வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (08/03/2018)

கடைசி தொடர்பு:21:42 (08/03/2018)

`சூரியனுக்கு உங்கள் பெயரையும் அனுப்பலாம்!’ - நாசாவின் புதிய முயற்சி

நாசா முதன்முறையாகச் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் செயற்கைக்கோளைத் தயாரித்து வருகிறது. அந்த செயற்கைக் கோளுடன் மனிதர்களின் பெயர்களையும் சேர்த்து அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, அதற்காக விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவித்துள்ளது.

மனித இயந்திரங்கள் இதுவரை சூரியனுக்கு அருகில் போகமுடியாத நெருக்கத்துக்குச் செல்ல, நாசா ஒரு புதிய செயற்கோளை உருவாக்கி
வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்கைக்கோள் வரும் கோடைக்காலங்களில் விண்ணில் ஏவப்பட உள்ளது. அந்தச் செயற்கை
கோள் சூரியனுக்கு மிக அருகில் சென்று அங்குள்ள சூழலை ஆய்வு செய்ய உள்ளது. சிறிய கார் அளவுள்ள இந்தச் செயற்கை கோள் நேரடியாகச் சூரியனை சென்றடையும், இது சுமார் 40 மில்லியன் மைல் தூரம் வரை பயணிக்க உள்ளது. இதுவரை சூரியனைப் பற்றி தெரியாத பல புதிய விஷயங்ளை இந்தச் செயற்கைக்கோள் கண்டறியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இதனுடன் ஒரு புதிய முயற்சியையும் நாசா மேற்கொள்ள உள்ளது. இந்தச் செயற்கைக்கோளுடன் ஒரு சிறிய சிப் பொருத்தப்பட்டு அதில்
மனிதர்களின் பெயர்களைப் பதிவு செய்து சூரியனுக்கு அருகில் அனுப்பப்போகிறார்கள். இதற்காக மக்கள் தங்களின் பெயர்களையோ அல்லது தனக்குப் பிடித்த பெயர்களையோ இணையத்தில் பதிவு செய்யலாம் என நாசா அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏப்ரல் 27-ம் தேதி வரை பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.