வெளியிடப்பட்ட நேரம்: 08:02 (06/03/2018)

கடைசி தொடர்பு:08:11 (06/03/2018)

மகனின் கண்ணைக்கட்டி காட்டில்விட்ட தந்தை! - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

கதை

`னியாகத்தான் பிறக்கிறோம், வாழ்கிறோம், இறக்கிறோம். அன்பு, நட்பு இவற்றின் மூலமாகத்தான் `நாம் தனியாக இல்லை' என்கிற மாயத் தோற்றத்தை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும்' - உண்மையை, பொன்மொழியாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் அமெரிக்க நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்சன் வெல்ஸ் (Orson Welles). நேசத்துடன்கூடிய ஒரு புன்னகை, `நான் இருக்கிறேன்' எனச் சொல்லும் இறுக்கமான கைகுலுக்கல், ஆதரவான ஓர் அணைப்பு இவை செய்யும் மாயாஜாலம் கொஞ்சநஞ்சமல்ல. சோர்ந்து கிடப்பவரை உற்சாகம் கொள்ள வைக்கும்; வேதனையிலிருப்பவரைத் தேற்றும்; பெரிய இழப்பொன்றினால் நொடிந்துபோயிருப்பவரை ஆற்றுப்படுத்தும். அத்தனை மகத்துவமானது அன்பு. தனிமையைவிடக் கொடுமை வேறொன்று இருக்க முடியாது. உண்மையில் நம்மில் பெரும்பாலானோர் தனிமையிலில்லை. துயரங்களிலிருந்து தூக்கிவிட, இன்னல் ஏற்படும்போதெல்லாம் கரம்கொடுக்க, அன்பு செலுத்த யார் யாரோ இருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என மிக நீளமான பட்டியல் அது. அதை விளக்கும் உதாரணக் கதை இது.

`செரோக்கீ' (Cherokee) அமெரிக்காவின் ஆதிப் பழங்குடியினர்களில் ஒரு பிரிவினர். அமெரிக்க மண்ணின் பூர்வகுடியினர். அவர்களின் பழக்கவழக்கங்கள் வித்யாசமானவை. அதிலும், அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தனி. ஆண் குழந்தைகள் தைரியமானவர்களாக வளர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இயல்பாகவே பிள்ளைகளுக்குத் துணிவு இருக்கிறதா என்பதை சோதித்துக் கண்டறிவார்கள். மிகக் கடுமையான சோதனையாக அது இருக்கும். விலங்குகளை, விதவிதமான விஷ ஜந்துகளை எதிர்கொண்டு வாழ தைரியம் மிக அவசியம் அல்லவா! செரோக்கீ இனத்தைச் சேர்ந்த ஒரு தந்தை தன் மகனுக்கு ஒரு சோதனை வைத்தார்.

இருள் கவிய ஆரம்பித்திருந்த ஒரு மாலை நேரம் அது. அவர்கள் குடியிருந்த பகுதியிலிருந்து, வெகு தூரத்திலிருந்த ஓர் அடர்வனப் பகுதிக்குத் தன் மகனை அழைத்துக்கொண்டு போனார் அந்தத் தந்தை. அவனுக்கு வயது பதினான்கிருக்கலாம். அவனுடைய கண்களைக் கட்டிவிட்டார். ஒரு பாறையில் அமரவைத்தார்.

பழங்குடியினர்

``இதோ பாரு மகனே... இன்னிக்கி ராத்திரி முழுக்க இங்கேயேதான் இருக்கணும். என்ன நடந்தாலும், யார் வந்தாலும் கண் கட்டை அவுக்கக் கூடாது. எழுந்திரிச்சிப் போகவும் கூடாது. பாம்பு வந்து கடிக்கலாம்; கரடி வந்து அடிக்கலாம்... என்ன நடந்தாலும் இருக்கிற இடத்தைவிட்டு அசையக் கூடாது. காலையில சூரியன் உதிக்கிறவரைக்கும் இப்படியே இருக்கணும். அப்போதான் நீ முழு மனுஷன். புரியுதா?''

பையன் தலையை அசைத்தான்.

``அதே மாதிரி இங்கேருந்து போனதும் உன் வயசுப் பசங்ககிட்டயோ, வேற யார்கிட்டயும் இங்கே என்ன நடந்துச்சுனு சொல்லக் கூடாது. புரிஞ்சுதா?''

``சரிப்பா...''

அப்பா கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது. இருட்டு காட்டில் கவிய ஆரம்பித்தது. பையனுக்கு லேசாக உதறலெடுத்தது. பூச்சிகளின் ரீங்காரமே அவன் நரம்புகளை அதிரவைத்தது. சிறிது நேரம் கழித்து பக்கத்திலிருக்கும் புதரில் சலசலப்பு. `முயலாக இருக்குமோ? கருஞ்சிறுத்தையாகக்கூட இருக்கலாம். கண் கட்டை அவிழ்த்துவிடலாமா... யாருக்குத் தெரியப் போகிறது? கூடாது. அப்பா என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். அதைக் காப்பாற்றியாக வேண்டும்.'

பனி நடுக்கியதைவிட பயம் பாடாகப்படுத்தியது. ஆனாலும், அவன் அப்படியே உட்கார்ந்திருந்தான். சற்று தூரத்தில் ஓர் ஓநாய் ஊளையிடும் சத்தம். இப்போது அவன் யோசித்துப் பார்த்தான்... `என்ன நடக்கும்... உயிர் போகும். அவ்வளவுதானே... போகட்டும்.' இந்த தைரியம் அவனுக்குள் வந்ததும் அவன் எந்தச் சத்தத்தையும் பொருட்படுத்தவில்லை. புற்களை வருடும் காற்று, இலைகள் அசையும் சத்தம், ஆந்தைகளின் அலறல்... எந்தச் சத்தமும் அவனைச் சற்றுக்கூட அசைக்கவில்லை. அவன் அப்படியே அமர்ந்திருந்தான். இப்போது அவன் மனசு முழுக்க `நான் முழு மனுஷனாகணும்' என்கிற எண்ணமே நிறைந்திருந்தது.

காடு

அந்த பயங்கரமான இரவு மெள்ள மெள்ள நகர்ந்தது. காலையில் சூரிய ஒளி அவன் மேல் பட்ட பிறகுதான் அவன் கண்களைத் திறந்தான். அவனுக்கு நேர் எதிரே ஒரு சிறு பாறையில் அவனுடைய அப்பா உட்கார்ந்திருந்தார்... முதல் நாள் இரவு முழுக்கத் தன் மகனின் அசைவுகளைப் பார்த்தபடி அவரும் அங்கேதான் உட்கார்ந்திருந்தார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்