Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`நீங்க சொன்னதைத்தானே செஞ்சோம்!' - ஒரு அட்மினின் புலம்பல் கடிதம்

அன்பில் அக்கவுன்ட் ஓனர்களுக்கு...!

நலமறிய அவா எல்லாம் ஒன்றுமில்லை. விழும் ஒவ்வொரு ஊமைக்குத்தும் எங்களுக்குத்தான் என்னும்போது நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்பதில் டவுட்டே இல்லை. தீபாவளித் திருநாளில் ஒன்றாக சீனிவெடி கொளுத்திவிட்டு வேட்டி தெறிக்க ஓடும்போது... பொங்கல் பண்டிகை நாளில் வாயை தற்காலிக கரும்புமெஷினாக மாற்றியபோது... பக்ரீத் பிரியாணிக்காக முந்தினநாளில் இருந்தே பச்சைத்தண்ணீர் பல்லில்படாமல் இருந்தபோதெல்லாம் தாயாய் பிள்ளையாய் பழகத் தெரிந்த நீங்கள் பிரச்னை ஒன்று வந்தவுடன் ''தம்பி இந்த இடத்துக்கு இத்தனை மணிக்கு போனீங்கன்னா நாலு அடி தருவாங்க, பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க'' எனத் தனியாக வண்டியேற்றி அனுப்பிவைப்பதெல்லாம் என்ன நியாயம்? அது ஒரு வரலாற்று சோகம்.

ஹெச்.ராஜா - அட்மின்

அதென்ன அசால்ட்டாக 'அட்மின் பண்ணிட்டான்' என ஒற்றை வார்த்தையில் முடித்துவிடுகிறீர்கள்? அதென்ன பா.ஜ.க தலைவராக இருப்பதைப் போன்ற அவ்வளவு சுலபமான வேலையா என்ன? ஒருநாள் ஒரே ஒருநாள் வாட்ஸ்அப் அட்மினாக இருந்து பாருங்கள். எத்தனை எத்தனை சண்டைகள்? எத்தனை எத்தனை பொதுவில் ஓப்பன் பண்ண முடியாத காட்சிகள்? எத்தனை எத்தனை 'ஒருமுறை ரஷ்ய அதிபர் பிராட்பிட் ஃபுட்போர்டில் தொங்கியபோது' தத்துவங்கள்? இவற்றை எல்லாம் தொடர்ந்து அரைநாள் படித்தாலே மண்டை வேகவைத்த சிக்கன் மோமோ மாதிரி சூடாகிவிடும். இதில் அந்த லகுடபாண்டிகளுக்கு விளக்கமளித்தால் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, 'அன்னிக்கு காலைல ஆறுமணி இருக்கும்' என முதலில் இருந்து வேறு ஆரம்பிப்பார்கள். 

இதெல்லாம் கூட பரவாயில்லை, 'நம் முன்னோர்களாகிய டைனோசர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை' என்ற ஃபார்வேர்டுகளை எல்லாம் என்ன செய்வது? அவர்களைப் பொறுத்தவரை திருநள்ளாறு சிக்னலில் நிற்கும் சாட்டிலைட்டிற்கு இன்னமும் க்ரீன் விழவேயில்லை, கோகோ கோலாவில் கால் நூற்றாண்டுக்கு முன் கலந்த குரங்கு ரத்தத்தை இன்னமும் யாரும் குடிக்கவேயில்லை, சூரியனிலிருந்து வாண்டர்லஸ்ட் ஹேஷ்டேக்கோடு கிளம்பிய புறஊதாக் கதிர்கள் பூமி தொடவேயில்லை, மே 2014-க்குப் பிறகு இந்தியாவில் வறுமையே இல்லை! - இதை எல்லாம் பார்த்தாலே... கிருட்டு கிருட்டு எனத் தலை சுற்றுகிறது. ' மொழி ' திரைப்பட எம்.எஸ்.பாஸ்கர்கள் நிறைந்த உலகம் அது. அப்படியே யாரோ ஒரு பெண், அன்பாகப் பேசினாலும், இது ஃபேக் அக்கவுன்ட்டா இருக்கும் என்கிற பயம் வந்து நல்ல நல்ல வாய்ப்புகளையெல்லாம் தட்டிப் பறித்துவிடுகிறது.

இவர்களாவது பரவாயில்லை. பூட்டிய வீட்டிற்குள்ளே இருந்து மாறி மாறி கலர்ப்பொடி அடித்துக்கொள்ளும் கும்பல். ஆனால், ஃபேஸ்புக் அட்மினாக இருந்து நாங்கள் படும்பாடு இருக்கிறதே! சும்மா இல்லாமல் எதையாவது நீங்கள் உளறித் தொலைய, அதற்கு கமென்ட் செக்‌ஷனில் வரும் கவுன்ட்டர்களைப் படிக்க முடியவில்லை ஐயா! நூறு தலைமுறைகளுக்கு முன் செத்துப்போன நியாண்டர்தால் கொள்ளுத்தாத்தாவை எல்லாம் கள்ளக்காதல் கதையில் அடைத்து வைத்து அடிக்கிறார்கள். அவர்கள் கழுவி ஊற்றும் வேகத்தில் ரத்த சப்ளையே இல்லாத கண்ணின் கார்னியாவில் இருந்தெல்லாம் குருதி குற்றாலமெனக் கொட்டுகிறது யுவர் ஹானர்!

இவ்வளவு சங்கடங்களை சந்திக்கும் எங்களைக் கண்டுகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, காட்டிக்கொடுக்காமலாவது இருங்கள்! ஆளைக் காட்டி அடிவாங்கித் தருவதோடு மட்டுமில்லாமல் நீங்கள் செய்த மொன்னை வேலைக்கு எங்களை வேலையைவிட்டே துரத்துகிறீர்கள். வேலையில்லாமல் சும்மா இருக்க நாங்கள் என்ன அ.தி.மு.க அமைச்சரவையிலா இருக்கிறோம்? இந்த நிலை தொடர்ந்தால் 'அட்மின்களுக்கான அநீதிகளை தட்டிக்கேட்கும் மய்யம்' ஒன்றை பிரமாண்டமான முறையில் தொடங்க வேண்டியது இருக்கும் என்பதை 'உண்டக்கட்டி' வாங்கி வீங்கிய கையோடு உக்கிரமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

அட்மின்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement