வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (06/03/2018)

கடைசி தொடர்பு:09:33 (06/03/2018)

ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை... அமெரிக்காவின் லேசர் ஆயுதங்கள்... வல்லரசுகளின் நிஜ ஆர்மி!

லகின் நிலங்கள் எல்லைகளால் பிரிக்கப்பட்டு கிடக்கும் வரை அதிகாரத்தை மையமாக வைத்து சண்டைகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கும். சிறிய குழுக்களுக்கு இடையே ஏற்பட்டால் அதற்குப் பெயர் சண்டை; பெரும் குழுக்களுக்கு இடையே ஏற்பட்டால் அதன் பெயர் போர். சண்டையாக இருந்தாலும் போராக இருந்தாலும் வெற்றியைத் தீர்மானிப்பதில் ஆயுதங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது.

ஏவுகணை

உணவுக்காகச் சண்டையிட்ட ஆதி மனிதன் முதல் கச்சா எண்ணைக்காக சண்டையிடும் இன்றைய மனிதன் வரை ஆயுதம் என்ற விஷயம் மாறவேயில்லை. தொடக்கத்தில் கற்களாலும், மரத்தாலும் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள், உலோகம் என்பது கண்டறியப்பட்ட பின்னர் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது எனலாம். ஈட்டிகள், துப்பாக்கிகள், ஏவுகணைகள், ரசாயன குண்டுகள், அணு குண்டுகள் என உலகநாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தயாரித்ததை அச்சத்தோடு பார்த்தார்கள் பொதுமக்கள். ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆயுதங்கள் வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகம் முழுவதும் நவீன ஆயுதங்களுக்கான சந்தை என்பது தேவையாகவே இருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை மீண்டும் உலக நாடுகளுக்கிடையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்

ரஷ்ய அதிபர் புதின்

முன்னர் இருந்த நிலையை ஒப்பிடும்போது தற்பொழுது அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான பனிப்போர் என்பது அவ்வளவாக வெளியே தெரியாவிட்டாலும், எப்பொழுதாவது வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையை நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகத்தான் உலக நாடுகள் பார்க்கின்றன. இப்பொழுதெல்லாம் 'ஏவுகணை' என்ற வார்த்தைதான் உலக நாடுகளை அதிகமாகப் பதற வைக்கிறது. வடகொரியாகூட ஏவுகணை என்ற ஒற்றை விஷயத்தை வைத்துத்தான் அமெரிக்காவையே பயமுறுத்திப் பார்க்கிறது. ஏவுகணைகளைப் பொறுத்தவரையில் தூரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வேகமும் முக்கியம். ரஷ்ய நீண்ட காலமாக பரிசோதித்து வந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி பெற்றதாக புதின் தெரிவித்திருக்கிறார். SS-18 Satan என்று பெயரிடப்பட்ட இது ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் சீறிப்பாயும். இந்த ஏவுகணையைக் கொண்டு உலகத்தில் எந்தப் பகுதிகளையும் அணு ஆயுதத்தால் தாக்க முடியுமாம். 

SS-18 Satan

ஒரு முறை ஏவப்பட்டுவிட்டால் இலக்கைத்தாக்கும் வரையில் இதனைத் தடுக்க முடியாது என்பது இதன் மற்றொரு சிறப்பு. மற்ற நாடுகளிடம் தற்பொழுது இருக்கும் அதிநவீன ஏவுகணைகளை ஏவுகணை தடுப்பு அமைப்புகள் மூலமாக வானிலேயே தாக்கி அழித்துவிட முடியும். ஆனால் இந்த ஏவுகணை இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்பொழுது வேறு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் உடனே வழியை மாற்றிக்கொண்டு இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. புதின் இந்த ஏவுகணையைப் பற்றி பேசியிருந்தால் சர்ச்சைகள் எதுவும் எழுந்திருக்காது. ஏவுகணையின் செயல்பாடுகளைப் பற்றி விளக்கிய வீடியோ ஒன்றுதான் அமெரிக்காவை கோபமடையச் செய்தது. அந்த வீடியோவில் வானில்பாயும் ஏவுகணை ஓர் இடத்தைத் தாக்குவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த இடம் அமெரிக்காவின் மாகாணமான புஃளோரிடாவைப்போல இருந்ததுதான் அதன் கோபத்திற்குக் காரணம். இது தவிர அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களையும் உருவாக்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

பதிலடி கொடுத்த அமெரிக்கா

லேசர் ஆயுதம்

இந்த விஷயம் தொடர்பாக எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருப்பதாக அமெரிக்கா பதிலடி கொடுத்தது. ரஷ்யாவிற்கு மீண்டும் பதிலடி கொடுக்கும் விதமாக லேசர் ஆயுதங்களைத் தயாரிக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த லேசர் ஆயுதம் கப்பற்படையில் பயன்படுத்தும் விதமாகத் தயாரிக்கப்படவுள்ளது. இதற்காக லாக்ஹீட் மார்டின் (Lockheed Martin) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2020-ம் ஆண்டில், இந்த லேசர் ஆயுதம் படையில் சேர்க்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலகப்போர்களின் போது ஆயுதங்களின் நிகழ்த்திய கொடூரமான விளைவுகளைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. மக்கள் மேல் அக்கறை கொண்ட உலகநாடுகள் "மனிதக் குலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை இனிமேல் தயாரிக்கக் கூடாது" என்று  தங்களுக்குள்ளே ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் புதிய ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்படும்பொழுது "இந்த ஆயுதங்கள் எங்களின் தற்காப்பிற்காக மட்டுமே" எனக் கூறப்படும். தற்போது இந்த ஆயுதங்களை அறிமுகப்படுத்தும் போதும் ரஷ்ய அதிபர் புதின் அதே வார்த்தைகளைத்தான் தெரிவித்திருந்தார். அது உண்மையாக இருந்தால் சரி!


டிரெண்டிங் @ விகடன்