வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (06/03/2018)

கடைசி தொடர்பு:21:03 (06/03/2018)

வந்தியத்தேவன், குந்தவை, பழுவேட்டரையர்... காமிக்ஸ் வடிவமெடுக்கும் ‘பொன்னியின் செல்வன்’! #PonniyinSelvan

வந்தியத்தேவன், குந்தவை, பெரிய பழுவேட்டரையர், நந்தினி, அருண் மொழிவர்மன் இந்தப் பெயர்களைக் கேட்டவுடனேயே `பொன்னியின் செல்வன்' வாசித்தவர்களின் மனதில் பரவசம் தொற்றிக்கொள்ளும். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னர் கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்டது `பொன்னியின் செல்வன்'. தமிழில் வெளிவந்த வரலாற்றுப் புதினத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இன்றுவரை உள்ளது.  சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்டது இந்தப் புதினம்.  புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாகச் சிகரம் என ஐந்து பாகங்களாகப் பகுக்கப்பட்டிருக்கும்  இந்த நாவல் 300-க்கு அதிகமான அத்தியாயங்களைக்கொண்டது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறையினரால் வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெருமை இந்த நாவலுக்கு உண்டு. 

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வனின் சில அத்தியாயங்கள் மட்டும் எடுத்து அடிக்கடி நாடகங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தொடங்கி பலராலும் சினிமாவாக்க முயன்று இன்று வரை அந்த முயற்சி பலன் அளிக்காமலேயே உள்ளது. இந்த நாவலை வாசிக்கும்போது வாசகர்களுக்கு உண்டாகும் பிரமாண்டம் காட்சி வடிவில் அரங்கேற்றுவதில் இன்று வரையிலும் நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது. சினிமா, நாடகம் போன்ற வடிவங்களைத் தாண்டி தற்போது காமிக்ஸ் வடிவில் `பொன்னியின் செல்வன்' நாவலைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர் `நிலா காமிக்ஸ்' குழுவினர்.

ponniyin selvan

உலகம் முழுவதுமே காமிக்ஸ் படிப்பதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழிலும் முத்து காமிக்ஸ், கண்மணி காமிக்ஸ் எனப் புகழ்பெற்ற காமிக்ஸ்களின் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் கதாபாத்திரங்களில் படங்கள் சூழலுடன் வரையப்பட்டு  கதை, அவர்களிடையே நடக்கும் உரையாடல்களாக வடிவமைக்கப்பட்டிருக்கும். தமிழில் இதுபோன்ற புகழ்பெற்ற நாவல்களை காமிக்ஸ் வடிவமாக மாற்றும் முயற்சிகள் குறைவு. அதுவும் `பொன்னியின்செல்வன்' போன்ற புதினத்தை காமிக்ஸ் வடிவமாக மாற்றுவது சற்று சவாலான ஒன்று. காமிக்ஸ்கள் தயாரிப்பதில் உள்ள சிரமங்கள், காமிக்ஸுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பு குறித்து `பொன்னியின் செல்வன்' நாவலை காமிக்ஸ் வடிவில் கொண்டுவந்துள்ள `நிலா காம்க்ஸின் உரிமையாளர் சரவணராஜனுடன் பேசினோம். காமிக்ஸ் தயாரிப்பில் பரபரப்பாக இருந்தவரிடையே பேசியதிலிருந்து...

ponniyin selvan

`` `பொன்னியின் செல்வன்' போன்ற நாவலை காமிக்ஸ் வடிவில் கொண்டுவருவது என்பது சவாலான ஒன்றுதான். மக்களிடையே ஏற்கெனவே பிரபலமாக உள்ள நாவல் என்பதால், மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய வேண்டும். நான் அனிமேஷன் துறையில் இருப்பதால் `காமிக்ஸ்' பற்றி சரியான முறையில் திட்டமிட்டு வெளியிட்டிருக்கிறோம். இந்த நாவல், பல அத்தியாயங்களைக்கொண்டது. அதை காமிக்ஸ் வடிவில் கொண்டுவரும்போது, பிரித்துத் தனித்தனிப் புத்தகங்களாகக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, இதுவரையிலும் 11 அத்தியாயங்களை, 5 புத்தகங்களாகக் கொண்டுவந்து  வெளியிட்டுள்ளோம். கடந்த புத்தகக் கண்காட்சியில் கொண்டுவந்த இந்த காமிக்ஸுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. காமிக்ஸைப் பொறுத்தவரையில் ஓவியத்தின் பங்களிப்பு முக்கிமானதாக இருக்க வேண்டும். அதுவும் `பொன்னியின் செல்வன்' போன்ற வரலாற்றுப் புதினங்களை காமிக்ஸாக மாற்றும்போது அதன் ஓவியம் குறிப்பிடத்தக்க வகையில் வர வேண்டும். காமிக்ஸுக்கான ஓவியத்தை கார்த்திகேயன் வரைந்துள்ளார். `நிலா காமிக்ஸ்' குழுவினர் அனைவரும் தங்கள் உழைப்பின் மூலம் இந்தப் புத்தகத்தைச் சிறப்பாக வெளியிட முடிந்தது'' எனச் சொல்லும் சரவணராஜன், `பொன்னியின் செல்வ'னை `2டி' அனிமேஷன் திரைப்படமாக எடுப்பதாகத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.  

பல காலமாக பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க பலரும் முயன்றுவரும் வேளையில், இவர்களின் முயற்சி கைகூடினால், அது  வாசகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்விதமாக அமையும்.


டிரெண்டிங் @ விகடன்