பகலிலும் பார்க்கலாம் இரவு வானம்..! பிர்லா கோளரங்கத்தில் வேறு என்னவெல்லாம் விசேஷம்?

மொட்டை மாடியில் ஒருநாள் படுத்து வானத்தைப் பார்த்ததுண்டா? எண்ணிலடங்கா நட்சத்திரங்கள், கண் சிமிட்டும் நேரத்திற்குள் மறைந்துபோகும் எரி நட்சத்திரங்கள் ஆங்காங்கே அலைபாயும். எட்டமுடியாத தூரத்தில் வானம் இருந்தாலும் அதைத் தொட்டுப்பார்க்கும் ஆசை மட்டும் நம்மை விடுவதில்லை. சரி, பகலில் உங்களால் இரவு வானத்தை பார்க்கமுடிந்தால் எப்படி இருக்கும்? ஒருநாள் பிர்லா கோளரங்கத்திற்கு (Birla Planetarium) சென்று பாருங்கள்.

பிர்லா கோளரங்கம்

மேலும் படங்கள்

பிர்லா  கோளரங்கம்

எண் 4, காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம் பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் அமைந்துள்ளது பிர்லா கோளரங்கம். இது 1983ம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினால் நிறுவப்பட்டது. பின்பு, 1988ஆம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மையத்தோடு சேர்ந்து ஒன்றாகச் செயல்பட ஆரம்பித்தது. இந்தியாவில் தொழிலதிபராய் இருந்த பி.எம். பிர்லா அவர்களின் நினைவாகத்தான் இந்த பிர்லா பிளானட்டேரியம் கட்டப்பட்டது. 

இங்கே ஒவ்வொரு நாளும் பல மொழிகளில், வெவ்வேறு நேரங்களில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மூன்று மாதத்திற்கு ஒரு முறை, என நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்கின்றனர். ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பிர்லா பிளானட்டோரியம் செயல்படும். ஒரு விடுமுறை நாளை அறிவுப்பூர்மாய் கழிக்க வேண்டும் என விரும்புவர்கள் இங்குச் சென்றால் போதும். 

விண்வெளி ஆய்வு

மேலும் படங்கள்

கோளரங்கத்தில் 500 கலைப்பொருட்கள் கொண்ட எட்டு அரங்கங்கள் இருக்கின்றன. உடல் அறிவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, எரிசக்தி, வாழ்க்கை அறிவியல், புதுமைகள் (கண்டுபிடிப்புகள்), போக்குவரத்து, சர்வதேச பொம்மைகள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் பொருட்களின் அறிவியல் என அவை பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் பிர்லா கோளரங்கத்தை மேம்படுத்துவதற்காக பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் (2003 - 2007-ம் ஆண்டு) முன்மொழியப்பட்ட மொத்த செலவு 6.4 மில்லியன். இந்தியாவிலேயே முதன்முதலாக 360 டிகிரி வானதிரையரங்கம், ஒரு டி.எல்.பி ப்ரொஜெக்டர் (DLP Projector) மற்றும் ஒரு முழு டோம் கண்ணாடி ப்ரோஜெக்ஷன் சிஸ்டத்துடன் (full dome mirror projection system)  2009-ல் இங்கு அமைக்கப்பட்டது.

2009-ம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், நீல் ஆம்ஸ்ட்ராங், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் கல்பனா சாவ்லாவின் போர்ட்ரைட் ஓவியங்களை பிர்லா கோளரங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியது. கோளரங்கத்தைப் புதுப்பிக்க ₹1.5 மில்லியன் தொகையை தமிழக அரசு 2011-2012-ம் ஆண்டு வழங்கியது. பல்வேறு வானியல் நிகழ்வுகளை உருவாக்குவதற்காக ஒரு தனித்துவமான ஒப்டோ - மெக்கானிக்கல் கோட்டோ GM II ஸ்டார்பீல்ட் புரோஜெக்டர் (Opto mechanical GOTO GM II starfield ptojector)  கோளரங்கத்தில் உள்ளது. சிறப்பு விளைவுகளை உருவாக்குவதற்காக ப்ரொஜெக்டர் மற்றும் X- Y அட்டவணை அமைப்பைக் கொண்டுள்ளது. 

பார்வையாளர்கள்

மேலும் படங்கள்

இந்தக் கோளரங்கம் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. இதில் துளையுள்ள கோள வடிவ உள் கோபுரம் ஒன்று 15 மீட்டர் விட்டத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. 236 இருக்கை வசதிகளுடன் காற்று குளிரூட்டப்பட்ட அரங்கில் அழகான வான நிகழ்ச்சியைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியில் சூரியனின் அமைப்பு, வானம் மற்றும் அதில் ஏற்படும் பருவ மாற்றம், கிரகங்கள், கிரகம், நிலவு, வால் நட்சத்திரம், வால்மீன்கள், விண்மீன் சுழற்சிகள் போன்றவை காட்டப்படுகின்றன.  

கோளரங்கக் கட்டிடத்தில் உள்ள தியேட்டரை சுற்றி வானவியல் நிகழ்வுகள், விண்வெளி பயணங்கள், விஞ்ஞானிகள் புகைப்படங்கள், மாதிரிகள் கொண்ட சித்திரங்கள் மற்றும் சிலைகள் இடம்பெற்றுள்ளன. கோளரங்கத்தில் ஒரு கருத்தரங்கு மண்டபமும், வகுப்பறை ஸ்டூடியோவும் உள்ளது. வானியல் துறையில் உள்ள புகழ்பெற்ற வல்லுநர்களால் விவாதங்களும், பட்டறைகளும் இங்கு நடத்தப்படுகின்றன. கோளரங்கத்தில் ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் மட்டும் சிறப்பு நிகழ்ச்சியாக 7 மணி முதல் 9 மணி வரை இரவில் வானத்தைக் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. குழந்தைகளுடன் ஒருநாள் சென்று வாருங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!