வெள்ளை சுறாக்கள்...ஜெல்லி மீன்கள்...காட்டு நாய்கள் - உலகின் அபாயகரமான கடற்கரைகள்!

விடுமுறைக் காலங்களில் யாருக்குத்தான் கடற்கரைக்குச் சென்று பொழுதுபோக்க ஆர்வம் இருக்காது? அதிலும் வெள்ளையான மணல், தெளிவான நீர், கடற்கரை ஓரங்களில் தென்னை மரங்கள் என இருந்துவிட்டால்... சொல்லவா வேண்டும்? அனைவரும் பார்த்து ரசிக்கும் அழகிய இடமாகத்தான் கடற்கரையை நம் எல்லோருக்கும் தெரியும். கண்ணைக் கவரும் கடற்கரைகள் பற்றித்தான் நாம் பெரும்பாலும் கேள்விப்பட்டிருப்போம் அல்லது நேரில் பார்த்திருப்போம். ஆனால், உலகில் உள்ள கடற்கரைகளில் சில நாம் நினைப்பதுபோல அல்லாமல் ஆபத்தானதாகவும் இருக்கின்றன. அதே சமயம், அதில் இருக்கும் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் ரசிப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். அதில் முக்கியமான சில கடற்கரைகளைப் பற்றிக் காணலாம். 

கான்ஸ்பாய் சுறா

கான்ஸ்பாய் கடற்கரை, தென் அமெரிக்கா
இந்தக் கடற்கரை உலகின் மிகப்பெரிய வெள்ளை சுறாக்களின் தலைநகரமாக விளங்குகிறது. தென் அமெரிக்காவில் உள்ள கான்ஸ்பாய் மற்றும் டையஸ் தீவின் தண்ணீர் இணையும் இடத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுறாக்கள் காணப்படுகின்றன. இந்த தீவிற்குச் செல்லும் மக்கள் கேஜ் டைவிங் மூலம் கடலுக்குள் சென்று சுறாவைப் பக்கத்தில் பார்த்து ரசிக்கின்றனர். வெளியிலிருந்து கடற்கரையை ரசிக்கும் வரை மக்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால், கேஜ் டைவிங்கில்தான் ஆபத்து ஆரம்பிக்கிறது. அங்கு வாழும் சுறாமீன்கள் கேஜ் கம்பிகளை உடைத்து மனிதர்களைத் தாக்கும் தன்மை கொண்டது. 2013-ம் ஆண்டு ஒரு ஹனிமூன் ஜோடி கேஜ் டைவிங் மூலம் சுறாக்களை கண்டு ரசிக்கச் சென்றனர். அப்போது ராட்சத சுறாமீன் ஒன்று கேஜ் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த ஜோடி உயிர் பிழைத்தது. ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் இன்னும் அங்கு கேஜ் டைவிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. 

சொளபட்டி

சௌபட்டி கடற்கரை, இந்தியா: 
உலகின் மிகப்பிரபலமான கடற்கரைகளில் முக்கியமானது, சௌபட்டி கடற்கரை. உலகின் மிக மோசமான மாசடைந்த பீச்சும் இதுதான். இந்தக் கடற்கரை நீந்துவதற்கானது அல்ல, வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை கரைப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை கரைத்த சில நாட்களில் பூஜைப் பொருட்களும், கரைந்த சிலைகளில் மீதமுள்ள பாகங்கள் அதிக அளவில் கரை ஒதுங்கும். இதனால் அக்கடற்கரையே அதிகமான குப்பைக் கூளங்களால் நிரம்பி வழியும். இந்த மாசுகள் வருடந்தோறும் இருப்பதால், விநாயகர் சிலைகளைக் கரைக்கும்போது விழாவில் கலந்து கொள்ளும் மக்களுக்கு மாசடைந்த நீரால் பல தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. 2016-ம் ஆண்டு இந்தக் கடற்கரையில் தண்ணீரின் நிறமும், மண்ணும் முழுவதுமாக கறுப்பாக மாறியது. இதற்கு இந்திய அரசு எண்ணெய் கொட்டியதால்தான் மண் கறுப்பாக மாறிவிட்டதாகப் பதில் சொன்னது. ஆனால் எண்ணெய் கொட்டியதற்கான எந்தத் தடயமும் அந்த இடத்தில் இல்லை. இப்போது மிக மோசமாக மாசடைந்து தொற்றுநோய்களைப் பரப்பும் அபாயகரமான கடற்கரையாக மாறி இருக்கிறது. 

பிரேசர் தீவு

பிரேசர் தீவு கடற்கரை, ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் பிரேசர் தீவு உலகின் அதிக மணற்பரப்பைக் கொண்ட தீவு. இந்த மணற்பரப்பு சொர்க்கம் போல தோற்றமளிக்கும் இத்தீவுதான் உலகின் எகோடூரிசம் (Eco-tourism) மற்றும் கேம்ப்களுக்கு பெயர் பெற்றது. ஆனால் இங்குச் செல்லும் முன்னர் கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். சுறா மீன்களும், ஜெல்லி மீன்களும் இந்த தீவு முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தீவின் கடற்கரையில் அதிக விஷத்தன்மை கொண்ட ஸ்பைடர்களும், முதலைகளும், காட்டு நாய்களும் வாழ்கின்றன. இந்த தீவிற்கு செல்பவர்களை அதிகமாகத் தாக்குவது ஜெல்லி மீன்கள்தான். இக்கடற்கரையில் ஜெல்லி மீன்களும், சுறா மீன்களும் வருடத்திற்கு 60 முதல் 75 பேரைத் தாக்குகின்றன. 

லா - ரீ யூனியன் தீவுகள் கடற்கரை

லா - ரீ யூனியன் தீவுகள் கடற்கரை, இந்தியா
இந்தியப் பெருங்கடலில் முத்துக்கள் முளைத்ததுபோல லா - ரீ யூனியன் தீவுகள் காணப்படுகின்றன. பூமியில் உள்ள புதிரான இடங்களில் இதுவும் ஒன்று. இந்த தீவு, எரிமலை, காடுகள் எனப் பார்க்கவே பயங்கரமாகக் காட்சியளிக்கும். இந்த தீவிற்கு செல்லும்போது கடற்கரைப் பக்கம் மட்டும் செல்லக் கூடாது. உலக அளவில் இந்தக் கடற்கரைப் பகுதியில்தான் சுறா மீன்களின் தாக்குதல் அதிகமாக நடைபெறுகிறது. அதாவது எந்த அளவிற்கு என்றால், உலகில் சுறா மீன்களின் தாக்குதல் நடைபெறும் இடங்களில் 15 சதவிகித தாக்குதல் இக்கடற்கரையில்தான் நடைபெறுகிறது. 2013-ம் ஆண்டு இந்த தீவின் கடலோரப் பகுதியின் ஓரத்தில் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர கடலுக்குள் செல்ல எவருக்கும் அனுமதி கிடையாது. போனால் சுறாக்களுக்கு இரைதான்!

  வடக்கு செண்டினால் தீவு

வடக்கு செண்டினல் தீவு, இந்தியா: 
இது அந்தமான் பகுதியில் உள்ள ஒரு சிறிய தீவாகும். உலகின் யாரும் செல்ல முடியாத இடமாகவும், மனிதர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட இடமாகவும் இந்த தீவு உள்ளது. தொலைவில் இருந்து பார்க்கும்போது காடும், மலையும் சொர்க்கம் போலக் காட்சியளிக்கும். ஆனால், இந்த தீவு முழுக்க முழுக்க அங்கு வாழும் பழங்குடி மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மனிதர்கள் எனச் சொல்லும் யாரையும் அவர்கள் தீவுக்குள் விடுவதில்லை. பல ஆண்டுகளாக யாரும் நுழையாத இந்த தீவின் கடற்கரைப் பகுதியில் யாராவது கால்வைத்தால் அவர்களுக்குச் சாவு நிச்சயம். மொத்தம் 50 முதல் 400 பேர் வரை வாழும் பழங்குடியின மக்களை விசாரிக்கச் சென்ற ஹெலிகாப்டர் மீது அம்பு மழை பொழிந்து அதிகாரிகளை விரட்டியடித்தனர், அம்மக்கள். அந்த அளவுக்கு இந்தக் கடற்கரை பாதுகாக்கப்பட்ட ஒன்று. 

இதுபோல பல கடற்கரைகள் இன்னும் அபாயகரமானதாக இருக்கத்தான் செய்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!