Published:Updated:

`ஜல்லிக்கட்டில் இப்படி பண்ணுறாங்க' - ஆதங்கப்படும் காளை உரிமையாளர்கள்

பாலஜோதி.ரா
`ஜல்லிக்கட்டில் இப்படி பண்ணுறாங்க' - ஆதங்கப்படும் காளை உரிமையாளர்கள்
`ஜல்லிக்கட்டில் இப்படி பண்ணுறாங்க' - ஆதங்கப்படும் காளை உரிமையாளர்கள்

``அதிகமான காளைகளைப் போட்டிக்கு அனுமதிக்கிறாங்க. புறவாடியில எங்கள் காளைகள் ரொம்ப சிரமங்களைச் சந்திக்குது" என்று வெளி மாவட்டங்களிலிருந்து  புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தங்கள் காளைகளை ஓட்டிவரும் உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும் மாவட்டமாகப் புதுக்கோட்டை தொடர்ந்து சாதனைப் படைத்துவருகிறது. ஒருவருடத்தில் அதிகபட்சமாக 177 போட்டிகள் வரை இந்த மாவட்டத்தில் நடந்திருக்கிறது. மெரினா புரட்சிக்குப் பிறகு,  2017-ம் வருடம் 62 போட்டிகள் நடந்திருக்கிறது. இந்தவருடம் இதுவரை 70-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. இது நூற்றைத் தாண்டிவிடும் என்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு பிரியர்கள். 

இந்தச் சூழலில்தான் புறவாடி பற்றிய புலம்பல்கள் காளைகளின் உரிமையாளர்களிடமிருந்துக் கிளம்பியுள்ளது. என்ன மாதிரியான ஆதங்கம் அது. காளையின் உரிமையாளர் ஒருவரை அதை விவரிக்கிறார். தீத்தானிப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர், "காளைகளைப் போட்டிக்கு அழைத்து வருவதற்கு, வண்டி வாடகை, தீவனம், பாதுகாப்புக்கு ஆட்கள் என்று அதிகமாகச் செலவு செய்கிறோம். ஆனால், விழா கமிட்டியினர், உள்ளூர் மாடுகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துவிட்டு, எங்களுக்கு 500 வது டோக்கனுக்கு மேல்தான் கொடுக்கிறார்கள். புறவாடியில் இருநூறுக்கும் மேற்பட்டக் காளைகளை விட்டு அடைப்பதால், காளைகளும் நாங்களும் பெரும் அவதிக்குள்ளாகிறோம். சமயத்தில் நேரமில்லை என்று கூறி, மாட்டைத் திருப்பியும் அனுப்பிவிடுகிறார்கள். காளையைப் போட்டியில் அவிழ்த்துவிடாமல் ஊர்திரும்பினால், எங்களுக்கு அவமானம்.

காளைகளை இதுபோன்ற போட்டிகளுக்கு பெரும் பொருள் செலவுசெய்து நாங்கள் கூட்டிச் செல்வது, அங்கு தரும் பரிசு பொருள்களுக்கு ஆசைப்பட்டு அல்ல. இதுபோன்ற போட்டிகளில் தொடர்ந்து ஓடியாடி விளையாடும் காளைகள் இனவிருத்தியில் ஈடுபடும்போது, வீரியமிக்க, ஆரோக்கியமான கன்றுகள் பிறக்கும்

என்பதால்தான். இது எல்லா விழா கமிட்டிக்காரர்களுக்கும் தெரியும். ஆகையால், வெளியூர்களிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்தும் வரும் காளைகளை முதலில் அவிழ்த்து விட வேண்டும். அதுபோல், அதிகபட்சமாக 500 காளைகளுக்கு மேல் டோக்கனும் தரக்கூடாது" என்றார்.

இதுகுறித்து  ஜல்லிக்கட்டு நடத்துவோர் கமிட்டி பொறுப்பாளரான கார்த்திக் என்பவரிடம் பேசினோம். "புறவாடியைதான் எல்லா விழா கமிட்டியினரும் அதிக கவனம் எடுத்து கவனிப்போம். அதிலும் வெளிமாவட்டங்களிலிருந்து வருகிறவர்கள் தங்களது காளைகளுடன் நேரத்துக்கு ஊர் செல்ல வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது எங்கள் வழக்கம். புறவாடி வட்டத்துக்குள் 25 காளைகளுக்கு மேல் அடைப்பதில்லை. அவை அவிழ்த்து விட்டப்பிறகுதான் அடுத்த 25 காளைகளை அனுமதிப்போம். 500  காளைகளுக்கு மேல் டோக்கன் தரக்கூடாது என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. திட்டமிட்ட நேரத்தைக் காட்டிலும் அதிகமான நேரம் பிடிக்கும் அவ்வளவுதான். நாங்கள் எங்கள் ஊரில் நடத்திய ஜல்லிக்கட்டில் 477 காளைகள் மட்டுமே கலந்துகொண்டன. குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவே போட்டியை முடித்துவிட்டோம். காளை உரிமையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை அந்தந்த விழா கமிட்டியினரிடம் முறையிட வேண்டும். அதுபோல், புறவாடி பிரச்னைகளைக் கவனமாகக் கையாள வேண்டியது. அந்தந்த விழா கமிட்டியினர் பொறுப்பு" என்றார்.