வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (07/03/2018)

கடைசி தொடர்பு:10:56 (07/03/2018)

உங்கள் பிள்ளைகளின் கோடை விடுமுறையைத் திட்டமிடும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் #GoodParenting

கோடை

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் பரபரப்பாகத் தேர்வு எழுதி வருகிறார்களா? அவர்களின் பதற்றம் நிச்சயம் உங்களையும் தொற்றியிருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் தேர்வுகள் முடிந்துவிடும். நுழைவுத் தேர்வுக்கான ஸ்பெஷல் கோச்சிங்குக்கு அனுப்பும் திட்டத்தில் பெற்றோர் பலரும் இருப்பீர்கள். ஆனாலும், ஒரு வாரமோ, இரு வாரங்களோ பிள்ளைகள் மகிழ்ச்சியோடு எங்கேனும் சென்றுவர வேண்டும் என்றும் நினைப்பீர்கள் அல்லவா! அதற்கான திட்டமிடலில் நீங்கள் அவசியம் செய்யக்கூடாதவை பற்றிப் பார்ப்போம். அது ஏன் செய்யக்கூடாதவை பற்றி என்ற கேள்வி எழுகிறதா... தேவையற்றதைக் கழித்துவிட்டால் பயனுள்ளது கிடைத்துவிடும்தானே!  


1. தனித்துத் திட்டமிடல்: முதலில் திட்டமிடுவது பெற்றோரான உங்களின் வேலை மட்டும்தான் எனும் நினைப்பிலிருந்து வெளியே வாருங்கள். ஏனெனில், இந்தக் கோடை விடுமுறை உங்களின் பிள்ளைகளுக்கானது. எனவே, அவர்கள் எவ்வாறு செலவழிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பின்பு, குடும்பத்தினர் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து ஆலோசித்து விடுமுறைக்கான திட்டமிடலை முடிவுசெய்யுங்கள். 

2. இதுதான் என வற்புறுத்தல்: ஆலோசனை செய்கிறேன் என்று அங்கு உங்களின் கருத்தைக் கடுமையாக வற்புறுத்தாதீர்கள். குடும்பத் தலைவர் எனும் முறையில் உங்கள்மீது மதிப்பும் சிறு அச்சமும் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடும். அதனால், நீங்கள் சொல்வதை மறுத்துப்பேச முடியாத நிலையில் இருக்கலாம். அவ்விதம் நிகழாத வண்ணம் நெகிழ்வான உரையாடலாக அமையட்டும். 

கோடை

3. பாடப் புத்தகங்கள் எடுத்துவரச் சொல்லுதல்: வெளியூர் செல்வது என முடிவெடுத்துவிட்டீர்கள் எனில், அங்கும் பாடப் புத்தகங்களை எடுத்துவர வேண்டும் என்ற விதியை உருவாக்காதீர்கள். அது, சுற்றுலா செல்லும் மனநிலையைக் கெடுத்துவிடலாம். சுற்றுலாவுக்கு வரவில்லை என்றும்கூட பிள்ளைகள் கூறிவிடலாம். ஒருவேளை, பிள்ளைகள் தாங்களாகவே பாடப் புத்தகங்களை எடுத்துவந்தால் அதற்கும் தடை போட வேண்டும். 

4. உறவினர் வீடுதான் என அடம்பிடித்தல்: இது ரொம்ப முக்கியமானது. வெளியூர் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கும் இடம், உறவினர் வீடாகவோ அதன் அருகே இருக்கும் சுற்றுலா தளமாகவோ இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். பிள்ளைகள் பார்ப்பதற்கு விரும்பும் இடங்களாகத் தேர்வு செய்வதே நல்லது. அப்போதே, சுற்றுலா மகிழ்ச்சியோடு அமையும். 

5. உள்ளூரைத் தவிர்த்தல்: கோடை விடுமுறையைக் கழிக்க வெளியூர் செல்வதுதான் ஒரே வழி என்று நினைத்துவிடவும் வேண்டாம். பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டே நண்பர்களோடு புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால், மறுக்காமல் சம்மதம் சொல்லுங்கள். உள்ளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பிள்ளைகள் கூறினால், அங்கும் அழைத்துச் செல்வதற்குத் தயக்கம் காட்டாதீர்கள். 

இவை தவிர, சுற்றுலா செல்லும்போது தன் நண்பர் யாரையாவது அழைத்துவருவதாக உங்கள் பிள்ளை சொன்னால், குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் எனக் கறார்தனம் காட்டாதீர்கள். பிள்ளையின் நண்பரின் பெற்றோரோடு பேசி, அவரை அழைத்துச் செல்ல அனுமதிபெறுங்கள். முடிந்தால் இரு குடும்பங்களும் இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. சுற்றுலா சென்றதுக்கான நினைவுகளை ஏந்தி வருவதற்கு தயாராகச் செல்லுங்கள். (கேமரா இருந்தால்தான் புகைப்படங்கள் எடுக்க முடியும் எனும் நிலை மாறிவிட்டது. செல்போனில் மிகச் சிறப்பான படங்களை எடுக்கமுடியும். ஆனால், பலரின் செல்போன்களில் பேட்டரி நீண்ட நேரம் நிற்பதில்லை. எனவே அதற்கான பேக்கப் வசதியோடு செல்லுதல் போன்றவை.)

இந்த ஆண்டின் கோடை விடுமுறை குடும்பத்தினரின் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமையட்டும். 
 


டிரெண்டிங் @ விகடன்