வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (09/03/2018)

கடைசி தொடர்பு:12:18 (13/03/2018)

``புல்லாங்குழல் மாதிரிதான் விசிலும்... விடாம அடிங்க..! - தமிழ் இளைஞரின் சாதனை முயற்சி #TeethWhistling

``விசிலிங் பின்னணிப் பாடகராக வேண்டும்” வித்தியாசமான அதே நேரத்தில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு டேக்லைனைச் சொல்லி, தனது கனவைப் பற்றிப் பேசத் தொடங்கினார் Whistleman நிஸார் என்கிற நிஸாருதீன்.நிசார் nizhar

உதடுகளைக் குவிக்காமல், அசைக்காமல் விசில் பாடல்களால் அசத்தும் நிஸாருக்குத் தொண்டைமான் நல்லூர்தான் சொந்த ஊர். பள்ளி, கல்லூரிக் காலத்திலிருந்தே பாடுவதை மிகவும் நேசித்த நிஸார், தனியார் தொலைக்காட்சியின் குரல் தேடல் நிகழ்ச்சிகளில் முயன்றிருக்கிறார். முறையான கர்னாடக சங்கீதத்தில் பயிற்சி இல்லாத காரணத்தால் எலிமினேட் செய்யப்பட்ட நிஸாருக்கு, எலிமினேஷன் ஆனதுதான் இன்ஸ்பிரேஷன். ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட சக போட்டியாளர்களை நண்பர்களாக்கிக்கொண்டு, WB BOYS பேண்ட் இசைக்குழுவை உருவாக்கி, தனது விசில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் நிஸார். 

beatbox keshav with nizharஇசைக்குழுவின் துணையுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மெட்லியை விசில் பாடலாக உருவாக்கிய இவரது முயற்சியை, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் 11-வது தொடக்க நாள் அன்று, 14 முறை ஒளிபரப்பியிருக்கிறார்கள். தொடர்ச்சியான வரவேற்பால், மேடை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் மிளிரும் நிஸாரிடம் விசிலிங்கைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும், அடுத்த திட்டத்தைப் பற்றியும் கேட்டோம்...

``நடனம், வாய்ப்பாட்டு, இசை மாதிரியே விசிலிங்கும் கொண்டாடப்படணும்னு நினைக்கிறேன். `அயன்’ படம் தொடங்கி `கபாலி’, `இருமுகன்’, `காலா’ திரைப்படம் வரை, பாடலுக்கு இடையே வரும்  விசில் இசை பிரபலமடையத் தொடங்கியிருக்கு. சந்தோஷ் நாராயணன் உள்பட பல இசையமைப்பாளர்கள் சமீபகாலமா விசில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு வர்றதையும் பார்க்க முடியுது. பல விசில் கலைஞர்களை தொடர்ச்சியா தொடர்புகொண்டு விசில் இசையில் பல சோதனை முயற்சிகள் செஞ்சிட்டிருக்கேன். இதுல ப்ளோ அவுட், ப்ளோ இன், டீத் விஸ்லிங்னு பல ஸ்டைல் இருக்கு. இதையும் ஒரு மெயின்ஸ்ட்ரீம் இசை வடிவமா மாத்தணும்னு கனவு. விசில் மட்டுமான்னு போரடிக்கக் கூடாதில்லையா? கூடவே வாய் வழியாவே இசைக்கருவிகளோடு இசையைக் கொடுக்கிற பீட்பாக்ஸ் கலைஞர்களோடும் சேர்ந்து கச்சேரி களைக்கட்டுது” என்றார்.

 

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், பெஸ்ட் ஆஃப் இந்தியா ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை முயற்சிகளின் அங்கமான நிஸார், சமீபத்தில் 150 இசைக்கலைஞர்கள் அங்கம்வகித்த `லிம்கா’ புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை முயற்சியைப் பற்றிப் பேசும்போது, ``கேரளாவுல விசில் இசைக்கலைஞர்கள் அதிகம். அதற்கான ஊக்கம் நிறைந்த சூழல் அங்கே அதிகமாவே இருக்கு. விசிலிங்கை ஒரு கலையா இங்கே மதிக்கணும். அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எல்லாவிதமான ஊக்கமும் உதவியும் கிடைக்கணும்னு நினைக்கிறேன். உதடுகள் அசையாம பற்களைச் சேர்த்துவெச்சா கிடைக்கும் இடைவெளியில காற்றைச் செலுத்தி விசிலிங் பண்றேன். இதற்கு `டீத் விசிலிங்’னு பேரு. விசிலிங் ஓர் அழகான அனுபவம். இதுல ஸ்ருதி இருக்கு. இந்த இசையோட உயிர, ஒரு வடிவமா மாத்துறதுக்காக நிறைய உழைப்பேன்” என்கிறார் திட்டவட்டமாக.

``விசிலடிக்கிறது, மரியாதை குறைவான விஷயமா பார்க்கிற ட்ரெண்டு இன்னும் இருக்கே'' என்றதும், ``எதை வெச்சு விசில் மரியாதை குறைவுன்னு யோசிச்சாங்கன்னு புரியலை. இனிமே அப்படி இருக்கக் கூடாது. புல்லாங்குழல் பிடிக்கிற மாதிரி இதுவும் பிடிக்கணும். `என்னடா பொறுக்கித்தனமா விசில் அடிச்சிட்டிருக்க’னு கேட்காம, அப்பாவும் அம்மாவும் பாராட்டினதாலத்தான் இதையெல்லாம் செய்ய முடியுது. லட்சியத்தோடு செய்யப்படுற புது முயற்சிகள் பாராட்டப்படணும். ஆமாம்தானே பாஸு!” என்கிறார் இந்த விசில்மேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்