வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (05/03/2018)

கடைசி தொடர்பு:19:19 (05/03/2018)

கொல்லப்படும் கரடிகள்... கடத்தப்படும் குட்டிகள்... ஒரு துயர அத்தியாயம்! #AnimalTrafficking அத்தியாயம் 13

மருத்துவத்திற்காக மனிதன் உட்பட உயிரினங்களின்  உடல் உறுப்புகளைக் கடத்துவது சர்வசாதாரண நிகழ்வு. தந்தம், கொம்பு, தோல் போன்றவற்றுக்காகக்  கொல்லப்படுகிற விலங்குகளின் வரிசையில்  கரடிகள் கொல்லப்படுவது அதன் கால்களுக்காக. இதுவரை வந்த அத்தியாயங்களில் சொல்லப்படாத ஒரு துயரக்  கதை இது. தாயைக் கொன்றுவிட்டு குட்டிகளைக் கடத்துவது, உயிரோடு இருக்கும் பொழுதே கால்களை வெட்டுவது எனக் கரடிக்கு எதிரான யுத்த கதைகள் அதிர வைக்கின்றன. இரக்கம் என்கிற ஒன்றைத் தொலைத்த கூட்டம் கால்களை வெட்டி  எங்கே கடத்துகிறார்கள், கரடியின் குட்டிகளை எதற்குக் கடத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு கரடி கால்கள் கடத்தல் குறித்த சிறிய ஃப்ளாஷ் பேக்.

கடத்தப்படும் கரடிகள்

2002 மே மாதம் 8-ம் தேதி ரஷ்யா- சீனா எல்லையில் வாகனத் தணிக்கை தீவிரமாக நடக்கிறது. ஏனெனில் எல்லாவகையான கடத்தல்காரர்களும் தீவிரமாக இயங்குகிற முக்கியமான மாதம் அது. ஆயுதங்கள், போதைப் பொருள்கள் எனப் பறிமுதல் செய்துகொண்டிருந்த அதிகாரிகளைப் பதறவைத்த சம்பவம் அன்றுதான் நடந்தது. ஒரு வேனை சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்கிறார்கள். கரடியைக்  கடத்துகிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தார்கள். மூட்டையைப் பிரித்ததில் உள்ளே இருந்தது கரடியின் கால்கள். மொத்தம் 32 கால்கள். இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெட்டி எடுக்கப்பட்டதிற்கான அடையாளங்கள் கால்களில் இருக்கின்றன. விஷயம் தொலைக்காட்சி, செய்தித்தாள்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. ஓரினத்தின் பரிதாபக் கொலைகள் 2002-ம் ஆண்டிலிருந்துதான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாட்டு எல்லையில் இரண்டு சீனாக்காரர்கள் வந்த வேனை சோதனை செய்ததில் 17 இமாலய கரடிக் குட்டிகளை உயிருடன் பறிமுதல் செய்தனர். விசாரணையில் 10 தாய்க் கரடிகளைக்  கொன்று 17 குட்டிகளைக் கடத்தியதை ஒப்புக்கொண்டனர். 

2010 நவம்பர் மாதம் 20-ம் தேதி. வியட்நாம் சீனா  எல்லையில்  உள்ள நகரம் குவாங்ஸி ஜுவாங் (Guangxi Zhuang)  போதைத் தடுப்பு போலீஸார் சோதனையில் இருந்தனர். அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி விசாரித்ததில் 'குப்பை' கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர். சந்தேகப்பட்டு சோதனை செய்ததில் 173 கரடிகளின் கால்களைப்  பறிமுதல் செய்கிறார்கள். எல்லாக் கால்களும் சீனாவிலுள்ள ஒரு உணவகத்திற்குக் கொண்டுசெல்வதாக வாக்குமூலம் கொடுத்தார்கள். 

பறிமுதல் செய்யப்பட்ட கரடி  கால்கள்

2013-ம் ஆண்டு ரஷ்யாவிலிருந்து மங்கோலியா வழியாகச் சீன  நாட்டு எல்லைக்குள் வந்த ட்ரக் ஒன்றைச் சந்தேகத்தின் பேரில் சீனாவின் சுங்க அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். சல்லடை போட்டுத் தேடியதில் ஸ்கேன் மெஷினில் எதுவும் சிக்கவில்லை. கடைசியில் சிக்கியது ட்ரக்கின் சக்கரங்கள். ட்ரக்கின் பத்து சக்கரங்களுக்குள் 213 கரடிகளின் கால்களைக் கடத்தியிருந்தார்கள்.கடத்தலின் அடுத்த பரிமாணத்தை அறிந்துகொண்ட சுங்க அதிகாரிகள் உஷாரானார்கள். விசாரணையில் மொத்த கரடியின் பாதங்களும் சீனாவிற்குக் கடத்த இருந்தது தெரிய வந்தது. அவற்றின் சீன மதிப்பு 2.8 மில்லியன் யுவான். சர்வதேசச் சந்தையில் அவற்றின் மதிப்பு 457000 அமெரிக்க டாலர்கள். கரடி கால்களைக் கடத்துகிறார்கள் என உலகத்திற்குச் சொல்லிய மிகப் பெரிய கடத்தல் சம்பவம் இதுதான். 

2018  ஜனவரி மாதம் 31-ம்  தேதி ரஷ்யா- சீனா எல்லையில் அந்த வழியாக வந்த இரண்டு மினி பேருந்துகள் மற்றும் ஒரு காரை சோதனை செய்ததில் பதினைந்து பைகளில் 870 கரடியின் பாதங்கள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். வாகனங்களில் வந்த ஐந்து பேரும்  ரஷ்யா மற்றும் சீனாவில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இப்போது இரவும் பகலுமாக சோதனையில் இருக்கிறார்கள் சுங்க அதிகாரிகள். ஆனால், அப்படியும் கரடிகள் கால்களைக் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

கரடிகள் கால்கள் குறித்த புகைப்படங்கள் சொல்கிற கதைகளை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடிவதில்லை.  மேற்கூறிய மூன்று சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கால்களின் எண்ணிக்கை 1,253. அதாவது 313 கரடிகளின்  கால்கள்.  கரடியின் கால்கள் மட்டுமல்ல அதன் நகம், தோல், பற்கள் என எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்திருக்கிறார்கள். 313 கரடிகளும் கொல்லப்பட்டிருக்கின்றன. இதில் ரஷ்யா மற்றும் சீனாவில் மட்டுமே 69 சதவீதம் கரடிகள்  கொல்லப்பட்டுள்ளன. அங்கு மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 6,000 கால் பாதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அங்கு சுமார் 1,934 கரடிகள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை தவிர, நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கும், லாவோஸில் இருந்து வியட்நாம், சீனாவுக்கும், மியான்மார், வியட்நாமில் இருந்து ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் அதிக அளவில் கரடிகளின் உடல் பாகங்கள் கடத்தப்பட்டுள்ளன.  கரடிகள் கால்கள்  கடத்தலுக்கு முக்கிய நாடாக இருப்பது லாவோஸ். (LOAS) இந்த நாட்டிலிருந்து  தரைப்பகுதி வழியாகப் பக்கத்து நாடுகளுக்கு எதை வேண்டுமானாலும் இங்கிருந்து கடத்தலாம். ஏனெனில் சீனா, வியட்நாம், மியான்மார், கம்போடியா, தாய்லாந்து என விலங்கு கடத்தலுக்கு முக்கியக் காரணமாக இருக்கிற எல்லா நாடுகளும் லாவோஸ் நாட்டைச் சுற்றியே இருக்கின்றன. 

கைப்பற்றப்பட்ட கால்கள்

 

இவ்வளவு கால்களைக் கடத்துகிறார்கள் என்பது தெரியும். எதற்குக் கடத்துகிறார்கள் எனத் தீவிர ஆராய்ச்சியில் பதிலாக நமக்குக் கிடைத்தது சீனா. எல்லா மிருகங்களுக்கும் அங்கே விலை வைத்திருக்கிறார்கள். காரணம் மருத்துவம். பக்கவாத நோய்க்கும் ஆண்மைக் குறைவிற்கும் கரடியின் கால் சூப்பும், கறியும் முக்கிய மருந்தாக இருப்பதாகச் சீனர்கள் கருதுகிறார்கள். உலகின் மிக முக்கியமான நோய் ஆண்மைக் குறைவு. அதற்குப் பலியாகிற இன்னொரு உயிரினம் கரடி. அதன் காரணமாகவே இப்போது வரை கரடியின் கால்கள் கப்பலிலும், விமானத்திலும் பறந்துகொண்டிருக்கின்றன. குட்டிக் கரடிகளின் பித்தப்பை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதால் ஈவு இரக்கமின்றி குட்டிகளைக் கடத்துகிறார்கள். ஒரு கரடிக் குட்டியின் சர்வதேச விலை 10,000 அமெரிக்க டாலர்கள். பித்தப்பை எடுக்கப்பட்ட கரடியின் குட்டிகளைக் கறிக்காக 4,000 டாலர்களுக்கு உணவகங்களுக்கு விற்றுவிடுகிறார்கள். சீனா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஒரு கப் கரடி சூப்பின் விலை 750 அமெரிக்க டாலர்களில் இருந்து 1,500 அமெரிக்க டாலர்கள் வரை. லாவோஸ் நாட்டில் கரடிகள் கால்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிற விஸ்கி கௌரவத்தின் அடையாளமாக இருக்கிறது. ஜனவரி மாதமும் பிப்ரவரி மாதமும் கரடிகள் இனப்பெருக்கக்காலம் என்பதால் இந்த இரண்டு மாதங்களில் கரடிக் குட்டிகளைக் குறிவைத்து வேட்டையைத் தொடர்கிறார்கள்.

உலகம் முழுவதும் எட்டு கரடி இனங்கள் இருக்கின்றன. மலேசிய சூரிய கரடி, ஆசிய கறுப்புக் கரடி, சாம்பல்  கரடி, அமெரிக்கக் கறுப்புக் கரடி,பெரிய பாண்டா, சோம்பல் கரடி, துருவக் கரடி, மற்றும் பழுப்புக் கரடி என எட்டுக் கரடி இனங்களும் அதன் இறுதிக்கட்டத்தில்தான் இருக்கின்றன. இதில் துருவக்கரடிகளின் நிலை பரிதாபத்தில் இருக்கிறது. உருகிவரும் பனிப் பாறைகள், உணவில்லாமல் என இவை அழிந்துவரும் பட்டியலில் இருக்கின்றன. மற்ற எல்லாக் கரடிகளும் பலவகையான பயன்பாட்டுக்காகக் கொல்லப்பட்டு  வருகின்றன. கடத்தலுக்கு அதிகம் பலியாவது மலேசிய சூரிய கரடியும் ஆசிய கறுப்புக் கரடியும்தான்.

விலங்குகளுக்கு எதிரான போரில்  யாரையெல்லாம்  இழக்கிறோம் என்பதில்தான்  இருக்கிறது மனித குல எதிர்காலம்.


 


டிரெண்டிங் @ விகடன்