இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? | A rare carnivores plant species identified only for the second time!

வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (14/03/2018)

கடைசி தொடர்பு:14:13 (14/03/2018)

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?

1866-ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஒடோர்டோ பெக்கரி (Odoardo Beccari) என்ற தாவரவியலாளர் தன் கண்ணில் பட்ட அந்த விநோதமான தாவரத்தை வரைந்து வைத்துள்ளார். அவரது பதிவைத் தவிர கடந்த 151 ஆண்டுகளில் வேறு எங்குமே அந்தத் தாவரம் தென்படவில்லை. ஆனால், தற்போது மலேசியாவின் போர்னியோ மழைக்காடுகளில் காணப்பட்ட அரிய வகைத் தாவரம் ஒன்று அதைப் போலவே இருந்ததால் அவரது பதிவையும், நேரில் பார்த்த தாவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த தாவரவியலாளர்கள் அதே இனம்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு விஷயம் என்னவென்றால் 151 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிறவி எடுத்த அந்தத் தாவரம் ஓர் ஒட்டுண்ணித் தாவரம். அதென்ன ஒட்டுண்ணி?

ஒட்டுண்ணி தாவரம் திஸ்மியா நெப்டியூனிஸ் (Thismia neptunis)

Photo Courtesy: Marianne North and Odoardo Beccari

தனக்கான உணவைச் சுயமாக உருவாக்கிக்கொள்ள இயலாத உயிரினங்கள் தன் உணவுக்காக வேறோர் உயிரினத்தைச் சார்ந்தே வாழும். அவ்வகை உயிரினங்களை அசைவ வகைப்பாட்டில் வரிசைப்படுத்துவார்கள். ஓர் உயிரினம் தேடிக்கொள்ளும் உணவாக உணவுச்சங்கிலியில் உள்ள வேறு ஓர் உயிரி, அதற்கான உணவிற்காக வேறு உயிர்களில் சார்ந்து இருக்கக்கூடாது. அத்தகைய உயிரினங்களை மட்டுமே உண்டு வாழும் உயிரினம் சைவ வகையில் சேரும். உதாரணமாக, மான் தாவரங்களை உண்கிறது. மானைப் புலி உண்கிறது. இங்கே புலி அசைவம். ஆனால், மான் சைவம். தாவரம் என்பது ஓர் உயிர்தான் என்றாலும், தனக்கான உணவை ஒளிச்சேர்க்கை மூலம்,  தாவர இனங்கள் தானே சமைத்துக்கொள்கின்றன. அதனால்தான் தாவரங்களை உண்டு வாழும் மான் போன்ற உயிர்கள் சைவ வகையினைச் சேர்ந்தவை. ஆனால், தாவரங்கள் அனைத்துமே சூரிய ஒளியை நம்பி வாழ்கின்றனவா என்றால், இல்லை. தாவரங்களிலும் அசைவ உயிரிகள் உண்டு.

அத்தகைய அசைவப் பிரியர்கள்தான் இந்த ஒட்டுண்ணித் தாவரங்கள். இவற்றின் உடற்பகுதியில் ஒளிச்சேர்க்கை செய்யத் தேவையான க்ளோரோபில் (Chlorophyll) எனப்படும் பச்சையம் என்ற மூலக்கூறுகள் மிகவும் குறைவு. ஆகையால் ஒளிச்சேர்க்கை செயற்பாடு இவ்வகைத் தாவரங்களில் மந்தப்பட்டிருக்கும். இவர்களுக்குப் பச்சையம் இல்லாத குறையை ஹாஸ்டோரியம் (Haustorium) என்ற உறிஞ்சும் உறுப்பு ஈடுசெய்கின்றது. இந்த ஹாஸ்டோரியம் ஒட்டுண்ணித் தாவரங்களின் இனப்பிரிவைப் பொறுத்து இருக்கும் இடம் வேறுபடும். தண்டின் உச்சியிலோ, கொடியாகப் படர்ந்தோ அல்லது வேர்ப்பகுதியிலோ இருக்கும். பொதுவாகத் தண்டின் உச்சியில் ஹாஸ்டோரியாக்களை கொண்டிருக்கும் தாவர வகைகள் பூச்சியுண்ணிகளாக இருக்கும். கொடிபோல் படர்ந்திருப்பவை சில சமயம் தன் கொடியில் சிக்கும் விலங்குகளைக் கூட உண்டுவிடும்.  ஹாஸ்டோரியம் வேர்களில் அமைந்திருந்தால் அவை பெரும்பாலும் அருகிலிருக்கும் தாவரங்களின் வேர் வரையிலும் நீண்டு, அதன் சத்துக்கள் முழுவதையும் உறிஞ்சி எடுத்து உயிர் வாழும். இத்தகைய ஒட்டுண்ணிகள் விவசாய நிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களுக்குப் பல நஷ்டங்கள் கொடுத்த வரலாறுகளும் உண்டு.

ஒட்டுண்ணி திஸ்மியா நெப்டியூனிஸ் (Thismia neptunis)

திஸ்மியா உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தது இந்தப் புதிய ஒட்டுண்ணி. திஸ்மியா நெப்டியூனிஸ் (Thismia neptunis) என்றழைக்கப்படும் இது பேச்சு வழக்கில் வனதேவதை (Fairy Lantern) என்றழைக்கப்படுகிறது. பெக்கரி 1866-இல் வரைந்த ஓவியத்தோடு இது முழுவதும் ஒத்துப்போகிறது. இது மற்ற அனைத்திலுமிருந்து சற்று மாறுபட்டதாகவும் சாதுவாகவும் இருக்கிறது. பெக்கரியின் கண்களில் பட்டபோது இதைப் பற்றிய விவரங்களை அவர் புரிந்துகொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது மீண்டும் கண்டறியப்பட்ட போது அதன் செயற்பாடுகள் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன.

இதன் மொத்த எண்ணிக்கை இரண்டு மட்டுமே. 1866-இல் பெக்கரி பதிவு செய்தது ஒன்று, போர்னியோவில் தற்போது காணப்பட்டது மற்றொன்று. மேலும் எங்காவது இருக்கிறதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மென்மையான வெளிர்நிற தண்டுகளைக் கொண்ட இந்த ஒட்டுண்ணி நிலத்தடி பூஞ்சைகளை உறிஞ்சுவதற்கு ஏதுவாக மிகவும் எளிமையான வேர்களைக் கொண்டது. கட்டை விரல் வடிவத்தில் இருக்கும் அதன் நுனிப் பகுதியில் நீளமான மூன்று கொம்பு வடிவத் தண்டுகள் மெல்லிசாக நீட்டிக் கொண்டிருக்கின்றன. அதன் கட்டை விரல் வடிவ நுனிப்பகுதி வெளிர்சிவப்பு நிறத்தில் சிறிது விரிந்து, மலர் போன்று காட்சியளிக்கிறது.

ஒட்டுண்ணி

Photo Courtesy: PhytotaxaCreative Commons

ஹாஸ்டோரியம் வேர்களைக் கொண்டுள்ள இந்த ஒட்டுண்ணி தனது வேர்களை நேரடியாக அருகிலிருக்கும் தாவர வேர்களோடு இணைத்து சத்துக்கள் முழுவதையும் உறிஞ்சாமல், தாவரங்களில் இருக்கக்கூடிய பூஞ்சைகளை மட்டுமே உண்டு வாழ்கின்றது. இந்த ஒட்டுண்ணியின் உடலில் ஒளிச்சேர்க்கை மூலக்கூறுகள் ஒன்றுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் விதம் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. ஆயினும் நெப்டியூனிஸின் பூவிற்குள் இருந்த இரண்டு வண்டினங்கள் மகரந்தச் சேர்க்கைதான் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. தாவரங்களின் பூஞ்சைகளை உண்டு வாழும் இவை நேரடியாக மற்ற தாவரங்கள் எதையும் பாதிப்பதில்லை. இந்தத் தனித்தன்மை, மற்ற ஒட்டுண்ணித் தாவரங்களிடமிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது.

மழைக்காடுகளின் அளவு வேறு எப்போதும் இல்லாத அளவில் குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், சேற்றுப் பகுதிகளில் மழைக்காடுகளுக்குள் வாழும் இந்தத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் வேறு பல தாவர இனங்களைக் கண்டறியவும் அதன் மூலம் மழைக்காடுகளைக் காக்கவும் ஓர் ஊக்கத்தை அளித்துள்ளது. ஏனென்றால், பெக்கரியின் ஆய்வுகளுக்கு உட்பட்ட வனப்பகுதிகளின் பெரும் பகுதி மீண்டும் வேறு யாராலும் ஆராயப்படாமலே இருக்கிறது. அவற்றை ஆராயத் தொடங்குவது அறிவியல் உலகிற்கு மேலும் பல அதிசயங்களைக் கொடுக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்