வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (05/03/2018)

கடைசி தொடர்பு:09:24 (05/03/2018)

கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றலாமா? - தொழில் தர்மம் உணர்த்தும் கதை! #MotivationStory 

தன்னம்பிக்கை கதை

`விசுவாசத்தால் மட்டுமே ஒன்றைப் பின்பற்றுகிறவர்கள், கண்மூடித்தனமாகத்தான் அதைப் பின்பற்றுவார்கள்’ - அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் சுதந்திர அமெரிக்காவை நிறுவியவர்களில் ஒருவரான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin). விசுவாசத்தால் மட்டுமல்ல, யாரோ சொல்கிறார்கள் என்பதற்காகக் கண்மூடித்தனமாக எத்தனையோ விஷயங்களை நாம் கடைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சில பழமொழிகளைக்கூட நாம் அப்படியேதான் எடுத்துக்கொள்கிறோம். `ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் நடத்தலாம்’ என்பது சரியா? `ஆயிரம் பேரிடம் `போய்’ சொல்லி திருமணம் நடத்த வேண்டும்’ என்கிற நடைமுறை, `பொய்’ சொல்லியாகிப் போனது. `ஆயிரம் பேரைக் கொன்றால் அரை வைத்தியன்’... இதுவும் சரியல்ல. `ஆயிரம் வேர்களைக் (மூலிகைகளை) கொன்றால்தான் (பறித்தால்தான்) அரை வைத்தியனாக முடியும்’ என்பதே சரி. பழமொழிகளில் மட்டுமல்ல, நாம் அன்றாடம் பின்பற்றும் நடைமுறைகளிலேயேகூட இதுபோல பல கண்மூடித்தனமான பழக்கங்களைப் பார்க்கலாம்.  ஆனால், ஒரு தொழிலிலோ, வியாபாரத்திலோ எப்போதோ, யாரோ சொல்லிவிட்டுச் சென்றதை இப்போதும் பின்பற்றுகிறோம் என்கிற நடைமுறை தவறானது. அதை விளக்கும் கதை இது.   

இங்கிலாந்திலிருந்த குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று புதிதாக ஒரு பானத்தைத் தயாரித்திருந்தது. கொஞ்ச காலமாக விற்பனையில் சரிவிலிருந்த நிறுவனம். சின்னச் சின்ன டின்களில் அடைக்கப்பட்ட அந்தக் குளிர்பானத்தை முறையாக, பிரமாண்டமான முறையில் அறிமுகப்படுத்தினால் விற்பனை சூடுபிடிக்கும் என நிறுவனத்தின் அதிகாரிகள் நினைத்தார்கள். சிறு கடைகள் தொடங்கி, சூப்பர் மார்க்கெட்கள் வரை புதிய குளிர்பானத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது அவர்களின் இலக்கு. 

பஃபே

ஊரின் மிக முக்கியமான மனிதர்களும், பிரபலங்களும், நிறுவனத்தின் தொழிலாளிகளும் குளிர்பான அறிமுக விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். குளிர்பான அறிமுக விழா பிரமாதமாக நடந்தது. வழக்கமான சில நடைமுறைகளுக்குப் பிறகு விழா நிறைவடைந்தது; விருந்து தொடங்கியது. அது, பஃபே (Bufet) விருந்து. மிகப் பெரிய ஹாலில் சிறு குழுக்களாக நின்று பேசியபடி, எல்லோரும் பானங்களை அருந்தவும், உணவுகளை ஒரு பிடி பிடிக்கவும் ஆரம்பித்தார்கள். 

அப்படி ஹாலின் ஒரு மூலையில் மூன்று பேர் கூடினார்கள். நிறுவனம் எப்படி குளிர்பானங்களை விநியோகிக்கப் போகிறது, அதற்கான போக்குவரத்து வழிமுறைகள் என்னென்ன என்பதையெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவர், அந்த நிறுவனத்தின் டிஸ்ட்ரிபியூஷன் மேனேஜர். மற்ற இருவரும் இதற்கு முன்னர் அதே கம்பெனியில் பணியாற்றிய ஊழியர்கள்; அதே துறையில் மேனேஜர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அதாவது மூவருமே `டிஸ்ட்ரிபியூஷன் மேனேஜர்கள்’. மூன்று தலைமுறை மனிதர்கள் என்றும் சொல்லலாம். 

பேச்சுத் தொடர்ந்தது. அப்போது நிறுவனத்தில் டிஸ்ட்ரிபியூஷன் மேனேஜராகப் பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞர் தன் மனதிலிருந்ததையெல்லாம் கொட்டினார். நிறுவனம் நீண்டகாலமாக, அது தயாரிக்கும் குளிர்பானங்களை விநியோகிக்க ஒரு கொள்கையை வைத்திருந்தது. நீண்ட தூரத்திலிருக்கும் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளுக்குத் திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் டெலிவரி செய்ய வேண்டும். அருகிலிருக்கும் இடங்களில் வெள்ளிக்கிழமையன்று டெலிவரி செய்ய வேண்டும். மற்ற இடங்களுக்கு மீதி நாள்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கொள்கை, அந்த மேனேஜரை மிகுந்த மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாக்கியிருந்தது. 

``கம்பெனியோட இந்த பாலிசியால எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா..? இப்போ புதுசா வேற ஒரு கூல்டிரிங்க்ஸ் வந்துடுச்சா... அதுக்கு டிமாண்ட் அதிகமா இருக்கும். எப்படித்தான் டெலிவரி பண்ணப் போறேனோ..?’’ 

உரையாடல்

அந்த இளைஞர் சொன்னதை இரண்டாமவர் ஆமோதித்தார். அவர், அந்த இளைஞனுக்கு முன்னதாக நிறுவனத்தில் அதே பொறுப்பை வகித்தவர். ``என்னோட காலத்துலயும் இதே பிரச்னைதான். இப்படி ஒரு பாலிசி கம்பெனிக்கு இருக்குங்கிறதே ரொம்ப அதிசயமா இருந்துச்சு. திங்கக்கிழமை அன்னிக்கி ரொம்ப தூரம் கூல்டிரிங்க்ஸை ஏத்திட்டுப் போற வண்டிங்களும், லாரிகளும் சீக்கிரமே வந்துட்டாக்கூட, அதையெல்லாம் செவ்வாய்க்கிழமை அன்னிக்குப் பக்கத்துல இருக்குற லோக்கல் டெலிவரிக்குப் பயன்படுத்த முடியாது. ஏன்னா, வெள்ளிக்கிழமைதான் பண்ணணும்னு கம்பெனி விதிகள்ல இருக்கு. என்ன செய்ய முடியும்?’’ 

இப்போது மூன்றாமவர் பேசவில்லை. யோசித்தார். நிறுவனத்தின் இந்தக் கொள்கை எப்படி உருவானது என்பதை நினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்தார். சிறிது நேரம் கழித்து சிரித்தபடியே சொன்னார்... ``இப்போ நினைவுக்கு வந்துடுச்சு. அது இரண்டாம் உலகப்போர் நடந்துக்கிட்டிருந்த காலம். அதனால எரிபொருள் தட்டுப்பாடு வந்துடுச்சு. பெட்ரோல், டீசலுக்கெல்லாம் ரேஷன் முறையைக் கொண்டு வந்துட்டாங்க. அதனால டிஸ்ட்ரிபியூஷனுக்கு ட்ரக்குகளை, லாரிகளைப் பயன்படுத்த முடியலை. குதிரை வண்டிகளைப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அப்போதான் நம்ம கம்பெனி இந்தப் புது பாலிசியைக் கொண்டு வந்துச்சு. ஞாயித்துக்கிழமை லீவுங்கிறதால, குதிரைகளெல்லாம் நல்லா ரெஸ்ட் எடுத்திருக்கும். அதனால திங்கள், செவ்வாய்க் கிழமைகள்ல அதுங்களை ரொம்ப தூரம் போக பயன்படுத்தலாம். வியாழக்கிழமை வரைக்கும் நாலு நாள் வேலை பார்த்ததால, வெள்ளிக்கிழமையன்னிக்கி குதிரைகள் எல்லாம் டயர்டாகி இருக்கும். அதனால பக்கத்துல இருக்குற இடங்களுக்கு வண்டிகளைப் பயன்படுத்தினோம். அந்த பாலிசியை கம்பெனியில இன்னுமா மாத்தாம வெச்சிருக்காங்க..?’’ 

இந்த விஷயம் எப்படி நிறுவனத்தின் காதுக்குப் போனதோ, தன் டிஸ்ட்ரிபியூஷன் கொள்கையை விரைவிலேயே மாற்றிக்கொண்டது

***        

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்