வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (09/03/2018)

கடைசி தொடர்பு:16:29 (09/03/2018)

"நாள் நட்சத்திரம் பார்த்து நாய்க்கு பரணினு பேர் வச்சிருக்கோம்..!'' நாய் பிரியர்களின் நெகிழ்ச்சிக்கதைகள்

''என் சுக துக்கங்கள் அனைத்தும் என் நாய்க்கு மட்டுமே தெரியும்'' என்கிறார் ஒருவர். ''நாள் நட்சத்திரம் பார்த்து நாய்க்கு பரணினு பேர் வெச்சிருக்கோம்'' என்கிறார் இன்னொருவர். ''நாய் இல்லாத வீட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை'' என்கிறார் இன்னொரு நபர். ''என் புஜ்ஜிமா தருகிற பாதுகாப்பை இதுவரை வேறு யாரிடமும் உணர்ந்ததில்லை'' என்கிறார் ஒரு பெண். எத்தனை விலங்குகள் செல்லப் பிராணிகளாக இருந்தாலும் நிபந்தனையற்ற அன்பை நாய்களில் மட்டுமே உணர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கறுப்பி, பிளாக்கி, மணி, என்று ஏதோ ஒரு பெயரில் எல்லா ஊர்களிலும் ஒரு கதை இருக்கிறது. ஊரில் அனேக சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். “வெறும் பெண் குட்டியா போட்டுட்டு இருக்கு, எங்கயாவது கொண்டு போய் குட்டிகளை விட்டுவிட்டு வந்துடுறேன்” எனச் சொல்லி பிறந்த நாய்க்குட்டிகளை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டுபோய் எங்காவது விட்டுவிட்டு வருவார்கள். அடுத்த முறையும் பிரசவத்தில் பெண் குட்டியாக இருந்தால் சில நாள்களில், தாய் நாயையும் எங்காவது கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அடுத்த பத்தாவது நாளில் தாய் நாய் வந்து வாசலில் நிற்கும். அன்பைத் தின்று வளர்ந்த உலக நாய்களின் கதைகளைவிட தமிழ்நாட்டுக் கதைகள் மனதிற்கு நெருக்கமானவை.

 நாய்

கோவையில் இருக்கிற நண்பர் ஒருவரின் வீட்டில் பன்னிரண்டு வருடங்களாக இருந்த நாய் பப்பி. "வீட்டின் அத்தனை சுக துக்கங்களிலும் பங்கெடுத்திருக்கிறது. அதன் துணையான இன்னொரு நாயின் பெயர் நிலா. இரண்டு நாய்களும் வீட்டில் தனி ராஜ்யத்தையே நடத்தியிருக்கின்றன. அம்மாவிற்கு பப்பி என்றால் அவ்வளவு உயிர். எப்போதும் அவரின் காலடியில்தான் தூங்கும். அம்மா எங்கே போனாலும் பின்னால் போகிற நிழல் பப்பி. அந்த அளவிற்கு அம்மாவிடம் அன்பாக இருந்தது. அண்ணனின் கல்யாணப் பத்திரிக்கையில் பப்பி, நிலா எனப் பெயர் வருகிற அளவிற்கு வீட்டில் முக்கியமான நபர்களாக இரண்டு பேரும் இருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அம்மா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த சமயம் மூன்று வாரங்களுக்கு மேலாக பப்பியால் அம்மாவைப் பார்க்க முடியவில்லை. வீட்டிற்கு வருகிற ஒவ்வொருவரையும் முகர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும். அம்மாவைத்தான் தேடுகிறது என்பதை என்னால் உணர முடிந்தது. ஒருநாள் மருத்துவமனையிலிருந்து அம்மாவின் சேலைகளைத் துவைப்பதற்காக வீட்டிற்கு எடுத்து வந்திருந்தேன். அம்மாவின் சேலையை மோந்து பார்த்த பப்பி அந்தச் சேலையை சுற்றிக்கொண்டு அழுது புரண்டது. இப்போதும் என்னால் அது மறக்க முடியாத நிகழ்வு. கடந்த வருடம் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. பப்பியும் காய்ச்சலில் இருந்தது. ஒருநாள் பப்பி திடீரென இறந்து போனது. அதன் பிறகு அப்பாவின் உடல்நிலையும் சீராகியது. அப்பாவின் நோயை பப்பி வாங்கிக்கொண்டதாக ஊரார் சொல்ல ஆரம்பித்தார்கள். பப்பி இறந்த 21-ம் நாளில் நிலாவும் இறந்து போனது. மிகப் பெரிய துக்கமாக இருந்தது. நாய் இல்லாத ஒரு வீட்டை நினைத்துப் பார்க்க முடியாமல் இப்போது அன்பு என்கிற பெயரில் ஒரு நாயை வளர்த்து வருகிறோம்" என்கிறார் அவர். விரைவில் திருமணப் பந்தத்தில் இணைய இருக்கிற அந்த நண்பரின் திருமணப் பத்திரிக்கையைப் பார்க்க நேர்ந்தது. அதன் கீழாக இருந்த மூன்று பெயர்கள் பப்பி, நிலா, அன்பு… ஆசீர்வாதங்கள் பாஸு ….

திருமணபத்திரிக்கை

குன்னூரை பூர்வீகமாகக்கொண்டிருந்த பெண் அவர். அவர் வளர்த்த நாயின் பெயர் மணி. நாய் சத்தம்போட்டால் பெண்ணிற்குப் பிடிக்காது என்பதால் குறைப்பதற்குப் பதிலாக உள்ளுக்குள்ளேயே முனகுகிற ஒரு ஜீவன் மணி. அவரின் மூன்றாவது படிக்கும்  பெண் குழந்தைக்கு மணி என்றால் அவ்வளவு உயிர். குழந்தையை விட்டு மணி பிரியாமல் இருந்திருக்கிறது. குழந்தை எங்கே போனாலும் பின்னால் போகிற ஒரு ஜீவன். குழந்தைக்குப் பிடித்த விளையாட்டு, உலகம் எல்லாமே மணிதான். சென்ற வருடக் கோடை விடுமுறையில் குழந்தை கோவைக்குச் சென்றுவிட மணி சோர்ந்து போய் கிடந்திருக்கிறது. எப்போதும் வீட்டிற்கு வெளியே இருக்கிற சிறிய கூண்டில்தான் மணி படுத்திருக்கும். அன்றைய தினம் கூண்டைக் கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள்.

"ஊருக்குள் புகுந்த சிறுத்தை மணியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது. தூக்கிக்கொண்டு போகும்போதுகூட சத்தம் போடாமலே போய்டுச்சு" எனச் சொல்லி அழுதார். மணி இறந்து போவதற்கு மூன்று நாளைக்கு முன்னர் தன்னுடைய குழந்தையிடம் போனில் பேசி இருக்கிறார். பேசுவதை வாலாட்டிக்கொண்டே மணி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறது. பெண் போனை ஒலிபெருக்கியில் வைத்திருக்கிறார். குழந்தையின் குரலைக் கேட்ட மணி போனை நாக்கால் நக்க ஆரம்பித்து அழுது பிராண்டியிருக்கிறது. நாய் இறந்ததிலிருந்து ஒரு வாரம் வரை அந்தச் சம்பவத்தை அனைவரிடமும் சொல்லி ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் இறந்துபோன மணியைப் புதைத்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

நாய்

மதுரை எஸ் எஸ் காலனியில் அம்மா தங்கை என வசிக்கிற நண்பர் அவர். நெடுஞ்சாலையில் இருக்கிற ஹோட்டலில்தான் அந்த நாயை முதலில் பார்த்திருக்கிறார். பசிக்கு மூன்று பிஸ்கட்டுகளை வாங்கிப் போட்டிருக்கிறார். இரண்டு பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டுவிட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு போயிருக்கிறது. அடுத்த நாளும் இப்படியே தொடர்ந்திருக்கிறது. ஒருநாள் நாயைப் பின் தொடர்ந்து சென்று வீடியோ எடுத்திருக்கிறார். நாய் பிஸ்கட்டை மண்ணைத் தோண்டி புதைத்து வைத்திருக்கிறது. அந்த வீடியோவை வீட்டிலிருந்த அம்மாவிடம் காட்டியிருக்கிறார். வீடியோவை பார்த்த அம்மா நாயை வீட்டுக்குக் கூட்டிவரச் சொல்லியிருக்கிறார். இப்படித்தான் மைலா அவரது வீட்டிற்கு வந்திருக்கிறது. மைலா இருக்கிற தைரியத்தில் நண்பர் அம்மா தங்கையை விட்டு வெளியூருக்கு வேலைக்குப் போயிருக்கிறார். அம்மாவோடு அதீத அன்பில் இருந்திருக்கிறது மைலா. ஒருநாள் உடல் நலிந்து நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடி இருக்கிறது. அம்மா போன் செய்து சொல்லியிருக்கிறார். மைலாவின் உடலெல்லாம் எறும்பு மொய்த்திருக்கிறது. எறும்பு மொய்க்க ஆரம்பித்தால் நாய் இறந்துவிடும் என்பது கிராமத்தில் இருக்கிற ஒரு நம்பிக்கை. எல்லாருமே செத்துப் போய்விடும் எனச் சொல்லியிருக்கிறார்கள். மைலாவை சாகவிடக் கூடாது காப்பாற்றிவிட வேண்டுமென முயற்சி செய்கிறார். “முயற்சி பண்ணுவோம் அதையும் மீறி செத்தா பரவாயில்லை” என்கிற ரீதியில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று வைத்தியம் பார்த்திருக்கிறார். காலை, மாலை என ஒரு நாளைக்கு இரண்டு முறை குளுக்கோஸ் ஏற்றியிருக்கிறார். திட உணவுகள் எதுவும் இல்லை எல்லாமே திரவ உணவுகள்தான். அதுவும் ஊசி போடும் சிரிஞ்சில்தான் ஊட்ட முடியும். பொறுமையாகப் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறார். விடாது ஏறிய குளுகோஸும், அம்மாவின் பிரார்த்தனையும் மைலாவைக் காப்பாற்றியது. “காப்பாத்திட்டேன்ல” என்று சொல்லிய அவருடைய வார்த்தையில் ஒரு வைராக்கியம் தெரிந்தது. வைராக்கியம் என்கிற சொல்லுக்கு இன்னொரு பெயர் காதல்….

 பன்னிரண்டு வருடங்களாக இருந்த நாய் பப்பி

நாயை எங்கே தொலைத்தேன் எனத் தெரியாமல் மூன்று மாதங்கள் தேடித் திரிந்த ஒருவர், எப்போதோ இறந்துபோன நாய்க்காக இப்போதும் கோயிலில் பிரார்த்தனை செய்யும் ஒருவர், நாய் எனச் சொன்னால் கோபப்படும் ஒருவர் என ஊருக்கு ஒரு கதை இப்போதும் இருக்கிறது. நீங்கள் உணர்ந்த கதைகளை கமென்ட்டில் பதியுங்கள்.


டிரெண்டிங் @ விகடன்