Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதலைக் காற்றில் கடத்தும் சில்வண்டுகள்... இயற்கையின் இன்னிசை சுவாரஸ்யம்!

சாலையோரம் நின்று விசிலடிக்கும் ரோட்சைடு ரோமியோக்களைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கவிருக்கும் சீரிகையும் கிட்டத்தட்ட ஒரு ரோமியோதான். ஆம், தன் துணையைக் கவர இந்த விசிலடிக்கும் உத்தியைத்தான் பயன்படுத்துகிறது. அதென்ன சீரிகை?

நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு சில்வண்டு பற்றித் தெரிந்திருக்கும். இரவு முழுக்க ஒலி எழுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பூச்சி. ஆங்கிலத்தில் அதன் பெயர் Cicada. இந்த வகைப்பூச்சிகள் அனைத்தும் கிரிக்கெட் என்னும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அவற்றில் ஒன்றுதான் இந்தச் சீரிகை. அதாவது, Tree Cricket. இணை சேர்வதற்காக ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமான வழிகளைக் கையாளும். இலையை வைத்து ஓசை எழுப்பி, இணையை அழைப்பது இந்தச் சீரிகையின் ஸ்டைல். 

சில்வண்டு

Photo Courtesy: Natasha Mhatre, University of Bristol

எப்படி ஓசை எழுப்புகிறது?

இணையைக் கவர்வதற்கான ஓசையை எழுப்புவதற்காக முதலில் ஆண் சீரிகைகள் ஓர் ஒலிப்பெருக்கியைத் தயார் செய்கின்றன. இதற்காக முதலில் இருப்பதிலேயே பெரிய இலை ஒன்றைத் தேர்ந்தெடுத்து, சரியாக அதன் நடுப்பகுதியில் துளையிடுகின்றன. பின்னர், தன் முழு உடலையும் அந்தத் துளைக்குள் பொருத்திக்கொள்ளும். இதற்குப் பின்பு ஓசை எழுப்புவதற்கான பணிகளைத் தொடங்கும்.

ஒருவேளை பெரிய இலை எதுவும் கிடைக்காவிட்டால், அதைத்தேடி நேரத்தை வீணாக்குவதில்லை. உடனே கிடைக்கும் இலையை வைத்து ஓசை எழுப்பத்தொடங்கிவிடும். அந்த ஓசை வெறும் சப்தமாக மட்டுமின்றி, இணையை ஈர்ப்பதற்கான இன்னிசையாகவே இருக்கும். இதில் ஏதேனும் பெண் சீரிகை மயங்கினால், உடனே இணை சேர்வதற்கு முடிவுசெய்யும். 

ஆண் சீரிகைகளின் முன்னங்கால்களின் நான்காம் முட்டியில் இரண்டு செவிப்பறை உறுப்புகள் உள்ளன. ஓசை எழுப்புவதற்காக இவைதான் உதவுகின்றன. இலைகளில் தன் சிறகுகளை அடிக்கும்போது இலைகளைக் கவ்வியிருக்கும் முன்னங்கால்களில் உள்ள இந்தச் செவிப்பறைகள் ஓசையினை அதிகப்படுத்தும். தன்னைத் துளையினுள் பொருத்திக்கொண்ட பிறகு சிறகடிக்கும் சமயத்தில் இலைக்கும், சிறகுக்கும் மத்தியில் ஒரு சீரான அதிர்வெண்ணோடு ஒலி உருவாகும். இச்செயற்பாடு இவற்றின் மரபுரிமையோடு தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

சில்வண்டு

Photo Courtesy: Lisa Rainsong

ஆண் சீரிகைகளில் அளவில் பெரியவற்றால் அதி இனிமையான ஒலியினை எழுப்ப முடியும். இதனால் பெண் சீரிகைகள் விரைவில் ஈர்க்கப்படும். இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி தட்பவெப்பநிலைகூட இச்செயற்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. தட்பவெப்பநிலை அதிகமாக இருந்தால் அவற்றின் உடல் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும். அவ்வாறு இருக்கும்போது அவற்றால் வேகமாகத் தனது சிறகுகளை அடிக்க முடியும்; அதிகமான ஒலியும் எழுப்ப முடியும். ஆனால், தட்பவெப்பநிலை குறைந்து உடல் உஷ்ணம் குறைந்தால் சிறகின் வேகம் தடைப்பட்டு ஓசை குறையும். 

ஓர் ஆண் சீரிகை ஓசை எழுப்பி, அதனைப் பெண் சீரிகை ஏற்றுக்கொள்வது சரி. ஒரே நேரத்தில் பல சீரிகைகள் ஓசை எழுப்பினால் என்ன ஆகும்? ஒவ்வொரு பூச்சி எழுப்பும் ஓசைக்கும் ஓர் அதிர்வெண் உண்டு. இதனைப் பெண் சீரிகைகளால் எளிதில் இனம்கண்டுகொள்ள முடியும். அந்த அதிர்வெண்களில் எது பிடிக்கிறதோ, அதனைப் பெண் சீரிகை தேர்வு செய்யும். தோராயமாக ஒரு சீரிகையால் 3.6 கிலோ ஹெர்ட்ஸ் அளவுக்கு ஒலியெழுப்ப முடியும். 

இலைகளின் இடுக்கில் தன்னை இருத்திக்கொண்டு, சீரிகைகள் செய்யும் இந்த இயற்கை ஒலிபெருக்கி நிஜத்தில் ஒரு விந்தைதான். இனிமேல் எங்கேனும் சீரிகைகளின் ஓசையைக் கேட்டால் அதனை இரைச்சல் என நினைக்காதீர்கள்; ஏனெனில் அந்தக் காற்றில் ஒரு காதல் சம்பாஷணை நடந்துகொண்டிருக்கிறது! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement