வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (10/03/2018)

கடைசி தொடர்பு:09:54 (10/03/2018)

வெறும் 55 டாலருக்காக கடத்தப்படும் குரங்குகள்... அவற்றை என்ன செய்கிறார்கள்? #AnimalTrafficking அத்தியாயம் 14

குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கிற ஒரு மனிதனைப் பிடித்து உடலிலுள்ள ஏதோ ஓர் உறுப்பை வெட்டிவிட்டு காட்டில் இருக்கிற ஒரு மிருகத்திடம் ஒப்படைத்தால் என்ன ஆவான் எனக் கொஞ்சம்  யோசித்துப் பாருங்கள்.  காமெடியாக தெரியலாம்,  நம்மால் யோசித்துக் கூட பார்க்க முடியாத விஷயம். ஆனால் இதுதான் விலங்குகளுக்கு நிஜமாக நடந்து கொண்டிருக்கிறது. காடுகளிலிருந்து கடத்தப்படும் ஒவ்வொரு குரங்குகளும் பற்கள் பிடுங்கப்பட்டு வீடுகளில் இப்படித்தான் வளர்க்கப்படுகின்றன. குரங்குகளைக் கடத்தி என்ன செய்கிறார்கள்? குரங்குகளின் சர்வதேச விலை என்ன?  இந்த அத்தியாயம் குரங்குகள் பற்றியது…

கடத்தப்படும் குரங்குகள்

2007 ஆண்டு லாஸ் ஏஞ்சல் விமான நிலையம். வழக்கம் போல சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 53 வயது மதிக்கத்தக்க ஒருவரைச் சோதனை செய்கின்றனர். அவர் கொண்டு வந்த சூட்கேசில் 10 பறவைகள் மற்றும் 50 ஆர்ச்சிட் தாவர வகையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அனைத்தையும் பறிமுதல் செய்து விட்டு, "வேறு எதுவும் இருக்கிறதா?" என விசாரிக்கிறார்கள். அதற்குக் கடத்தியவர் சொன்ன பதில் “என் பாக்கெட்ல குரங்கு குட்டி இருக்கு!”. இரண்டு மக்காக்கோ வகை குரங்கு குட்டிகளை அவருடைய பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார். தாய்லாந்திலிருந்து கடத்தி வந்ததை உறுதி செய்த சுங்க அதிகாரிகள் சம்மந்தப்பட்டவரை கைது செய்தனர்.  2012 செப்டம்பர் மாதம் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் துபாய் பயணம் செய்ய இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரிக்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் உள்ளாடையில் குரங்கு குட்டியைக் கடத்தியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த அரை மணி நேரம் கழித்து விமான நிலைய குப்பை தொட்டியில் அனாதையாக ஒரு குரங்கு குட்டிக் கண்டெடுக்கப்பட்டது. தீவிர விசாரணையில் அந்தக் குரங்கும் இவர்கள் கடத்தி வந்தது என்பது தெரிய வந்தது. 

விமானத்தில் குரங்குகளை கடத்தி வருவதாகத் தகவல் கிடைத்ததின் அடிப்படையில் 2008-ம் வருடம் டிசம்பர் 10-ம் தேதி தாய்லாந்திலிருந்து அமெரிக்காவிற்கு வந்த விமானத்தை வன விலங்கு கடத்தல் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். தாய்லாந்தில் இருந்து கிளம்பிய விமானத்தின் பயணிகள்  புகைப்படங்களையும் அமெரிக்கா வந்திருந்த பயணிகள் புகைப்படங்களையும் ஆராய்கிறார்கள். ஒரு பெண் அணிந்திருந்த உடையில் இரண்டு விதமான புகைப்படங்களிலும் சில மாறுதல்கள் தெரிகின்றன. குறிப்பிட்ட பெண் பயணியைச் சோதனை செய்ததில் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் அரண்டு போனார்கள். குரங்கிற்கு மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதியில் கடத்திவந்திருந்தார். பார்க்கிறவர்களுக்கு அந்தப் பெண் கர்ப்பிணி போல தெரிவார். ஒரு புகைப்படத்தில் பெண்ணின் உடை பெரிதாகவும், இன்னொரு படத்தில் சிறிதாகவும் இருக்கவே பொறிதட்டியதில் அந்தக் கடத்தலை போலீசார் கண்டுபிடித்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட  குட்டிகள்

மலேசியா, சுமத்ரா தீவுகளில் இருக்கிற காடுகளிலிருந்து கடத்தப்படுகிற குரங்குகளை ஊசிகள் மூலம் 20 மணி நேரத்துக்கு மேலாக மயக்க நிலைக்குக் கொண்டுபோகிறார்கள். மயக்க நிலையில் இருக்கிற குரங்கு குட்டிகளை பேண்ட் பாக்கெட்டுகளிலும், சூட்கேஸ்களிலும், உடலிலும் வைத்துக் கடத்தி விடுகிறார்கள். வெளிநாடுகளில் மருத்துவத் துறையில் உடல்கூறு ஆராய்ச்சிக்காகவும், உணவிற்காகவும் கடத்தப்படுகின்றன. கடத்தலுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால் முதலில் அதன் பற்களை பிடுங்கி விடுகிறார்கள். பற்கள் பிடுங்கப்பட்ட குரங்குகளைப் பல ஆயிரம் டாலர்களில் ஐரோப்பாவிலும், சீனாவிலும் விற்று விடுகிறார்கள். பல நாடுகளிலும் பற்கள் பிடுங்கப்பட்ட குரங்குகள் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன என்பதுதான் இப்போதைய நிலவரம். தாய்லாந்து மார்க்கெட்டில் போலிஷ், மற்றும் இதர சட்ட சிக்கல்களுக்கான எல்லாம் சேர்த்து ஒரு குரங்கின் விலை 55 அமெரிக்க டாலர்கள். தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் செயல்படும் சேட்சக் விலங்குகள் மார்க்கெட்டில் குரங்குகளுக்கென்று தனியான வர்த்தக கடைகள் செயல்படுகின்றன. வளர்ப்பு குரங்குகள், இறைச்சிக்கான குரங்குகள் என தனி தனி கடைகள் செயல்படுகின்றன. சில குரங்குகள் டாலர்களில், சில குரங்குகள் யூரோக்களிலும் விற்கப்படுகின்றன. குரங்குகளின் இறைச்சி பல நாடுகளுக்கும் இங்கிருந்துதான் அனுப்பப்படுகின்றது. கோழி மற்றும் பன்றி இறைச்சி என்கிற பெயர்களில் சரக்கு விமானத்திலும், கப்பலிலும் ஏற்றப்படுகிற பெட்டிகளில் 40 சதவிகிதம் இருப்பது குரங்குகளின் இறைச்சி என்கிறார்கள் தாய்லாந்தின் சுங்க அதிகாரிகள்.

உலகில் அதிகம் கடத்தப்படும் குரங்கில் மிக முக்கியமானது  நீண்ட வால்  குரங்கு (Long Tailed Macaque). இந்தக் குரங்குகளின் கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருப்பது மருத்துவம். மருத்துவ உலகில் பலகட்ட பரிசோதனைகளுக்கும் இந்த வகை குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் நாடுகளில் அதிகம் காணப்படுகிற இவ்வகை குரங்குகளுக்கு உலகம் முழுமைக்கும் டிமாண்ட் இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஒரு மக்காக்கோ குரங்கின் விலை 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். மருத்துவப் பரிசோதனை தவிர்த்து உணவிற்காகவும் இவ்வகை குரங்குகள் கடத்தப்படுகின்றன. 

பறிமுதல் செய்யப்பட்ட  குட்டிகள்

முந்தைய அத்தியாயம் 

சர்வதேச சந்தையில் குரங்குகளின் நிலை இப்படி இருக்க இங்கிருக்கிற நம்மூர் குரங்குகளின் நிலையோ பரிதாபத்தில் இருக்கிறது. அதன் இடம், உணவு, பாரம்பரியம் என எல்லாவற்றையும் அபகரித்துவிட்டு, அவற்றை உணவிற்காகக் கையேந்துகிற நிலைக்குக் கொண்டு வந்துவிட்டோம். ஊட்டி, கொடைக்கானலுக்குப் போகிற சாலைகளில் இருபுறமும் ஆயிரம் குரங்குகளை பார்க்க முடிகிறது. தனியாக, கூட்டமாக எனச் சாலையின் இரு பக்கங்களிலும் கையேந்தி நிற்கிற குரங்குகளின் பாரம்பரிய வாழ்விடங்கள் எங்கே போனது? எதற்காக அவை மனிதர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்றெல்லாம் என்றாவது யோசித்திருக்கிறோமா? எல்லாவற்றிற்கும் காரணம் மனிதனும் அவனது பிச்சையிடுகிற மனநிலையும்தான். விலங்குகளைப் பொழுது போக்கிற்காக உபயோகப்படுத்திய மனிதன் அதற்குப் பலனாக பழங்களையும், சிப்ஸ் பாக்கெட்டுகளையும் அவற்றிற்குப்  பிச்சை போட ஆரம்பித்தான். அதன் விளைவுதான் அவை சாலைக்கு வந்ததும், அடிபட்டுச் சாவது. எல்லா விலங்குகளையும் கடத்தி உணவிற்காகவும், மருந்திற்காகவும்  கொன்றுவிட்டு மனித இனம் யாரோடு வாழப்போகிறது.


டிரெண்டிங் @ விகடன்