிரைச்சிலைதான். ஆசியாவில் மிக உயரமான குதிரைச் சிலை என்ற பெருமை இதற்கு உண்டு. இரண்டு முன்னங்கால்களைத் தூக்கியபடி கம்பீரமாக காட்சி தரும் இச்சிலையின் மொத்த உயரம் 33 அடி.

இங்கு ஆண்டு தோறும் மாசி மாதத்தில்  மகம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும் மூன்று நாட்கள்  திருவிழா படுபிரபலம். இந்தத் திருவிழாவின் ஹீரோவே அந்தக்குதிரைதான். கார்களிலும் வாகனங்களிலும்  மெகா சைஸ் மாலைகளுடன் வரும் பக்தர்கள், அதனை குதிரைக்கு போட்டு பரவசப்படுகிறார்கள். அந்த மாலைகள் ஒவ்வொன்றும் 35 அடிக்குக் குறையாமல் இருக்கின்றன. அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் வண்ணக்காகிதங்கள், மற்றும் காகிதப்பூக்களால்  இந்த மாலைகள்  செய்யப்படுகின்றன. இந்த மாலை ஒன்றின் விலை குறைந்த பட்சமாக 2,000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை இருக்கிறது. இதனை செய்வதற்கென்றே தனிப் பயிற்சி பெற்ற  ஆட்கள் கொத்தமங்கலம்,ஆலங்குடி பகுதிகளில் இருக்கிறார்கள்.

"சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, குதிரைக்கு எதிராக யானை சிலை ஒன்றும் அதே உயரத்தில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் வில்லுனி ஆற்றில்  ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில்,  அந்த  யானை சிலை அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இப்போது உள்ள குதிரை சிலை மட்டும் எஞ்சியுள்ளது" என்று கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். மேலும் ரசாயனக் கலப்பின்றி இயற்கைப் பொருள்களால் குதிரைச் சிலை வர்ணம் பூசப்பட்டுள்ளது.இது குறித்த சுவையான செவிவழிக் கதை ஒன்றை இந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.

"இந்தக் கோயில் உருவாகும் முன்பு அந்த இடத்தில் காரைச்செடிகள் அடர்ந்திருந்திருக்கும். ஆடு மேய்க்கும் இளைஞர்கள் விளையாடுவார்கள். அந்த விளையாட்டில் வெற்றிபெறுபவர்களுக்கு இளம் ஆடு ஒன்று பரிசாகத் தரப்படும் அந்த ஆட்டை அறுத்து அங்கேயே சமைத்து சாப்பிடுவார்கள்.  அப்படி ஒருசமயம்,அந்த இடத்தில் நடந்த போட்டியில்,ஆடு வெட்டி விருந்து வைக்க முயன்ற போது, ஆடு வெட்ட அரிவாள் எடுத்துவர மறந்து விட்டார்கள். அங்கேயே  மண்ணை எடுத்து, நீர் ஊற்றிக் குழைத்து அரிவாள் ஒன்றைச் செய்தார்கள்.அதனைக் கொண்டு ஆட்டை  வெட்டினார்கள்.

அதில், ஆடு வெட்டுப்பட்டு ரத்தம் பீரிட்டிருக்கிறது. இந்தச் சேதியை அவர்கள் ஊரில் வந்து சொன்னபோது, வியந்து போன  மக்கள், 'அந்த இடத்தில் தெய்வசக்தி உள்ளது. அதனால்தான் மண் அரிவாள் ஆட்டை வெட்டிருக்கிறது'  என்று கூறி,அங்கே  கோயிலைக் கட்டி விட்டார்கள்" என்று கூறுகிறார்கள். இதுதான் இந்தக் கோவில் உருவான கதை. பின்னர் மிக உயரமாக கட்டப்பட்ட குதிரைச் சிலையால் இந்தக் கோவிலும் திருவிழாவும் புகழ் பெற்று விட்டன. நேற்று(01.03.2018) தொடங்கிய இந்தத் திருவிழா 3-ம் தேதி வரை நடக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு