வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (11/03/2018)

கடைசி தொடர்பு:09:41 (11/03/2018)

ஏலகிரி போயிட்டு ரிட்டர்ன் வரும்போது ஜலகம்பாறை..! ஊர் சுற்றலாம் வாங்க - 15

சித்தர் குகைகள், மூலிகை அருவிகள்... 70 கொண்டை ஊசிகள்... கொல்லிமலை எனும் மர்மதேசம்!

'எல்லாராலயும் அங்கே போய்டமுடியாது.... மர்மதேசம் அவலாஞ்சி! 

 யானையை எங்க வேணாலும் பார்க்கலாம்... ஆனா, இங்க மட்டும்தான்...! கூர்க் - இந்தியாவின் ஸ்காட்லாந்து!

 

ஊர் சுத்தலாம் வாங்க

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, பட்ஜெட் படங்கள் காற்றாடும். ஆனால், அந்த பட்ஜெட் படம், பெரிய நடிகரின் படத்தைவிட நூறு மடங்கு திருப்தி தருமாறு அமைந்து விட்டால்... அதைவிட சந்தோஷம் வேறென்ன வேண்டும்? ஏலகிரி அப்படிப்பட்ட ஒரு சாய்ஸ்தான். இங்கே பெரிய நடிகரின் படம் என்று நான் சொன்னது... ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஸ்பாட்கள். 

original image

நீலகிரியில் எப்போதுமே சீஸன் டைம்தான். நீலகிரி வரை போய்த் திரும்ப முடியாதவர்களுக்கு, அதுவும் சென்னை, வேலூர்வாசிகளுக்கு அற்புதமான ஆப்ஷன் ஒன்றுண்டு. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி. என் போன்ற ‘ஏழைகளின் நீலகிரி’ என்றும் இதைச் சொல்லலாம் என்று பிறகுதான் தெரிந்தது. 30 ரூபாய்க்கு மீன் வறுவல் கிடைக்கிறது; 50 ரூபாய்க்கு போட்டிங் போக முடிகிறது; 20 ரூபாய் என்ட்ரி ஃபீஸில் கொத்துக் கொத்தாக மலர்க் கண்காட்சியில் செல்ஃபி எடுத்தேன்; வரும் வழியில் திருப்பத்தூர் பக்கத்தில் 10 ரூபாய்க்கு கும்பகோணமே வெட்கிப் போகும் அளவுக்குச் சுவைகொண்ட டிகிரி காபி உறிஞ்சினேன்; 60 ரூபாய்க்கு தட்டு நிறைய சிக்கன் நூடுல்ஸ் கிடைத்தது; 700 ரூபாய்க்கு ஏ.ஸி ரூமில் இரவு ‘ஸ்டார் மூவிஸ்’ சேனலில் ஆஸ்கார் விருது நிகழ்ச்சி பார்த்துக் கொண்டே தூங்கினேன். 25,000 ரூபாய் பேக்கேஜில் ஹிமாச்சல் போய் பாராகிளைடிங் போன என் நண்பனை, 750 ரூபாய்க்கு பாராகிளைடிங் போய்விட்டு வந்து வெறுப்பேற்றினேன்.

image 26

உடனே கொஞ்சம் வெயிட் பார்ட்டிகள்... ‘நம்ம ஸ்டேட்ஸுக்கு ஏலகிரி ஒத்துவருமா’ என்று கணக்குப்பிள்ளையாக மாறி விடாதீர்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்து காரில் செல்லும்போது, சில பாடாவதி ரோடுகளுக்கு டோல்களில் வசூலித்து விடுகிறார்கள். அந்த வாலாஜா டோல்... ஏற்கெனவே ஒரு முறை டயர் வெடித்து, டயர் இழையில் உயிர் பிழைத்த அனுபவம். திரும்பவும் அதே டோலில் இறங்கி விசாரித்தேன். ‘‘வேலை நடந்துக்கிட்டிருக்கு சார்’’ என்றார்கள். (அதாவது, நடக்காமலே இருக்கு!)

image 63

திருப்பத்தூர் சாலைதான் ஏலகிரிக்கு வழி. வாணியம்பாடி தாண்டியதும் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். ‘மும்பை - 1,273 கி.மீ’ என்று போகும் வழியில் போர்டு பார்த்தேன். ஆனால், ஏலகிரி திரும்புவதற்குப் பக்கத்தில் ஏலகிரிக்கான எந்த போர்டும் இல்லை. பாதி கிருஷ்ணகிரி வரை போய் ‘யு-டர்ன்’ அடித்துத் திரும்பி வந்தேன். கீழே இறங்கியதும்தான் போர்டு வைத்திருந்தார்கள். ‘இனிமே வயசுக்கு வந்தா என்ன... வரலேன்னா’ மொமென்ட். நேராகப் போய் இடதுபுறம் திரும்பினால் ஏலகிரி. காரில் ஏலகிரி செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் - ஏலகிரியில் பெட்ரோல் பங்க்குகள் கிடையாது என்பதால், மலையேறும் முன்னரே எரிபொருள் நிரப்பிக் கொள்வது உத்தமம்.

boat house

ஏலகிரிக்கான பாதையைப் பார்த்ததுமே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. மலைச்சாலை ஆரம்பித்ததும்தான் ரியல் பயணமே ஆரம்பித்தது. அதைவிட ஒவ்வொரு கொண்டை ஊசிகளுக்கும் தமிழ்ப் புலவர்களின்/மன்னர்களின் பெயர்களைச் சூட்டியிருந்ததற்காகவே எண்ணற்ற விருப்பப் பொத்தான்கள் (இன்ஃபினிட்டி லைக்ஸ் பட்டன்). திருவள்ளுவர், பாரி, கம்பன், ஓரி, காரி, ஆய், போகன், அதியமான் என்று மொத்தம் 14 கொண்டை ஊசிகள். ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை போல கன்னாபின்னாவென இல்லை. டீசன்ட்டான வளைவுகள். 14-தான் ஏலகிரிக்கு ராசியான நம்பர் போல. பொன்னேரி கிராமத்திலிருந்து 14 கி.மீ; 14 கொண்டை ஊசி வளைவுகள்; சுற்றிலும் 14 கிராமங்கள்... இதுதான் ஏலகிரி. 14-வது கொண்டை ஊசி வளைவில் ஒரு தொலைநோக்கி இல்லம் உண்டு. டெலஸ்கோப் வழியாக மொத்த ஏலகிரியையும் பார்க்கலாம். திருப்பத்தூர், வாணியம்பாடி வரை ஜூம் ஆகிறது. இரவு நேரங்களில் என்றால், ஜிகுஜிகுவென நட்சத்திரக் கூட்டங்களை இந்த டெலஸ்கோப்பில் பார்க்கலாம்.

VW Passat

ஏலகிரியில் தங்குவதற்கு மொத்தமே 50 முதல் 60 விடுதிகள்தான் இருக்கின்றன. நீலகிரி அளவுக்கு ஏலகிரி அவ்வளவாகப் பிரபலமடையாததால் இருக்கலாம். ‘‘டூரிஸ்ட்டை நம்பித்தான் லாட்ஜ் கட்டினேன். சனி ஞாயிறுகள்லதான் ஓரளவு கூட்டம் வருது. மத்த நேரம் எப்ப வேணாலும் தைரியமா வரலாம்! தாராளமா ரூம் கிடைக்கும்!’’ என்றார் ஒரு லாட்ஜ் உரிமையாளர். ரூம்களும் மலிவாகவே இருக்கின்றன. காஸ்ட்லி பார்ட்டிகளுக்கு கொஞ்சம் இன்டீரியராகப் போனால்... 3,500 ரூபாய்க்கு ரூம் கிடைக்கிறது. சிலவற்றில் உணவு, விளையாட்டு, ட்ரெக்கிங் என்று எல்லாவற்றுக்கும் சேர்த்தே வசூலித்து விடுகிறார்கள்.

Ride

கடல் மட்டத்திலிருந்து 1,410 மீட்டர் உயரத்தில் இருப்பதால், மிதமான குளிருக்கும் பதமான வெயிலுக்கும் ஏலகிரி கேரன்ட்டி தருகிறது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தொட்டு ஏலகிரிக்கு வரலாறு இருக்கிறது. ஒரு காலத்தில் ஜமீன்தாரர்களின் தனிப்பட்ட சொத்தாக ஏலகிரி இருந்ததாம். சில ஜமீன்களின் வீடுகளை இன்றும் ‘ரெட்டியூர்’ எனும் இடத்தில் பார்க்கலாம் என்றார்கள். 1950&களின் துவக்கத்தில்தான் இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது ஏலகிரி. இப்போது, 14 மலைக்கிராமங்கள் சேர்ந்த அழகிய மலைவாச ஸ்தலமாக உருவெடுத்திருக்கிறது ஏலகிரி. முழுக்க முழுக்க விவசாயம்தான் ஏலகிரிக்கு மூச்சு. மிளகு, மலைப் பழங்கள், ஸ்டார் ஃப்ரூட், சாமை போன்றவை அருமையாக விளைகின்றன.

park

ஏலகிரி & ஆறேழு நாட்கள் தங்கி என்ஜாய் பண்ணும் அளவுக்குப் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் கிடையாது. ‘ஏன்டா இங்கே வந்தோம்’ என்று சலிப்படைய வைக்கும் இடமும் கிடையாது. நேச்சர்ஸ் பார்க், ட்ரெக்கிங், போட்டிங், கோவில்கள் என்று எல்லாமே இங்கே உண்டு. போட்டிங் போகும் வழியில் வரிசையாக மீன் வறுவல்கள் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எல்லாமே ஜிலேபி, கட்லா, உளுவை என்று ஏரி மீன்கள்தான். புங்கனூர் ஏரிதான் ஏலகிரியின் ஸ்பெஷல். புங்கனூரின் ஸ்பெஷல் இந்த மீன்கள். இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி என்பது அதைவிட ஸ்பெஷல். எனவே, அத்தனை மாதங்களிலும் தண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது இந்த ஏரியில். எல்லா நேரங்களிலும் போட்டிங் உண்டு. ஒரு தடவை நவம்பர் மாதம் நல்ல மழையில் ஏலகிரி வந்து, பார்க்கிங் ஏரியா வரை தண்ணீர் நிரம்பி வழிந்து, கண்ணே தெரியாத பனிமூட்டத்தில் இருந்தது ஏரி. ‘போட்டிங் கிடையாது சார்’ என்று திருப்பி அனுப்பப்பட்ட அனுபவமெல்லாம் எனக்கு நேர்ந்திருக்கிறது. எனவே மழைக்காலங்களில் ஏலகிரிக்குச் செல்லும்போது முன்விசாரணை தேவை.

ஜலகம்பாறை

பக்கத்தில் குழந்தைகளுக்கான பார்க் இருக்கிறது. பீச்சில் இருக்கும் பலூன் சுடுதல், பந்து எறிதல் போன்ற விளையாட்டுகளெல்லாம் வைத்துச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் வட இந்தியர்கள். அரைமணி நேரம் போட்டிங் முடித்துவிட்டு எதிரே நேச்சர்ஸ் பார்க். அதாவது, இயற்கைப் பூங்கா. மூங்கில் வீடுகள், பிரம்மாண்டமான ரோஜாத் தோட்டங்கள், பறித்தாலும் சிரித்துக் கொண்டிருக்கும் கொத்துக் கொத்தான மலர்கள், கீழிருந்து மேலெழும் நீரூற்று... இயக்குநர் ஷங்கர் பார்த்தால் விடமாட்டார். குழந்தைகளுக்கு செமத்தியான என்ஜாய்மென்ட் உண்டு.

jalagamparai

ஏரிக்கு அருகே மங்கலம் கிராமத்தில் மூலிகைப் பண்ணை ஒன்று இருக்கிறது. மூலிகைகள் இங்கே அன்லிமிட்டெட். வெரைட்டியான பெயர்கள் சொன்னார்கள். வாயில் நுழையவே இல்லை. ஆனால், எல்லா நோய்களுக்கும் மூலிகைகள் கிடைக்கின்றன. தி.நகர் ரங்கநாதன் தெருபோல், செல்லும் வழியெங்கும் ஸ்டார் ஃப்ரூட், ப்ளம்ஸ், மலை ஆப்பிள், கொய்யா, தேன் என்று எக்கச்சக்க விஷயங்கள் பாட்டிகளும் ஆன்ட்டிகளும் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே ஏலகிரி தயாரிப்பு. நடுவில் புரோக்கர்கள் இல்லை. ‘‘வீட்ல புடுங்கி அப்படியே கொண்டாந்தேன்... தேன் மாதிரி இனிக்கும்யா.. வாங்கிட்டுப் போங்க!’’ என்று பெயர் தெரியாத ஒரு டஜன் பழத்தை, பாட்டி பாசமாக என் தலையில் கட்டினார்.

nature park

மங்கலம் கிராமத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில், சுவாமி மலை என்ற கோயில் இருக்கிறது. விசாரித்தால் கடல் மட்டத்தில் இருந்து 4,338 அடி உயரத்தில், ஏலகிரி உச்சிக்கு வந்துவிட்டோம் என்றார்கள். செடிகள், பூக்கள், மரங்களுக்கு நடுவே படிகள்போல் நடைபாதை அமைத்திருந்தார்கள். பச்சைப் பசேலென நடந்து போனேன். கோயில் அமைந்திருந்த இடமே அழகு! மலை உச்சியில் மட்டும் மறக்காமல் தெய்வங்கள் எப்படியாவது செட்டில் ஆகிவிடுகிறார்கள். புங்கனூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள நிலாவூர் அம்மன் கோயிலும் அப்படித்தான். இங்கேயும் பூங்கா அமைத்திருந்தார்கள்.

nature park board

‘ஏதோ பாராகிளைடிங்னு ஓப்பனிங்ல வந்துச்சே’ என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் ஆச்சரியமாவது ஃபீல் ஆகிறது. ஆம்! விளையாட்டுப் பிரியர்களுக்கு ஏலகிரி செமையான சாய்ஸ். ஸ்போர்ட்ஸ் கேம்ப் எனும் விளையாட்டு மைதனாத்தை விசாரித்துப் போனேன். இங்கு ‘ஏடிவி’ எனும் ‘ஆல் டெரெய்ன் வெஹிக்கிள்’ ரைடிங் இருந்தது. எல்லாச் சாலைகளிலும் ஓட்டக் கூடிய வாகனம் என்று அர்த்தம். ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்ஸிகா ஓட்டுவாரே... அதே வாகனம். ஹன்ஸிகா போல் பல பெண்கள் ஏடிவி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னால் அதைப் பிடித்தபடி ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா மாதிரி சிலர் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அதாவது, இதை ஓட்டுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஏடிவி&யில் டார்க் அதிகம். ஓவராக முறுக்கினால், ஏலகிரியைத் தாண்டிவிடும் என்பதால் இந்தப் பாதுகாப்பு.

nature park 3

பாரா கிளைடிங்கும் இருந்தது. இதற்கும் ரொம்ப தில் வேண்டும். சிறுவர்கள்கூட அந்தரத்தில் பலூனில் தொங்கியபடி பாரா கிளைடிங் செய்ததைப் பார்த்தேன். இது தவிர ரோப் ரைடிங், ட்ரீ கிளைம்பிங் என்று ‘போகோ’ சேனலில் வரும் நிறைய கேம்கள் இருந்தன. பெயின்ட் பால் எனும் மிலிட்டரி கேம் & ஒரு கூட்டாக விளையாடலாம். அதாவது, எதிரிகளைச் சுட்டு வீழ்த்த வேண்டும். நிஜமாகவே பெயின்ட் குண்டுகள் உங்கள் மேல் படப் பட... உயிர் பாயின்ட் குறைந்து கொண்டே இருக்கும். ஜாலியாக இருந்தது. 100 ரூபாயிலிருந்து விளையாட்டுகள் ஆரம்பிக்கின்றன.

swami malai hills

இது தவிர, ‘கரடிப்பாறை’ எனும் இடத்தில் ட்ரெக்கிங் போய் விட்டு வரலாம். ட்ரெக்கிங்கில் இருந்து விளையாட்டுகள், தங்கல், உண்ணல் என்று எல்லாமே பேக்கேஜாகவும் வைத்திருக்கிறார்கள். ஒய்எம்சிஏ கேம்ப் எனும் தனியார் நிறுவனத்தில் விசாரித்தேன். இதற்காகவே ஒரு வெப்சைட்டே வைத்திருக்கிறார்கள். ‘‘1,000 ரூபாயில் தங்குவதில் ஆரம்பித்து, ஒரு நாள் உணவு 200 ரூபாய் வரை எல்லாமே சீப்பா பண்ணுவோம்’’ என்று புரொமோஷன் செய்தார் இதன் செகரெட்டரி ஜார்ஜ் பிரின்ஸ்.

swami malai temple

கார்/பைக் இருப்பவர்கள், சும்மா ஏலகிரியின் 14 கிராமங்களையும் ஒரு ரவுண்ட் அடிக்கலாம். நிலவூர் என்ற கிராமத்துக்கு விசிட் அடித்துப் பார்த்தேன். மலையடிவாரத்தில் டெட் எண்டாக முடிந்தது பாதை. நிமிர்ந்து பார்த்தால், மலை தொடங்குகிறது. கீழே திண்ணை அமைத்த வீடுகள். நம் வீட்டில் கொல்லைப் புறத்தில் என்ன இருக்கும்? ஆடு, மாடு, மேய்ச்சல் நிலம், கிரிக்கெட் கிரவுண்டு, பாத்ரூம்...? ஆனால், இங்கே ஒவ்வொருவர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் மலை இருக்கிறது.

trekking in swami malai

பக்கத்தில் பலா மரங்கள், கொஞ்சம் உயரமானவர்கள் உட்கார்ந்திருந்தாலே தலையில் இடிக்கும்போல. அத்தனை உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ‘‘வேணும்னா ஒரு பலாப் பழம் பறிச்சுட்டுப் போங்க தம்பி!’’ என்று நீண்ட நாள் பழகியதுபோல் உரிமையாகச் சொன்னார் ஓர் அப்பத்தா. இது தவிர சிலரின் வீட்டுத் தோட்டங்களில் தேன் கூட்டிலிருந்து தேனெல்லாம் எடுக்கிறார்கள். ‘வறுமையின் வீட்டில் வசதியான சொத்து அன்புதான்’ என்பதுபோல், இந்தக் கிராமங்கள்தான் ஏலகிரியின் சொத்து.

சுவாமி மலை

கிராமம், கோவில், ஏரி, படகுச் சவாரி, ட்ரெக்கிங் எல்லாம் ஓகே! அருவி? அண்ணன்களுக்கு கௌரவமே தங்கைகள்தான். அதுபோல், மலைகளுக்கு ஆதாரமே அருவிகள்தான். ஆனால், ஏலகிரியில் அருவி இல்லை என்பது பெண்கள் இல்லாத வீடுபோல் கொஞ்சம் டல் அடிக்கும் விஷயம்தான். மலை இறங்கி கீழே இடதுபுறம் திரும்பி திருப்பத்தூர் வழியாகச் சென்றால், ஜலகம்பாறை என்றொரு அருவி இருப்பதாகச் சொன்னார்கள். நான் சென்ற நிலவூர் கிராமத்திலிருந்து 5 கி.மீ மலை வழியாகப் போனாலும், ஜலகம்பாறை வரும் என்றார்கள்.

ஏலகிரி

மலை இறங்கி காரில் கிளம்பினேன். ஜலகாம்பாறை, ஜலகம்பாறை, ஜலாகாம்பாறை என்று விதவிதமாக போர்டுகள் பார்த்தேன். எல்லாமே ஒரே ஏரியாவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ஏலகிரியில் இருந்து 40 கி.மீ.தான். தெருத் தெருவாகப் போனால், ஈஸியாகப் போகலாம். திருப்பத்தூரில் இருந்து சாலை படுமொக்கையாக இருந்தது. ஆனால், பசுமை விகடன் அட்டைப் படத்துக்கு ஏற்றாற்போல் கிராமங்கள்... வயல்கள்... மாடுகள்... உழவுத் தொழில் என்று பாதை க்ளீஷேவாக இருந்தது.

ஏலகிரி பாராக்ளைடிங்

ஜலகம்பாறை என்ட்ரன்ஸில்... பணியார விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. 5 பணியாரம் 10 ரூபாய்க்குத் தந்தார்கள். பணியார அத்தையை வாழ்வாங்கு வாழ்த்திவிட்டு, குரங்குகளுக்குத் தெரியாமல் சில பணியாரங்களை டிக்கியில் போட்டுக் கொண்டேன்.

yelagiri

அருவி நுழைவுவாயிலில் வழக்கம்போல், வண்டியை மறித்து கக்கத்தில் பையைச் சொருகிக் கொண்டு, எச்சில் டிக்கெட் கிழித்துக் கொடுத்து பார்க்கிங் காசு வாங்கினார்கள். ஜலகம்பாறைக்கு எப்போது வேண்டுமானாலும் விசிட் அடிக்கலாம். 7 மணிக்கு மேல் பார்க்கிங் கட்டணம் கிடையாதுபோல. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் நாவல்களில் வருவதுபோல் லொக்கேஷன் செமத்தியாக இருந்தது. இடது பக்கம் மலையடிவாரத்தில் சிவலிங்க வடிவில் கோயில் இருந்தது. முருகப் பெருமான்தான் இங்கே ராஜா. தைப்பூசம் அன்று ஜலகம்பாறை கிடுகிடுக்கும் அளவு கூட்டம் வருமாம். கீழேயே தண்ணீர் சலசலப்புச் சத்தம், அருமையான சிம்பொனி. அருவி நீராகத்தான் இருக்க வேண்டும்.

falls

இங்கேயும் குரங்குகளின் தொந்தரவுதான் தாங்க முடியவில்லை. அதையெல்லாம் சட்டை செய்யாமல், தின்பண்டங்கள் விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. கையில் குச்சியுடன் குரங்குகளுக்குப் பயம் காட்டியபடி, ஒன்றரை டஜன் ரஸ்தாலிப் பழங்களை 50 ரூபாய்க்குக் கொடுத்தார் ஆயா ஒருவர். குரங்குகளுக்குத் தெரியாமல் பழம் தின்றபடி 50 படிகள் மேலேறினால், செமித்தே விட்டது. ஏலகிரி மலையில் இருந்துதான் இந்த அருவி நீர் வருவதாகச் சொன்னார்கள். பெரிதாகப் பிரபலமாகாததாலோ என்னவோ, சுற்றுலாவாசிகள் அவ்வளவாக இல்லை.

இன்னொரு ஊருக்கு போக

ஜலகம்பாறைக்கு சீஸன் ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை. டயட் இருப்பதுபோல், ஸ்லிம் அண்ட் ஸ்லீக்காக விழுந்து கொண்டிருந்தது அருவி. மூலிகைகளை அடித்து விழுவதால், இதில் குளித்தால் நோய்கள் தீரும் என்று வழக்கம்போல் சொன்னார்கள். நிஜமாகவே மூலிகை வாசம் அடித்தது. ‘ஹைட் சார்; வெயிட் சார்; வொயிட் சார்’ என்பதுபோல் உயரத்திலிருந்து தடிமனாக வெள்ளையாக பொத பொதவென விழுகிறது நீர். செப்டம்பர் & அக்டோபர் மாதங்களில் இன்னும் அதகளம் பண்ணுமாம் ஜலகம்பாறை. கிட்டத்தட்ட 35 அடி உயரத்திலிருந்து விழுவதால், அருவி நீரைத் தலையில் வாங்குவதற்கு கொஞ்சம் பலம் வேண்டும். குழந்தைகள் கீழே கிடந்த நீரில் குதூகலம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

குளித்து முடித்துவிட்டு, ஒளித்து வைத்த பணியாரங்களை லவட்டிவிட்டுக் கிளம்பினேன். வீட்டுக்கு வந்த பிறகும் உடம்பில் இன்னும் மூலிகை வாசம் ஒட்டிக் கொண்டிருந்தது. மனதில் ஏலகிரி வாசமும்தான்!

 

 

 

 .

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்