வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (14/03/2018)

கடைசி தொடர்பு:18:50 (14/03/2018)

”இது பாலுமகேந்திராவோட கனவு..!” - உதவி இயக்குநர்களுக்காக நூலகம் திறக்கும் அஜயன்பாலா

`என் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு நல்ல விஷயம் தென்பட்டால், அதற்கு நான் படித்த இலக்கியங்களே காரணம்' என இயக்குநர் பாலுமகேந்திரா கூறுவார். அவரது பெயரில், சினிமா உதவி இயக்குநர்கள், சினிமா ஆர்வலர்களுக்குப் பயனளிக்கும்விதமாக நூலகம் ஒன்றைத் தொடங்கவுள்ளார் அஜயன்பாலா.

`நல்லதொரு கலைப் படைப்பாக சினிமா வருவதற்கு இலக்கியம் ஓர் உந்துசக்தியாக இருக்கும்' என, சிறந்த இயக்குநர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களாகக் கருதப்படும் மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோர் சிறுகதைகள் சிலவற்றை படங்களாகவும் குறும்படங்களாகவும் எடுத்துள்ளனர். உலகின் முக்கியமான இயக்குநர்கள் பலரும் தங்களை பாதித்தப் புத்தகங்களை மையமாகவைத்து திரைப்படங்கள் இயக்கியுள்ளனர். திரைப்பட இயக்கத்துக்கும் புத்தகங்களுக்கும் நெருக்கமான ஒரு தொடர்பு ஆரம்பத்திலிருந்தே  இருந்துவருகிறது. சினிமாவில் இயக்குநர் ஆக விரும்பி உதவி இயக்குநர்களாகப் பணிபுரிவர்களுக்கும், சினிமா பயிலும் மாணவர்களுக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும் சினிமா சார்ந்த புத்தகங்கள் வாசிப்பதற்காக `பாலுமகேந்திரா நூலகம்' தொடங்கியுள்ளார் எழுத்தாளர் அஜயன்பாலா.

உலக சினிமா குறித்த புத்தகங்கள் பலவற்றை எழுதியுள்ள இவர், சினிமாவில் திரைக்கதையாசிரியராக உள்ளார். இவர், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா குறித்து எழுதிய கட்டுரை, இலங்கையில் உள்ள பள்ளிகளில் 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான கட்டுரை இலக்கியத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

அஜயன் பாலா

அஜயன்பாலாவிடம் இந்த நூலகம் குறித்தும், சினிமாவுக்கு புத்தக வாசிப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பது குறித்தும் பேசினோம்.

``இது என்னோட ஆசை மட்டுமில்ல, நான் மாணவனா நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்ட என் குரு பாலுமகேந்திராவோட கனவு. அவர் வீட்டுலேயே ஒரு பெரிய லைப்ரரி வெச்சிருந்தார். எனக்கும் அதேமாதிரி ஒரு நூலகத்தை உருவாக்கணும்னு ரொம்ப நாளாவே எண்ணம் இருந்தது. வெறுமனே லைப்ரரியா மட்டுமில்லாம சினிமாவை நேசிக்கும், நல்ல சினிமாவை உருவாக்கிறதுக்கான ஆலோசனைக் கூடமாவும் இந்த நூலகம் இருக்கும். புத்தகங்கள் மட்டுமின்றி, உலகின் தலைசிறந்த சினிமாக்கள், தமிழில் வெளிவந்த முக்கியமான திரைப்படங்கள் என சினிமா கலெக்‌ஷன்களும் நிறைந்த சினிமாசார் மையமா இந்த இடம் இருக்கும். திரைப்பட இயக்குநர்களுக்கு வாசிப்புப் பழக்கம் ரொம்ப முக்கியம். இந்த நூலகத்துல சினிமா சார்ந்த புத்தகம் மட்டுமில்லாம நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள்னு முக்கியமான புக்ஸ் எல்லாத்தையும் சேகரிக்கப்போறோம். ஃப்ரெண்ட்ஸுங்க அறிய பல நூல்களை அன்பளிப்பா கொடுத்திருக்காங்க'' எனக் கூறிய அஜயன் பாலா,

``ஒரு சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சி என்பது, அந்தச் சமூகத்தில் உள்ள அறிவுசார் மையங்களைச் சார்ந்தே இருக்கும். அதற்கான ஒரு சிறு முயற்சிதான் இந்த நூலகம். இங்கு 200 ரூபாய் சந்தா செலுத்திவிட்டு, விரும்பும் புத்தகங்களை எடுத்துச் சென்று படிக்கலாம்.

நல்ல திரைப்படங்களை இயக்க விரும்பும் அனைவருக்கும் வாசிப்புப் பழக்கம் என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு இந்த நூலகம் நிச்சயமாக வழிவகை செய்யும். புத்தகங்கள்,  திரைப்படங்கள் மட்டுமின்றி, தமிழில் வெளியான முக்கியமான குறும்படங்கள் மற்றும்  ஆவணப்படங்களையும் சேகரிக்கும் திட்டமும் உள்ளது" என்றார் நம்பிக்கையுடன். 

இந்த நூலகத்துக்கு நூல்களை கொடையாக அளிக்க விரும்புபவர்கள், ajayanbala@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 98840 60274 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.


டிரெண்டிங் @ விகடன்