வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (12/03/2018)

கடைசி தொடர்பு:20:45 (12/03/2018)

கறுப்பினச் சிறுமியைத் தன் அருகில் அமர அனுமதிக்காத லண்டன் பெண்..! #Viral

`கறுப்பு', உழைக்கும் மக்களின் நிறம்; புரட்சியின் நிறம். சமீபத்தில் `காலா' திரைப்படத்தின் டீஸர் வெளியான பிறகு, பலராலும் பேசப்பட்ட வார்த்தை `கறுப்பு'. பெரும்பாலான மக்கள் கறுப்பாக இருக்கும் நமது நாட்டில், கறுப்பு 'பிடிச்ச கலராக' விரும்பப்படுகிறது. ஆனால், விஞ்ஞானத்தில் வளர்ந்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் பல உலக நாடுகளில், `கறுப்பு' இழிவான நிறமாகவே பார்க்கப்படுகிறது. கறுப்பு நிற கோட் அணியத் தயங்காத அவர்கள், `கறுப்பின' மக்களோடு அமரத் தயங்குகிறார்கள்.

சமீபத்தில், சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோ, இந்த நிறப் பாகுபாட்டை இன்னும் வெட்டவெளிச்சமாகக் காட்டுகிறது. லண்டனில் பேருந்து ஒன்றில் பள்ளிச் சிறுமியை தன் அருகில் உட்கார அனுமதிக்காமல் சண்டைபோட்டுள்ளார் ஒரு பெண்.

கறுப்பு இனத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, தன் அருகில் உட்காருவதை இழிவாகக் கருதிய அந்தப் பெண், ``இது ஆப்பிரிக்கா அல்ல, லண்டன்" என அந்தச் சிறுமியுடன் சண்டைபோட்டுள்ளார்.

அந்த வீடியோவைக் காண க்ளிக் செய்யவும் - வீடியோ

கறுப்பின மக்கள்

கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல் தொடர்ந்து நடப்பதுபற்றிய செய்திகள், பத்திரிகைகளில் வெளியாகின்றன. ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் தொகுத்து வழங்கினால், அது ஆச்சர்யமளிக்கும் ஒரு செய்தியாக மாறும் அளவுக்கு கறுப்பின மக்களின் நிலை உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் மாணவர்கள்மீது தொடர்ச்சியாக இனவெறித் தாக்குதல் நடந்தன. தென்னாப்பிரிக்காவில் 1950 காலகட்டத்தில், கறுப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. `இன ஒதுக்கல்' என்ற சட்டமே அந்த நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டது. கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை, கல்வி போன்றவை பல வருடங்களாக மறுக்கப்பட்டன. கறுப்பின மக்கள் எப்போதும் தங்களுக்கான அடையாளச் சீட்டை வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் அவர்கள் நகர வீதிகளில் நடமாடக் கூடாது. உயர்தர உணவகங்களில் நுழையக் கூடாது போன்ற ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.

கறுப்பினத்தவர் மட்டுமன்றி இந்தியர்கள், ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என அனைத்து மக்கள்மீதும் பாகுபாடு பார்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துகொண்டிருந்த மகாத்மா காந்தியை ரயில் வண்டியிலிருந்து இறக்கிவிட்டதும், இந்த நிறவெறிதான். பல்வேறு தலைவர்களும் நிறவெறிக்கு எதிராகச் செயல்பட்டுவருகின்றனர். மக்களின் மனதில் பதிந்துவிட்ட இந்த எண்ணத்தை அழித்தொழிப்பது காலத்தின் கட்டாயம். 

பல்வேறு நிறங்கள் இருக்கும்போது, `கறுப்பு' நிறம் மட்டும் ஏன் இவ்வளவு விவாதங்களைக் கிளப்புகிறது? `கறுப்பு' நிறம் ஏன் எதிர்ப்பை வெளிக்காட்டும் நிறமாகிப்போனது? `கறுப்பு' ஏன் பலருக்கும் உவப்பில்லாத நிறமாக இருக்கிறது? கறுப்பாக இருக்கும் காரணத்தால் ஆண்களுக்கும்  பல பெண்களுக்கும் திருமணம் தடைபடுகிறதே ஏன்? அரசாங்க விழாக்களிலும் சரி, கல்லூரி விழாக்களிலும் சரி நடுவர்களுக்கு வழங்கும் பரிசுப் பொருள்களைச் சுமந்துவரும் பெண்களாக ஏன் கறுப்பானவர்கள் இல்லை? செய்தி வாசிப்பாளர்களில்கூட கறுப்பானவர்களாக திரையில் தோன்றியவர்கள் எத்தனை பேர்? சினிமாவில் நடிகைகள் தேர்வின்போது ஏன் கறுப்பானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்? அபூர்வமாக திரையில் வரும் கறுப்பு நிற நடிகைகளையும் ஏன் மேக்கப் மூலம் அவர்களின் நிறத்தை மாற்றுகிறார்கள். நமது நாட்டில் இன்று பல்லாயிரம் கோடி லாபம் தரும் துறையாக அழகு சாதனப் பொருள்கள் விற்கும் தொழில் வளர்ந்திருப்பதற்கான காரணங்கள் எவை? இந்தக் கேள்விகள், நமக்குள் அவ்வப்போது தோன்றியிருக்கும். 

கறுப்பின மக்கள்

இங்கு, கறுப்பு என்பது நிறமாக மட்டுமே பார்க்கப்படுதில்லை என்பதுதான் உண்மை. விவசாயம் செய்பவர், கட்டட வேலைசெய்பவர் என உழைக்கும் மக்களின் நிறமாக கறுப்பு இருப்பதால்தான், இந்த எண்ணம் தோன்றுகிறது. சாதிப் பாகுபாட்டின் ஓர் அம்சமாகவே கறுப்பு நிறம் பார்க்கப்படுகிறது. நிறத்தை வைத்தே ஒருவரின் சாதியைக் குறிப்பிடும் அபத்தம் நமது நாட்டில் உள்ளது. `யாதும் ஊரே யாவரும் கேளீர்', `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை பேச்சோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், செயல்படுத்த முனைதல் அவசியம். உலகின் எந்த ஒரு நாடாக இருந்தாலும் சக மனிதனை நிறம், மொழி, இனம் இவற்றைக் காரணமாகக்கொண்டு ஒடுக்குவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. இதுவரை உலகில் நடந்த போர்கள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணம், சக மனிதன்மேல்கொண்ட வெறுப்புதான். அதைக் களைய முயல்வோம்.  


டிரெண்டிங் @ விகடன்