வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (12/03/2018)

கடைசி தொடர்பு:15:44 (12/03/2018)

சீன தேசிய விலங்கு பாண்டாக்களைக் காப்பாற்ற 10,000 கோடியில் பூங்கா. புலிகளுக்கு என்ன செய்யும் இந்திய அரசு?

றுப்பு வளையத்திற்குள் ஒளிந்திருக்கும் அந்தக் கண்களைக் கண்டால், நாள் முழுக்க ரசிக்கத் தோன்றும். அந்த வெள்ளை நிற முகத்திற்கு அழகு சேர்ப்பதே, அதன்மேல் சிறியதாக நீட்டிக்கொண்டிருக்கும் கறுப்பு நிறக் காதுகள்தான். மென்மையான மயிர்களால் ஆன அந்தப் பெரிய உருண்டை வடிவ உடலைத் தாங்கிநிற்கும் கறுப்பு நிறக் கால்களுக்குத்தான் எத்தனை வலிமை! கறுப்பு நிறத்தை வெறுப்பவர்களைக்கூட அந்த உடலின் தோள்பட்டைப் பகுதியில் வளைந்து படர்ந்திருக்கும் கறுப்பு, கவர்ந்து இழுத்துவிடும். அந்தப் பூத உடல் முழுவதும் மூடியிருக்கும் மென்மை மிகுந்த மயிர்களைக் கண்டால், தொட்டு உணர்வதற்கு கைகள் துடிக்கும். பார்ப்பதற்கு பொம்மையைப் போல இருக்கும் அந்த பாண்டாக்களின் அழகில் மயங்காதவர்களைப் பார்க்கவே முடியாது.

பாண்டா கரடி

சீனாவின் சிச்சுவான் மழைக்காடுகளிலும், அதன் அருகிலுள்ள கான்சு மற்றும் ஷாங்சி மலைப் பகுதிகளிலும் மட்டும் காணப்படுபவை இந்தப் பாண்டாக்கள். பார்ப்பதற்கு எத்தனை அழகோ, அது எரிச்சலூட்டப்படாதவரை அத்தனை மென்மையானவை. கால் பாதங்களில் இருக்கும் ஐந்து விரல்களில், மூங்கில் குச்சியைப் பலமாகப் பிடித்து வலிமையான கட்டை விரலால் அழுத்தி, எளிமையாக உடைத்துவிடும். அப்படி உடைத்த மூங்கிலைப் பின்னங்கால்களை நீட்டி அமர்ந்துகொண்டு கடித்துத் தின்னும். குழந்தையைப் போல அது உட்கார்ந்து சாப்பிடும் விதத்தை நினைத்தால்கூட உதட்டோரம் புன்முறுவல் பூக்கும்.

160 கிலோ வரை வளரும் உயிருள்ள பொம்மைகளின் குட்டிகள், 140 கிராம் எடை மட்டுமே. இணை சேர்ந்தவுடன், துணையைப் பிரிந்து தனியாகவே ஐந்து மாதங்களுக்கு கருவில் சுமந்து குட்டிகளை ஈன்றெடுத்து வளர்க்கத் தொடங்கும். பாண்டாக்கள், ஒருமுறைக்கு இரண்டு அல்லது மூன்று குட்டிகள் வரைப் போடும். புதிதாகப் பிறந்த குட்டிகள் தவழ்வதற்கு மூன்று மாதங்கள் ஆகும். வெள்ளை நிறத்தில் பிறக்கும் அவை, வளர வளரத் தனது உருவத்தை அலங்கரிக்கும் கறுப்பு நிறத்தைப் பெறும்.

பாண்டா கரடிகள்

24 மணிநேரத்தில், 12 மணிநேரம் சாப்பிடும் இது, ஒரு நாளைக்கு 12.5 கிலோ உணவை எடுத்துக்கொள்ளும். பெரும்பாலும் மூங்கிலையே விரும்பி உண்ணும் பாண்டாக்கள், சில நேரம் எலி, பறவை போன்றவற்றையும் உண்ணும். சீனாவின் மலைப் பகுதிகளில் வாழும் இவை, ஈரப்பதம்கொண்ட மூங்கில் காடுகளில் வாழ்வதையே மிகவும் விரும்பும். கோடைக்காலங்களில், 13,000 அடி உயரத்திற்குக்கூட மலையேறிச் சென்று உணவுதேடிக்கொள்ளும். இவை, கைதேர்ந்த மரமேறிகள் மற்றும் நன்றாக நீந்தக்கூடியவை.

சராசரியாக 20 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இந்த பாண்டாக்கள், அழியக்கூடிய உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சீனக் காடுகளில், தற்போது 1864 பாண்டாக்கள். உலகம் முழுவதும் உள்ள சரணாலயம் மற்றும் பூங்காக்களில் மொத்தம் 300 பாண்டாக்கள். இதுதான் பாண்டாவின் ஒட்டுமொத்த சென்சஸ். எனவே, இவற்றின் பாதுகாப்பிற்காக ஒரு தேசியப் பூங்கா உருவாக்கப்பட வேண்டும் என்று சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில், சென்ற ஆண்டு ஜனவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாண்டா கரடி

அந்தத் தீர்மானத்தின்படி, பாண்டாக்களுக்கு என்றே தனித்துவமான தேசியப்பூங்கா 27,134 சதுர கிலோமீட்டர் அளவில் உருவாக்கப்படும். அதற்கு ஆகும் செலவு, 10 பில்லியன் யுவான்கள். அதாவது, இந்திய மதிப்பில் 10,289 கோடி ரூபாய். இதற்கான வேலைகள் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், 2023-ம் ஆண்டுக்குள் இந்தப் பூங்காவின் வேலை முடிந்து திறக்கப்பட்டுவிடும் என்று சீன அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. புதிதாகத் தொடங்கவிருக்கும் பூங்காவின் பரப்பளவு, அமெரிக்காவின் புகழ்பெற்ற Yellow stone National Park-ஐவிட மூன்று மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

அழியக்கூடிய நிலையிலிருக்கும் பாண்டாக்கள், சீனாவின் தனித்த அடையாளமாக உலகளவில் கருதப்படுகிறது. அத்தகைய உயிரினத்தைப் பாதுகாக்க சீன அரசு எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது. சீனாவின் தேசிய விலங்கான பாண்டாக்களுக்கு, அந்த அரசாங்கம் காட்டும் அக்கறை மெச்சத்தகுந்தது. ஆனால், இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் பாதுகாப்பிற்காக இந்திய அரசாங்கம் சரியான, முழுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 240 புலிகள் இறந்திருக்காது. சீன அரசைப் பார்த்தாவது இந்திய அரசு கற்றுக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்