வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (09/03/2018)

கடைசி தொடர்பு:15:21 (09/03/2018)

6 கண்டங்கள்... 123 நாடுகள்... பெரியார் சிலை தாக்குதலுக்கு இணையத்தின் ரியாக்ஷ்ன்! #GoogleTrends

பெரியார்

சிலை என்பது வெறும் கல் அல்ல, ஒரு வரலாற்றின், சமூகத்தின், வெற்றியின், சுதந்திரத்தின் அடையாளம் என்பதுதான் உலக வரலாறு. திரிபுராவில் பிஜேபி ஆட்சியமைக்கும் அளவுக்கான வெற்றியைப் பெறுகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் திரிபுராவில் இருந்த லெனின் சிலை அகற்றப்படுகிறது. இது நடந்த பதற்றம் தணிவதற்குள் பிஜேபியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ட்விட் செய்கிறார். ''இன்று லெனின் சிலை இடிக்கப்பட்டது போல், தமிழகத்தில் நாளை  பெரியார் சிலையும் இடிக்கப்படும்'' என்கிறார். இன்னும் போராட்டம் வலுப்பெறுகிறது. இதன் முடிவில் வேலூரில் பெரியார் சிலை தாக்கப்படுகிறது. 24 மணி நேரம் கழித்து நான் ட்விட் செய்யவில்லை என் அட்மின்தான் பதிவிட்டுள்ளார் என்று பதில் அளிக்கிறார் ஹெச்.ராஜா. 

பெரியார் சிலை தாக்கப்பட்டதும் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கத் தொங்கியது. தமிழகம் மட்டுமல்ல உலகமே பெரியார் சிலை உடைப்புக்குக் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தது. இணையம் இந்த இரண்டு நாள்களில் சிலை என்று தேடினாலே பெரியார் பெயரைக் காட்டியதுதான் உச்சம்.

periyar google search

உலக அளவில் சிலை என்று தேடினால், தேடலில் இடம்பெறும் டாப் வார்த்தையாகப் 'பெரியார் சிலை' உள்ளது. 6 கண்டங்கள், 123 நாடுகளில் சிலை குறித்த தேடல் கடந்த 4 நாள்களில் அதிகம் இடம் பிடித்துள்ளது. தேடல் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் சிலை குறித்து அதிகம் தேடிய நாடுகளாகச் சீனா, நேபாளம், இரான் ஆகிய நாடுகள் உள்ளன. 

சிலை குறித்து தேடப்பட்ட தலைப்புகளில் லெனின் சிலை, திரிபுரா, சிலை உடைப்பு, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், பார்த்தீனன் கோவில் ஆகியவை தேடப்பட்டுள்ளன.

சிலை குறித்த தேடலில், திரிபுரா லெனின் சிலை, பெரியார் சிலை, யார் லெனின் போன்றவை உலக அளவில் தேடப்பட்டுள்ளன. இந்திய அளவிலான தேடலிலும் இதே முடிவுகள்தான் பிரதிபலித்தன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பெரியார் குறித்துத் தேடியுள்ளன. 

சுதந்திர தேவி சிலை, திருவள்ளுவர் சிலை, மோடி, புதிதாகக் கட்டப்படவுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை எனப் பல சிலைகளைப் பற்றியும் அதன் உயரங்களைப் பற்றியும் கூகுளில் நிறையப் பேர் தேடியுள்ளனர்.


டிரெண்டிங் @ விகடன்