வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (14/03/2018)

கடைசி தொடர்பு:13:59 (17/03/2018)

``அறிவார்ந்தவர்கள் அனைவரும் மாதவிடாய் சுகாதாரத்துக்காகப் பேச வேண்டும்!’’ - கொல்கத்தா பேட்மேன்

ஸ்டேஃப்ரீ, விஸ்பர் விளம்பரங்களில், பஞ்சு நாப்கின்களின்மீது ஊற்றப்படும் நீலம், உண்மையில் சிவப்பு நிறம்தான் என்பது பலரின் முயற்சிகளுக்குப் பின்பு பேசப்பட்டுவரும் காலமிது.

பேட்மேன்

``ரோட்ல நடந்து வரும்போது பீரியட்ஸ் வந்து அவமானமாகிடுச்சு. மன்னிச்சிருங்க. வீட்டுக்கு வந்துட்டேன்” - `ஆபீஸுக்கு வர ஏன் இவ்வளவு லேட்டுனு காரணம் கேட்க போன் பண்ணப்போ, என் பத்திரிகைக்காக வேலை செய்ற அக்கா இப்படி சொன்னாங்க’ என்கிறார், 21 வயது சோபன் முகர்ஜி. 

புவியியலில் முதுநிலை பயிலும் சோபன், கொல்கத்தா நகரப் பகுதியில் பயணிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் 15 பொதுக் கழிப்பிடங்களில் நாப்கின்களை வாங்கி வைக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த முயற்சி, இப்போது 35 பொதுக் கழிப்பிடங்களில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. மூலதனம், சோபனின் பாக்கெட் மணி சேமிப்புதான். பி.எஸ்சி படிக்கும்போதிருந்தே சோபன் நடத்திவரும் `கோபி கொலோம்’ என்னும் வங்காள கவிதை இதழில் பணிபுரிபவர்கள் 17 பேர். தன்னோடு, தனக்காக வேலைபார்க்கும் பெண்களின் மாதவிடாய் அசெளகரியம்தான் சோபனின் ‘பந்தன்’ திட்டத்தின் முயற்சிக்கான விதை. 

நாப்கின்ரீல் `பேட்மேன்’ ரிலீஸுக்கு பிறகு அறிமுகமாகிவரும் ரியல் பேட்மேன்களில் ஒருவரான சோபனைத் தொடர்புகொண்டபோது, “இந்தியாவில் பீரியட்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை மரபு மீறிய ஒன்றாக, அசிங்கமானதாகப் பார்க்கிறார்கள். குறைந்த விலையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை வாங்கி, அதை இன்னும் குறைந்த விலையான 2.50 ரூபாய்க்கு, 35 கழிப்பிடங்களில் வைத்திருக்கிறோம். எனது கவிதை இதழின் மூலமாக வரும் வருமானத்தை நாப்கின்களை வாங்குவதற்காக மட்டும் செலவழிக்கிறேன். இலவசமாக இல்லாமல், குறைந்த கட்டணத்தில் நாப்கின்களைக் கொடுத்தால், குறைந்தபட்ச அக்கறையுடன் அதைப் பாதுகாப்பார்கள், பயன்படுத்துவார்கள் என்பதுதான் என் எண்ணம்” என்றவர், “மாதவிடாயைப் பற்றி பேசுவதுதான் தீர்வு. பேட்மேன் வந்த பிறகு, பல பேட்மேன் சேலஞ்ச்களையும், நாப்கின்களின் அவசியத்தையும் உணர்த்திவருகின்றன ஊடகங்கள். ஆனால், இன்னும் பீரியட்ஸை மறைத்து,  அம்மாவிடம்கூட சொல்லத் தயங்குமளவுக்கு, மாதவிடாயை சீக்ரெட் மேஜிக்காகவே வைத்திருக்கிறது சமூகம். ஒட்டுமொத்தமாக, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கான வசதிகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. த்ரிதராக்களுக்கும் (திருநர்கள்) அடிப்படைத் தேவைகள் இருக்கும் என்பதைப் பற்றியும் கவலையில்லை. நமக்கு யாரைப் பற்றித்தான் கவலை?” என்கிறார். 

தொடக்கத்தில், ஃபேஸ்புக்கில் தனிப்பதிவாக இந்த முயற்சிக்கான ஆதாரத்தை முன்னெடுத்த சோபனுக்கு, தொடர்ச்சியாக சில தன்னார்வலர்களின் நிதி உதவியும் கிடைத்திருக்கிறது. நாப்கின்களைக் குறைந்த விலையில் வைக்கும் கழிப்பறைகளில், வார்டு கவுன்சிலர்களின் உதவியுடன் திருநங்கைகளுக்கான குறியீட்டுப் படங்களை வரைகிறார் இந்த மாணவர், இதழாளர். கழிப்பிடங்களை (த்ரிதரா கழிப்பிடங்கள்) பயன்படுத்துவதற்கு வழிவகுத்ததற்காக, திருநர்களால் கொண்டாடப்படும் சோபனிடம் அவரது இலக்கைப் பற்றிக் கேட்டால், “21 வயதில்தான் பெண்களுக்கு பிரச்னை என்னவென்றே எனக்குத் தெரிந்திருக்கிறது. சிலருக்கு 80 வயதானாலும் தெரிய வருவதில்லை. தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை. நான் தொலைக்காட்சி ஆர்வலர் இல்லை. வெறும் மாணவன். அதனால் தொடர்ந்து பேசுவேன்” என்கிறார் தீர்க்கமாக.

வாழ்த்துக்கள் சோபன் என்றதும்,  ”என்னுடைய ‘பந்தன்’ திட்டத்தைப் பற்றிய விஷயங்களை ஃபேஸ்புக்கில் பகிர்வதைத் தொடர்ந்து பார்த்த 13 வயது சிறுமி, அவளுடைய உண்டியல் பணத்தைக் கொடுத்தாள். அறிவால் வளர்ந்தவர்கள் அனைவரும், மாதவிடாய் சுகாதாரத்திற்காகப் பேசட்டுமே” என்கிறார் இந்த கொல்கத்தா பேட்மேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்