உலகின் ஏழு அதிசயங்கள் என்னென்ன தெரியுமா? பாடம் எடுத்த சிறுமியின் கதை! #FeelGoodStory | Story of a kid who demonstrated the seven wonders of the world

வெளியிடப்பட்ட நேரம்: 09:02 (12/03/2018)

கடைசி தொடர்பு:09:02 (12/03/2018)

உலகின் ஏழு அதிசயங்கள் என்னென்ன தெரியுமா? பாடம் எடுத்த சிறுமியின் கதை! #FeelGoodStory

நெகிழ்ச்சிக் கதை

`நம்மை அறியாமலேயே நம்முள் நாம் சில அதிசயங்களைச் சுமந்துகொண்டிருக்கிறோம்’ - இங்கிலாந்தைச் சேர்ந்த பல்துறை வல்லுநர் தாமஸ் பிரௌன் (Thomas Browne) ஆழ்ந்துணர்ந்து சொன்ன வாக்கியம் இது. மனிதப் பிறப்பே மாபெரும் அதிசயம். ஆனால், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழும்போதுதான் அந்தப் பிறவி முழுமையடைகிறது. `கையில வெண்ணெயை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச கதையா...’ என்று ஒரு பழமொழி உண்டு. நம்முள்ளேயே எத்தனையோ சிறப்புகளை, அதிசயங்களை வைத்துக்கொண்டு. ஊரெங்கும் அதைத் தேடி அலைகிறோம் நாம். நிஜமாகவா? நிச்சயமாக. அதை எடுத்துச் சொல்கிறது இந்த நெகிழ்ச்சிக் கதை!

ஆன்னாவுக்கு (Anna) ஒன்பது வயது. இங்கிலாந்திலிருக்கும் சிறு கிராமத்தைச் சேர்ந்த குட்டிப் பெண். கிராமத்துப் பள்ளியில் நான்காம் கிரேடு வரை படித்திருந்தாள். அதற்கு மேல் படிக்க, அவள் அருகிலிருந்த சிறு நகரத்துக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருந்த ஒரு பள்ளியில் அட்மிஷனும் கிடைத்தது. மரியாதைக்குரிய முக்கியமான பள்ளி அது. அங்கே இடம் கிடைத்ததில் ஆன்னாவின் பெற்றோருக்குப் பெருமிதம்.

ஆன்னா, பள்ளி செல்லும் நாள் வந்தது. காலை... கிராமத்துக்குள்ளேயே வந்த பள்ளிப் பேருந்து, ஆன்னாவை ஏற்றிக்கொண்டது. அந்தச் சிறு பெண்ணுக்கு மனம் முழுக்கப் பதற்றமாக இருந்தது. புதுப் பள்ளி, முதல் நாள், ஆசிரியர்கள்-சக மாணவர்கள் எப்படியிருப்பார்கள் என்று தெரியாது... பதற்றமாகத்தானே இருக்கும்? 

பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கிய ஆன்னா, தன் வகுப்பறைக்குச் செல்லும் வழியை விசாரித்துத் தெரிந்துகொண்டாள். அங்கே போனாள். பளிச்சென இல்லாத, நிறம் மங்கிய உடை, தேய்ந்துபோன ஷூ, சீராக வாரப்படாத தலை... தோற்றத்தை வைத்தே ஆன்னா, கிராமத்துப் பெண் என்பது வகுப்பிலிருந்த மாணவ, மாணவிகளுக்குத் தெரிந்துபோனது. தயங்கித் தயங்கி ஒரு டெஸ்க்கில் போய் அமர்ந்தாள் ஆன்னா. சக மாணவர்கள், அவளை ஜாடை காட்டிப் பேசி, சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள். யார் முகத்தையும் பார்க்காமல், ஆன்னா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். 

நெகிழ்ச்சிக் கதை

வகுப்பு ஆரம்பிப்பதற்கான மணி ஒலித்தது. ஆசிரியை உள்ளே வந்தார். வகுப்பறை அமைதியிலாழ்ந்தது.

``ஆன்னா யாரு?’’

ஆன்னா எழுந்து நின்றாள். அவளை மற்ற மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தினார் ஆசிரியை. வகுப்புத் தொடங்கியது.   

``சரி... உங்களுக்கெல்லாம் இப்போ டெஸ்ட். முந்தா நாள் `உலகின் ஏழு அதிசயங்கள்’ பாடம் எடுத்தேனே... ஞாபகம் இருக்கா?’’

``யெஸ் மிஸ்...’’ கோரஸாகக் குரல்கள் எழுந்தன.

``எங்கே... எல்லாரும் அதையெல்லாம் வரிசையா எழுந்துங்க பார்ப்போம்... க்விக்...’’

அத்தனை பேரும் பேப்பரில் கடகடவென எழுத ஆரம்பித்தார்கள். ஆன்னா, தயக்கத்தோடு டீச்சரைப் பார்த்தாள். ``என்ன ஆன்னா... நான் கிளாஸ் எடுத்தப்போ நீ இல்லைனுதானே பார்க்கிறே... உனக்கு மனசுல என்ன தோணுதோ அதை எழுது...’’ 

``இல்லை மிஸ்... எனக்கு எத்தனையோ அதிசயம் தெரியும்... அதுல ஏழே ஏழு மட்டும் எழுதினா போதுமா?’’

டீச்சர் சிரித்தார். ஆன்னாவைத் தட்டிக் கொடுத்து, ``போதும்’’ என்று சொன்னார். 

நெகிழ்ச்சிக் கதை

 

ஆன்னாவும் ஒரு பேப்பரில் எழுத ஆரம்பித்தாள். மற்ற அனைவரும் பதிலை எழுதிக் கொடுத்த பிறகும்கூட, அவள் எழுதிக்கொண்டிருந்தாள். கடைசியாகத்தான் தன் விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்தாள்.  

நெகிழ்ச்சிக் கதை

ஆசிரியை எல்லோரின் விடைத்தாள்களையும் படிக்க ஆரம்பித்தார். தாஜ் மகால், எகிப்து பிரமிடு, சீனப் பெருஞ்சுவர், பாபிலோன் தொங்கும் தோட்டம், ரோமின் கொலேசியம், இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ்ச், பைசா நகரத்து கோபுரம்... என அந்த ஆசிரியை சொல்லிக் கொடுத்ததை பெரும்பாலானவர்கள் எழுதியிருந்தார்கள். சிலர், சிலவற்றை எழுதாமல் விட்டிருந்தார்கள். கடைசியாக அந்த ஆசிரியை, ஆன்னா எழுதிய  விடைத்தாளைப் பார்த்தார். அதில் இப்படி எழுதியிருந்தது... 

`உலகின் ஏழு அதிசயங்கள் என்னவென்றால்... நம்மால் பார்க்க முடிவது; கேட்க முடிவது; உணர முடிவது; சிரிக்க முடிவது; சிந்திக்க முடிவது; இரக்கப்பட முடிவது; அன்பு செலுத்த முடிவது...’

***

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close