``என் ஏரியாவுல நான்தான் தாதா..!’’ புலி, சிறுத்தையைக் கூட மிரட்டும் முள்ளம்பன்றிகள் #Porcupines | Porcupines are as terrifying and dangerous as Tigers and Cheetahs

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (07/03/2018)

கடைசி தொடர்பு:19:28 (07/03/2018)

``என் ஏரியாவுல நான்தான் தாதா..!’’ புலி, சிறுத்தையைக் கூட மிரட்டும் முள்ளம்பன்றிகள் #Porcupines

ந்த உலகை, அதிலிருக்கும் மனிதர்களை விட்டு விடுங்கள், உண்மையில் விலங்குகளைப் படைத்தவன்தான் ஆகச் சிறந்த படைப்பாளியாக இருக்க வேண்டும். வெட்டுக்கிளிக்குக் காதுகளை காலில் வைத்தான். நண்டுகளுக்குப் பற்களை அதனுடைய வயிற்றில் வைத்தான். மண்புழுவுக்கு ஐந்து இதயங்களைப் படைத்தான். இறால் மீனுக்கு இதயத்தை அதன் தலையில் வைத்தான். நட்சத்திர மீனுக்கு மூளையே இல்லாமல் படைத்தான். இவற்றைத் தவிர்த்து ரசனையின் உச்சத்தில் படைத்த இன்னோர் உயிரினம் முள்ளம்பன்றி!

முள்ளம்பன்றி

உலகின் பல நாடுகளில் இருக்கின்ற உயிரினம் முள்ளம்பன்றி. அதன் உடலெங்கும் முட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். மற்ற விலங்குகளால் தொந்தரவு செய்யப்பட்டால் அல்லது அச்சமுற்றால் முள்ளம்பன்றி தனது முட்களை உயர்த்தி நிமிர்த்திக்கொள்வதோடு, வாலிலுள்ள முட்களை அசைத்து எச்சரிக்கை ஒலியொன்றையும் எழுப்பும், தொந்தரவு நீடிக்குமாயின், அது விரைவாகப் பின்னோக்கிச் சென்று எதிரியை தன் பின்புற முட்களினால் மோதித் தாக்கும். அப்போது அதன் முட்கள் எதிரி விலங்கின் உடலினுள் ஆழமாகச் சென்று கடும் காயத்தை ஏற்படுத்தும். எதிர் விலங்கு பல சமயங்களில் மரணிக்கவும் வாய்ப்பிருக்கிறது. முள்ளம்பன்றியின் முதுகிலும் வாலிலும் நீண்ட முட்களுக்குக் கீழே அமைந்துள்ள குட்டையான தடித்த முட்களே அதிக சேதத்தை விளைவிக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இம்முட்கள் முள்ளம்பன்றியின் உடலிலிருந்து அகன்று தாக்குதலுக்கு உள்ளான விலங்கின் உடலைத் துளைத்து விடுகின்றன. புலிகள் சிறுத்தைகள் போன்ற பெரிய விலங்குகள் கூட முள்ளம்பன்றியின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்திருக்கின்றன.

Porcupines

இனப்பெருக்க காலத்தில் பெண் முள்ளம்பன்றி, ஆண் முள்ளம்பன்றியோடு இணைந்தே இருக்கும். இரண்டு குட்டிகளை பெறுகிற முள்ளம்பன்றிகள், மனிதர்களைப் போல அவற்றை சேர்ந்தே பராமரிக்கின்றன. குட்டிகள் பிறக்கும் பொழுது அவற்றின் முள் மிருதுவாக இருக்கிறது. பிறந்த சில மணி நேரங்களில் அவை உறுதியாக மாறுகின்றன. ஏழு மாதங்களிலிருந்து பத்து மாதங்களுக்குப் பிறகு குட்டிகள் தனித்து வாழ ஆரம்பிக்கின்றன. ஒரு முள்ளம்பன்றியின் உடலில் சுமார் 30,000 வரை முட்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு முறை முட்கள் விழுந்து விட்டால் அடுத்த சில நாள்களில் முட்கள் மீண்டும் வளர்ந்து விடுகின்றன. எதிரி விலங்குகளை நோக்கி முள்ளம்பன்றிகள் முட்களை ஈட்டிப் போல வீசுவதில்லை. ஆனால், மற்ற விலங்குகள் நெருங்குகிற நேரங்களில் முட்களைக் கொண்டு தாக்குகின்றன. அப்படியான நேரங்களில் முட்கள் எதிர் விலங்குகளின் உடலில் பாய்கின்றன. முள்ளம்பன்றிகள் குழி தோண்டி குகை போன்ற இடங்களில் வசிக்கின்றன. பகல் நேரங்களில் உறங்கிவிட்டு இரவு நேரங்களில் மட்டுமே இறை தேடுகின்றன. வனப்பகுதிகளில் வசிக்கும் முள்ளம்பன்றிகள் 13 இருந்து 18 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

மனிதர்கள் முள்ளம்பன்றிகளை இறைச்சிக்காக வேட்டையாடுகிறார்கள். புலி, சிறுத்தை, காட்டுப்பூனை போன்ற பெரிய ஊனுண்ணிகளும் இவற்றை இரையாகக் கொள்கின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் முள்ளம்பன்றிகளைக் காப்பாற்ற பல நாடுகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. People’s Trust for Endangered Species (PTES) எனும் நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 1990களில் இருந்த முள்ளம்பன்றிகளின் எண்ணிக்கை தற்போது 50 சதவிகிதம் குறைந்துள்ளது என அறிக்கை கொடுத்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அவற்றை வேட்டையாடுவது எனக் கூறியுள்ளது. முள்ளம்பன்றிகள் விவசாய நிலங்களைத் தோண்டி குழி பறித்துவிடுவதால் அவற்றை விவசாயிகள் கொன்று விடுகிற துயரச் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

Porcupine

போர்குபெயின்கள் (Porcupines) என்று அழைக்கப்படும் இவை, அன்டார்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. விஞ்ஞானிகள் குழு முள்ளம்பன்றிகளை இரண்டு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் காணப்படும் முள்ளம்பன்றிகள். இன்னொன்று வட, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் முள்ளெலிகள் (Hedgehogs). இரண்டு விலங்குகளும் முட்களைக் கொண்ட உயிரினங்கள். முள்ளெலிகள் இனப்பெருக்கத்தின் பொழுது மட்டும் ஆண் முள்ளெலிகளைச் சார்ந்து வாழ்கின்றன. இனப்பெருக்கத்திற்குப் பிறகு தனித்தே வாழ்கின்றன. பிறந்த முள்ளெலிகளை ஏழு வாரங்களுக்குப் பிறகு தனித்து வாழ விரட்டி விடுகின்றன. முள்ளெலிகளுக்கு முட்கள் இருந்தாலும், அவை முள்ளம்பன்றியின் முட்களை போல நீளமாகவும், கூர்மையாகவும் இருக்காது.

மனிதனில் தொடங்கி  உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் தன்னை பாதுகாத்துக் கொள்ள  ஓர் ஆயுதம் இருக்கிறது. அவற்றை  பயன்படுத்த வேண்டுமா, வேண்டாமா என்பதை மற்ற விலங்குகளே முடிவு செய்கின்றன.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close