வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (05/03/2018)

கடைசி தொடர்பு:13:05 (05/03/2018)

இன்று அனிதாவின் பிறந்த நாள்... அவர் கேட்ட அந்த ஒரு கேள்வி நினைவிருக்கிறதா? #NEET

``என்னிடம் சில எளிமையான கேள்விகள் இருக்கின்றன. இங்கு எல்லோருக்கும் எல்லாமும் சரிசமமாகக் கிடைக்கின்றனவா?, எல்லோருக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்கிறதா?, எல்லோருடைய பொருளாதார நிலையும் ஒன்றுபோல இருக்கிறதா? இங்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லையா? எனக்கு பெரிதாக அரசியல் புரிதல்கள் எல்லாம் இல்லை. அரசியலும் எங்களுக்குத் தெரியும் என்பவர்கள், எனது இந்த எளிமையான கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும். இங்கு யாருக்கும் எதுவும் சரிசமமாகக் கிடைக்காதபோது, அனைவருக்கும் ஒற்றைத் தேர்வு என்பது யாரை ஏமாற்றும் வேலை?”

நீட் தேர்வு குறித்து அனிதா எழுப்பிய கேள்விகள் இவை. தமிழகத்தின் அனைத்துப் பெற்றோர்களின் மகளாகவும், அனைத்துச் சகோதர-சகோதரிகளின் தங்கையாகவும் `வாழ்ந்து'கொண்டிருக்கும் அனிதாவின் பிறந்த நாள், இன்று. தமிழகத்தின் அரசு  மருத்துவக் கல்லூரியில், எளியவர்களின் பிணி நீக்க மருத்துவம் பயிலவேண்டிய அனிதா, அரியலூர் பூமியில் சமாதியடைந்துள்ளார். 

அனிதாவின் பிறந்தநாள்

சென்ற வருடம் செப்டம்பர் முதல் தேதி தன் வீட்டில், தன் உயிரை அனிதா மாய்த்துக்கொண்டபோதுதான், தமிழகத்தில் உள்ள பலரும் `நீட்' தேர்வு என்றால் என்ன என்பதையே தெரிந்துகொள்ள ஆரம்பித்தனர். `நீட் தேர்வு என்றால் என்ன? அதற்கான பாடத்திட்டம் என்ன?' என்பது பற்றி பல ஆசிரியர்களுக்கே குழப்பம் இருந்தது. விமானநிலையங்களில் தரையிறங்கும் அரசியல்வாதிகளோ, `நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றுத் தருவோம்!' என சூளுரைத்தனர். `நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா!' என, பல மாணவர்களும் பெற்றோர்களும் குழம்பிக்கொண்டிருந்தனர்.  சில பெற்றோர் பல லட்சம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தி நீட் பயிற்சி மையங்களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தொடங்கினர். ஆனால், திருச்சி காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியான அனிதாவின் அப்பாவுக்கோ, கழிப்பிட வசதியற்ற வீட்டில் சிறுநீர் கழிப்பதற்கே வெகுதூரம் செல்ல வேண்டும் என்ற நிலையில் ஹாஸ்டலில் சேர்ந்து படித்துவந்த அனிதாவுக்கோ நீட் என்பது வெறும் நுழைவுத்தேர்வு மட்டுமல்ல. அவர்கள் காண நினைக்கும் அடிப்படை கனவுக்கே நுழைவுச்சீட்டு பெறச் சொல்லும் அறமற்ற போக்கு.

அனிதா

இறந்துபோன தன் தாயின் கனவை நிறைவேற்ற, எப்படியும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என அயராது படித்தார் அனிதா. தூக்கக் களைப்பு ஏற்பட்டால் காபி போட்டுக் கொடுக்கவோ, ஊட்டச்சத்துகள் நிறைந்த எனர்ஜி டிரிங்குகள் தரவோ அனிதாவுக்கு யாரும் இல்லை. சாணி மெழுகப்பட்ட தன் ஓட்டு வீட்டில் தன் லட்சியக் கனவை அடைய அவருக்கு உறுதுணையாக இருந்தது அவர் கண்ட அந்தக் கனவு மட்டும்தான்.

பத்தாம் வகுப்பில் 476 மதிப்பெண் பெற்ற அனிதா, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,200 மதிப்பெண்ணில் எடுக்காமல்விட்டது வெறும் 24 மதிப்பெண் மட்டுமே. தமிழில் 195, ஆங்கிலத்தில் 188, இயற்பியலில் 200, வேதியியல் 199, உயிரியல் 194, கணிதவியல் 200 என 1,200-க்கு 1,176 மதிப்பெண் எடுத்த அனிதா, தன் கனவுப்பாதைக்கான ஒளி கிடைத்துவிட்டதாக எண்ணினார். 

அனிதா

ஆனால் `நீட்' அதற்குத் தடையாக வந்தது. தமிழகத்தில் இருந்த பெருவாரியான பெற்றோர்களும் கட்சிகளும் எதிர்ப்புக் குரல் மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்தபோது, தன் கனவின் தடையை சட்டரீதியாக எதிர்கொள்ள உச்ச நீதிமன்றத்தின் படிகள் ஏறினார் 17 வயது மாணவி அனிதா. ஆனால், `நீட் தேர்வின் அடிப்படையில்தான் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 22-ம் தேதி உத்தரவிட, செப்டம்பர் முதல் தேதி தன் கனவையும் தன்னையும் மாய்த்துக்கொண்டார்.

தமிழகம் மட்டுமன்றி இந்தியாவே அனிதாவுக்கு ஏற்பட்ட அநீதிக்காகக் குரல்கொடுத்தது. தமிழகத்தின் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் நீட் தேர்வுக்கு எதிராகக் குரலெழுப்பினர். `தற்கொலைதான் தீர்வா?, அடுத்த வருடம் படிக்கக் கூடாதா?' என அனிதாவின் மரணத்தை சிலர் கேள்வி எழுப்பினர். தங்கள் அன்றாட வாழ்வையே போராட்டமாக வாழும் எளியவர்களால் நொறுங்கிய தனது கனவை சுமந்தபடி வாழ்வது அவ்வளவு சுலபமல்ல. லட்சங்கள் புரளும் நீட் கோட்சிங் சென்டர்களில் அனிதாக்கள் நுழைவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அனிதா இறந்து ஆறு மாதங்களாகிவிட்டன. அடுத்த நீட் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.  சாலை, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளற்ற கிராமத்தின் அரசுப் பள்ளிகளில் பயின்றுவரும் அனிதாவின் முகச்சாயலுடைய மாணவிகளைக் கடக்கும்போது நம் மனதில் நம்மையும் அறியாமல் நமக்குள்  எழும் அச்ச உணர்வுக்கு முடிவுகட்ட வேண்டும். அதுவே அனிதாவுக்கு நாம் செய்யும் நியாயமான அஞ்சலி.

ஒரு நிமிடம் கண்கள் மூடிக் கேட்டுப்பாருங்கள், அனிதா கேட்ட கேள்வி உங்களை உலுக்கும். ``என்னிடம் எளிமையான கேள்வி இருக்கிறது, இங்கு எல்லோருக்கும் எல்லாமும் சரிசமமாகக் கிடைக்கின்றனவா?''


டிரெண்டிங் @ விகடன்