வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (07/03/2018)

கடைசி தொடர்பு:15:46 (07/03/2018)

வனப்பரப்பு அதிகரித்திருப்பது உண்மைதான்... ஆனால் கானுயிர் வளாகங்களின் நிலை என்ன? #WildlifeCorridor

கானுயிர் வளாகம் என்பது நிச்சயமாகக் குறைந்திருக்கிறது! என்னடா இது இப்பதான் நாட்டோட வனப்பரப்பு 2,853 சதுர கிலோமீட்டர் அளவுக்கு அதிகமாகியிருக்கிறதா அரசாங்கம் சொல்லிகிட்டு இருக்கு... இங்க இப்படி ஒரு செய்தினு தோணுதா?

கானுயிர் வளாகங்கள்

Photo Courtesy: R.Ganesh, NCF

இப்போ உங்க வீடு 5 சென்ட் நிலப்பகுதியில இருக்கு, உங்க பக்கத்து வீட்டுக்காரன் அதுல ஒரு சென்ட் நிலத்த அதுவும் நடுவுல இருந்து பிடுங்கிடுறான். இந்தப் பக்கம் இருக்குற 2 சென்ட் நிலத்துல இருந்து அந்தப் பக்கம் இருக்குற 2 சென்ட் நிலத்துக்குப் போக நீங்க அவன் பிடுங்கின அந்த ஒரு சென்ட் வழியாத்தான் போகணும். நிம்மதியா போயிட்டு வரமுடியுமா. ஒவ்வொரு முறை போகும்போதும் வரும்போதும் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத வேற ஒரு சூழலை நீங்க அனுபவிச்சா மிரண்டு போவீங்களா மாட்டீங்களா? இப்ப நான் சொன்னதை அப்படியே காட்டு விலங்குகளுக்கு ஒப்பிட்டுப் பாருங்க. அந்தப் பக்கத்து வீட்டுக்காரன்தாங்க நாம.

காடுகள் மற்றும் காட்டு விலங்குகள் ஆகியவற்றின் பிரச்னைகள் முக்கியமான விஷயமாகச் சமுதாயத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. கவலை என்னனா, நமக்கு அதைப்பத்திப் பேச நேரமில்லை. முதலில் காடுகளைத் தனியாகவும் காட்டு விலங்குகளைத் தனியாகவும்தான் நாம கவனிக்கிறோம். காட்டுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையிலான உறவை முதலில் நம்ம புரிஞ்சுக்கணும். காடில்லாம காட்டு விலங்குகள் இல்ல, காட்டு விலங்குகள் இல்லாம அது காடே இல்ல.

இவன் சொல்ற பக்கத்து வீட்டுக்காரனுக்கும் காட்டுப் பகுதி குறையுதுன்னு சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க யோசிக்கறது புரியுது. நம்ம வீட்டுக்கு நடுவுல இருக்குற இடத்த பறிகொடுத்துட்டு அதுவழியா போகவும் முடியாம போகுது, இந்தப் பக்கம் இருந்த உணவு தண்ணீர் எல்லாமே முடிஞ்சு வெறும் வயிறோட நிக்குறோம். அப்ப என்ன தோணும். எல்லையைத் தாண்டி பக்கத்து வீட்டுக்காரன் இடத்தையும் தாண்டி நம்ம இடத்துல இருக்குறத எடுத்துப்போம். காலப்போக்குல அவன் அந்த இடத்தையும் பிடுங்கிடுறான், அப்ப என்ன ஆகும். பசி பத்தும் செய்யுங்கறது மனுஷனுக்கு மட்டும் இல்லங்க விலங்குகளுக்கும்தான். எல்லையைத் தாண்டு எல்லாத்தையும் சாப்பிடுன்னு அவங்க குடும்பத்தோட வரத்தான் செய்வாங்க. அவங்க வீட்டைப் போய் நம்ம ஊராக்கி வீடாக்கி உட்கார்ந்திட்டோம். காலாகாலமாக எங்க இடம்டா இதுன்னு அவங்க மல்லுக்கு வர்றாங்க.

ஆக்கிரமிக்கப்பட்ட கானுயிர் வளாகங்கள்

Photo Courtesy: Divya karthikeyan

இதுக்கும் வனப்பகுதி குறைவுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கு. காடு அதிகாமாகியிருந்தால், காட்டு விலங்குகள் அவற்றின் தேவையைப் பூர்த்திசெய்ய ஊருக்குள் ஏன் வர வேண்டும். இப்ப கானுயிர் வளாகங்கள் (Wildlife Corridor) என்று ஒரு சொற்கூறு இருக்கு. ஒரு காட்டுக்கும் பக்கத்துல இருக்குற இன்னொரு காட்டுக்கும் இடையிலான பாதைதான் கானுயிர் வளாகங்கள். அதாவது, பக்கத்து வீட்டுக்காரன் நம்மகிட்ட பிடுங்கினானே ஒரு சென்ட் நிலம் அதுதான். தான் வாழ்கிற காட்டுல தண்ணீருக்கோ உணவுக்கோ பற்றாக்குறை ஏற்பட்டால் அந்த வளாகம் வழியாத்தான் விலங்குகள் பக்கத்துக் காட்டுக்குப் போய் உணவும் தண்ணீரும் தேடிக்கொள்ளும். பக்கத்து வீட்டுக்காரனான நாம இரண்டு பக்கமும் இருக்குற பகுதி காட்டுக்கு விட்டுட்டு, நடுவுல இருக்குற பாதைய நாட்டுக்கு எடுத்து ரோடு போட்டு, பாலம் கட்டியாச்சு. இப்ப தண்ணீரோ உணவோதான் இருக்குற காட்டுல தீர்ந்துபோனால் பக்கத்துக் காட்டுக்குப் போக வழியில்லாம விலங்குகள் கஷ்டப்படும். 

அட அதமட்டுமாங்க செஞ்சோம். நடுவுல கொஞ்சம் பாதையைக் காணோமேன்னு குழம்பிப்போன விலங்குகள் இந்தப் பக்கம் காட்டுக்கு வராததால் இந்தக் காடு சும்மாதானே இருக்கு என்று இதுக்குள்ள தொழிற்சாலைகள், மின்சார உற்பத்தி, வியாபார மரங்களை வளர்ப்பது இப்படி பலதும் செய்தோம். கேட்கப்போனால், நாங்க என்ன மரத்த வெட்டுனோமா, சுற்றுச்சூழலைக் கெடுத்தோமா, இன்னும் அதிகமா மரங்களை வளர்த்துத் தானே விட்றுக்கோம்? என்று எதிர்கேள்வி வேற. சார் நீங்க வளக்கிறது எல்லாமே காசு மரங்கள். அதுல சூழலுக்கு என்ன நன்மை இருக்கு. உங்களுக்கு வேணா லாபம் இருக்குன்னு சொல்லுங்க ஒப்புக்குறோம். உயிரோட்டமே இல்லாத காடு ஒரு காடா? இப்படி எல்லா உயிர்களையும் அழித்துவிட்டு வெறும் காட்டினைப் பாதுகாப்பதால் கிடைக்கப்போகும் பயன்தான் என்ன. வியாபாரத் தாவரங்களால் மண்ணுக்கோ சூழலுக்கோ எவ்வித பயனும் இல்லை. விலங்குகளால், பறவைகளால் பரப்பப்பட்டு இயற்கையாக வளரும் காடுகளால் மட்டுமே சூழலைக் காக்க முடியும்.

காட்டுயிர்களுக்கு பாதிப்பு

Photo Courtesy: Sathyamangalam Wildlife Sanctuary

டோடோ மரம் என்றழைக்கப்படும் கல்வாரியா மரம், டோடோ என்ற பறவை இம்மரத்தின் பழங்களை சாப்பிட்டுவிட்டுப் போடும் கழிவுகளில் இருந்து மட்டுமே வளரும். வேறு எந்த முறையிலும் அது வளராது. டோடோ பறவை அழிந்த பிறகு அம்மரத்தை வளர வைக்கவும் ஆராய்ச்சியாளர்களால் முடியவில்லை. இதுதான் இயற்கை. இயற்கையின் அனைத்துக்கும் மனிதனால் மாற்றுருவாக்க முடியாது என்பதற்கு டோடோ ஒரு சான்று. 2,853 சதுர கிலோ மீட்டர் காடுகள் அதிகரித்து இருந்தாலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் 2011-ல் இருந்ததில் 10,657 சதுர கிலோமீட்டர் காட்டுப்பகுதி இன்று இல்லை. இவற்றில் பாதிக்கும் மேல் கானுயிர் வளாகங்களாகவும் அதை ஒட்டிய காடுகளாகவும் இருந்தவை. காடுகளை இப்படித் துண்டு துண்டாகப் பிரித்துவிட்டால் உயிரினங்களுக்கு இடையில் இருக்கும் தொடர்பு அற்றுப்போய் தனிமைப்பட்டு இறுதியில் முற்றிலுமாக அழிந்தேவிடும்.


டிரெண்டிங் @ விகடன்