வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (05/03/2018)

கடைசி தொடர்பு:13:38 (05/03/2018)

தங்களின் டீன் ஏஜ் பிள்ளைகளின் அன்பை இன்னும் நெருக்கமாகப் பெற உதவும் 5 வழிகள்! #GoodParenting

ஓவியம்: எஸ்.ஏ.வி இளையபாரதி

ஓவியம்: எஸ்.ஏ.வி இளையபாரதி

'இந்த டிசைன் எல்லாம் வேணாம்ப்பா... நான் வேற எடுத்துக்கறேன்' என உங்களின் பிள்ளைகள் சொல்லும்போதுதான், அவர்கள் குழந்தைகள் எனும் பருவத்திலிருந்து அடுத்தகட்டத்தை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை உணருவீர்கள். சிறு வயது முதல் உங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துபார்த்துச் செய்திருப்பீர்கள். அது பெற்றோர் எனும் முறையில் கடமை. ஆனால், அவர்கள் உடைகளின் அளவுகளில் மாற்றம் ஏற்படுவதைப் போல மனநிலையும் மாறும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், பெற்றோர் - பிள்ளைகளுக்கான விலகல் தன்மை, பிள்ளைகளின் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும்போது நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, அந்தப் பருவத்தின்போது பெற்றோர் சில விஷயங்களில் கவனமாக இருந்தால், இருவருக்குமான அன்பு இன்னும் நெருக்கமாகும். 

1. உரையாடுங்கள்: குழந்தைகளாக இருந்தவரை அவர்களோடு பேச மட்டுமே செய்திருப்பீர்கள். இனி, உரையாடத் தொடங்குகள். அவர்களுக்கும் சுயமாகச் சிந்திக்கும் திறனும் சில அனுபவங்களும் இருக்கும் என ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான், அவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பீர்கள். சில விஷயங்களில் தடாலடியாகக் கருத்துச் சொன்னாலும் அவசரப்படாமல் அது குறித்து விவாதியுங்கள். எப்போதும் முன்முடிவுகளோடு பேசத் தொடங்காதீர்கள். அது, உரையாடலைச் சீர்குலைத்து விடும். 

2. விதிகளைத் தளர்த்துங்கள்: தெருவைத் தாண்டிச் செல்லக் கூடாது; சமையலறையில் நுழையக் கூடாது என... குழந்தைகளாக இருந்த வரை, பாதுகாப்புக் காரணமாகச் சில விதிகளை உருவாக்கியிருப்பீர்கள். அதையே இப்போதும் பின்பற்றச் சொல்லாதீர்கள். அவற்றில் சின்னச் சின்னத் தளர்வுகளைக் கொண்டு வாருங்கள். தெருவைக் கடந்து, வேறெங்காவது செல்வதற்கு அனுமதிகொடுங்கள். அதே நேரம் எங்கு, எதற்குச் செல்கிறார் என்பதை அறிந்துகொள்ளவும், அதை முறைப்படுத்தவும் தவற வேண்டாம். இவை போன்ற சரியான விதி தளர்த்தல் அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் அளிக்கும். அதைத் தவறாகப் பின்பற்றுவது தெரிந்தால், பக்குவமாக அதை மாற்றுங்கள்.

3. தோழமை கொள்ளுங்கள்: விதிகளைத் தளர்த்துவதைப் போலவே, பிள்ளைகளோடு பழகும் தன்மையிலும் சற்றே நெகிழ்வு கொள்ளுங்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது எனும் தொனியில் அல்லாமல், வீட்டின் முடிவுகளைப் பற்றி விவாதிக்கக்கூடிய நபராகக் கருதுங்கள். அவர்களின் படிப்பைப் பற்றி தெரிந்துகொள்வதில் காட்டும் ஆர்வத்தை, கல்லூரி வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சியான விஷயங்களையும் தெரிந்துகொள்ளவும் காட்டுங்கள். ஆனால், அதை ஒரு கண்காணிப்பாளர் என்பதாக அல்லாமல் ஒரு ஃப்ரெண்ட் போல அமையட்டும். உடல் ரீதியான மாற்றங்கள் குறித்து, தெளிந்த மருத்துவத்துடன் உரையாடுங்கள். 

4. நேரம் செலவிடுங்கள்: இது மிக முக்கியமானது. ஒரு நாளின் பெரும் பகுதியைப் படிப்பு சார்ந்தே அவர்கள் செலவழிக்கின்றனர். வீட்டிலிருக்கும் நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றைத் தவிர்த்து, பிள்ளைகளுடன் உரையாட, விளையாட, வெளியில் சென்று வர என அவர்களுடன் இருப்பதுபோல அமைத்துக்கொள்ளுங்கள். அப்போதே, அவர்களின் மாற்றங்களைத் தெரிந்துகொள்வதோடு அதைச் சரியாக எதிர்கொள்ள நீங்கள் தயாராக முடியும். ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மையும் அதிகமாகும். 
  
5. மாறத் தயாராகுங்கள்:  குழந்தை வளர்ப்பு என்பது காலந்தோறும் மாற்றமடைவது. 'எங்க அப்பாவின் கண்களைப் பார்த்துகூடப் பேச மாட்டேன் தெரியுமா?' எனும் வசனங்களை எல்லாம் இப்போதுள்ள பிள்ளைகளிடம் பேசுவதைத் தவிருங்கள். சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதில் சாதி, இனம், மதம் உள்ளிட்டவை குறுக்கே நுழைய இந்தக் காலப் பிள்ளைகள் அனுமதிப்பதில்லை. இது காலகட்ட வளர்ச்சியின் பிரதான அங்கம். இதுபோன்ற விஷயங்களை ஏற்றுகொண்டு, உங்களை மாற்றிக்கொள்ளத் தயாராகுங்கள். 


 


டிரெண்டிங் @ விகடன்