சொர்க்கத்தில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் தெரியுமா? - அன்பின் அருமை சொல்லும் கதை! #MotivationStory

கதை

ல்லோரும் சொர்க்கத்துக்குப் போகப் பிரியப்படுகிறார்கள். ஆனால், ஒருவர்கூட இறப்பதற்குத் தயாராக இல்லை’ இது ஒரு இங்கிலாந்து பழமொழி. வேடிக்கையாகச் சொல்லப்பட்டாலும், ஆழ்ந்த உண்மை பொதிந்திருக்கும் பழமொழி இது. யாருக்குத்தான் இறப்பதற்கு ஆசை வரும்? பிறக்கும்போதே ஒரு மனிதனின் இறப்பும் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இது இயற்கை. இறந்த பிறகு சொர்க்கம், நரகம் இரண்டில் ஏதாவது ஒன்றுக்குப் போய்ச் சேருவோம் என்பது உலக அளவில் பெரும்பான்மையான மதங்கள் வலியுறுத்தும் நம்பிக்கை. நம் கருடபுராணத்திலிருந்து, பைபிள் வரை சொர்க்கத்துக்கான குறிப்புகள் இருக்கின்றன. நல்லவனாக இரு; சக மனிதனிடம் அன்பாக இரு; யாருக்கும் கெடுதல் செய்யாதே, நினைக்காதே; பிறருக்கு உதவி செய்... போன்ற நல்லதனங்களைக் கடைப்பிடிக்கத்தான் சொர்க்கம், நரகம் இரண்டுமே வழிகாட்டுகின்றன. சரி... அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில், யாருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பதை அறிவுறுத்துகிறது இந்தக் கதை...

அதிகாலை நேரம்... ஒரு முதியவர், பாஸ்டனின் புறநகர்ச் சாலையில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். கூட அவருடைய நாயும் துணைக்கு வந்துகொண்டிருந்தது. அழகான இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி அவர் நடந்துகொண்டிருந்தார். திடீரென்று அது நடந்தது. ஏன், எப்படி என்று அவருக்குப் புரியவேயில்லை. அவர் இறந்து போனார். தனக்கு மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை அவரால் உணர முடிந்தது. ஆச்சர்யம் என்னவென்றால், அவருடன் அவருடைய நாயும் இறந்து போய், அவர் கூடவே வந்துகொண்டிருந்தது. அது வழக்கமான அவர் ஊர் அல்ல. அது வேறோர் இடம். சற்று தூரத்தில் ஒரு சிறிய மலை தெரிந்தது.

அவருக்கு அது ஆச்சர்யங்கள் நிறைந்த தினம். அவரால் துள்ளிக் குதித்து நடக்க முடிந்தது. பதினைந்து வருடங்களாக அவருடனேயே இருக்கும் அவருடைய செல்ல நாய்கூட, போட்டி போட்டுக்கொண்டு வேகமாக அவருடன் நடந்து வந்தது. முதியவர் அந்த மலைக்கு மேல் ஓர் கட்டடம் இருப்பதைப் பார்த்தார். நாயை அழைத்துக்கொண்டு மலைப் பாதையில் நடந்து மேலே போனார். அந்தக் கட்டடம் அழகான மார்பிள் கற்களால் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் வாயிற் கதவே மிரட்டலாக இருந்தது. வைர, வைடூரியங்கள் பதித்த அழகான, பிரமாண்டமான கதவு. முதியவர், கதவின் சிறு ஓட்டை வழியாகப் பார்த்தார். உள்ளே தங்கத்தால் ஆன சாலை நீண்டுகொண்டே போனது. `ஆஹா... இதுதான் சொர்க்கம்போல’ என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அவர்.

சொர்க்க வாசல்

உள்ளே ஒரு மேசைக்கு முன்பாக ஒரு காவலாளி அமர்ந்திருப்பதையும் முதியவர் பார்த்தார். குரல் கொடுத்தார்... ``எக்ஸ்க்யூஸ் மீ சார்... இதுதான் சொர்க்கமா?’’

``ஆமா’’ என்றபடி காவலாளி எழுந்து கதவுக்கருகே வந்தார்.

``எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?’’

``நிச்சயமா. இப்போத்தான் கொஞ்சம் ஐஸ் வாட்டர் பிடிச்சுக்கிட்டு வந்தேன். உள்ளே வாங்க...’’ என்றவர் விசையை அழுத்த கதவு திறக்க ஆரம்பித்தது.

முதியவர், தன் நாயைப் பார்த்தார். பிறகு கொஞ்சம் தயக்கமான குரலில், ``என் நண்பனையும் உள்ளே அழைச்சுக்கிட்டு வர்றதுக்கு அனுமதி இருக்கா?’’

உள்ளேயிருந்து குரல் கேட்டது... ``சாரி சார்... செல்லப்பிராணிகளுக்கெல்லாம் அனுமதியில்லை. நீங்க மட்டும் வர்றதுனா வரலாம்...’’

``இல்லை வேண்டாம். பரவாயில்லை’’ என்றபடி முதியவர் திரும்பி நடக்க ஆரம்பித்தார். அந்த பிரமாண்டக் கதவுகள் இறுக மூடிக்கொண்டன.

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு மற்றொரு சிறு மலையைப் பார்த்தார் முதியவர். அதன் மேலேயும் ஒரு கட்டடம் இருப்பது தெரிந்தது. அதற்கான பாதை அழுக்காகவும் தூசு நிரம்பியதாகவும் இருந்தது. முதியவர் அந்தப் பாதையில் நடந்தார். மேலே இருந்தது ஒரு விவசாயப் பண்ணை. முழுமையான வேலிகள்கூட போடப்படாத பண்ணை. கேட் என்று பெயருக்கு ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதைத் தள்ளிக்கொண்டு யார் வேண்டுமானாலும் உள்ளே சென்றுவிட முடியும். சுற்றிலும் புற்கள் முளைத்திருந்தன... நெடிய மரங்கள், பூஞ்செடிகள் என இயற்கை அழகுக் கோலம் விரித்திருந்தது. முதியவர் உள்ளே பார்த்தார்.

உள்ளே ஒரு மரநிழலில் காவலாளி ஒருவர் தீவிரமாக ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

``எக்ஸ்க்யூஸ் மி சார்...’’

காவலாளி நிமிர்ந்து பார்த்தார்.

``எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?’’

``நிச்சயமா. உள்ளே வாஙக். அங்கே ஒரு அடி பம்ப் இருக்கு. வேணும்கிற அளவுக்கு அடிச்சு தண்ணி குடிச்சிக்கங்க...’’ ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டினார் அந்தக் காவலாளி.

``என் ஃப்ரெண்டை அழைச்சுக்கிட்டு வரலாமா?’’ தன் நாயைக் காட்டிக் கேட்டார் முதியவர்.

``தாராளமா... அங்கே ஒரு கிண்ணம் இருக்கு. அதுல தண்ணி பிடிச்சு அவருக்கும் குடுங்க...’’

முதியவரும் அவருடைய செல்ல நாயும் உள்ளே போனார்கள். உள்ளே ஒரு பழையகால மாடல் அடி பம்ப் இருந்தது. அருகிலேயே கிண்ணமும் ஒரு சொம்பும் இருந்தன. முதியவர் அடி பம்ப்பை அடித்து நீர் பிடித்தார். கிண்ணத்தில் ஊற்றி நாய்க்குக் கொடுத்தார். தானும் தாகம் தீர நீரருந்தினார். பிறகு மெள்ள நடந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த காவலாளியினருகில் போனார்.

``இது என்ன இடம்?’’

``இதுதான் சொர்க்கம்...’’

``அப்படியா... எனக்குக் கொஞ்சம் குழப்பமா இருக்கே... இது பார்க்கறதுக்கு அப்படித் தெரியலையே... இன்னொரு இடத்துல ஒரு ஆள், `இதுதான் சொர்க்கம்’னு வேற ஒண்ணைச் சொன்னாரே...’’

நரக வாயில்

``ஓ... நீங்க சொல்ற இடத்துல வைர, வைடூரியம் பதிச்ச கதவு, தங்கத்தால ஆன ரோடெல்லாம் இருந்துச்சா?’’

``ஆமா. ரொம்ப அழகா இருந்துதே...’’

``இல்லை... அதுதான் நரகம்.’’

``அப்படின்னா, அவங்க சொர்க்கம்னு அந்த இடத்தைச் சொல்றது தப்பில்லையா? அதை நீங்க கண்டிக்கவோ, கேட்கவோ மாட்டீங்களா?’’

``அப்படியில்லை. பல நேரங்கள்ல அவங்க சொல்ற அந்தப் பொய் எங்களுக்குப் பல முறை உதவி செஞ்சிருக்கு. எங்க நேரத்தையும் மிச்சப்படுத்தியிருக்கு. உண்மையான, விசுவாசமான தங்களோட நண்பர்களை விட்டுட்டு வர்றதுக்கு யாராவது தயாராக இருக்காங்கனு வைங்க... நரகம் அவங்களை உள்ளே இழுத்துக்கும்...’’

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!