பிரசென்ஸ் ஆஃப் மைண்ட் கை கொடுக்கும் பாஸ்! ஒரு தன்னம்பிக்கைக் கதை! #MotivationStory

கதை

`டைப்பாற்றலுக்குத் தேவைப்படுவதெல்லாம் தைரியம்; எதையும் இழக்கத் தயாராகிற, எதையும் எதிர்க்கத் துணிகிற உறுதி’ - அர்த்தமுள்ள கருத்தை நயமாகச் சொல்லியிருக்கிறார் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). கல்வி நமக்குக் கற்றுக்கொடுப்பது ஏராளம். மறுப்பதற்கில்லை. ஆனால், வாழ்க்கை நமக்கு வைக்கும் பயிற்சிகளில் வெற்றிபெற கல்லூரிப் படிப்பில் பெற்ற பட்டமோ, டிஸ்டிங்ஷனோ மட்டும் போதாது. `பிரசென்ஸ் ஆஃப் மைண்ட்’ எனப்படும் புத்தி சாதுர்யம் வேண்டும். அதாவது, எதையும் புதிதாக யோசிக்கும், புதிதாக அணுகும் படைப்பாற்றல் திறன். வாழ்க்கையின் பல தருணங்களில் வெற்றி நம் அருகே வரும்போதெல்லாம், எங்கே அது கைநழுவிப் போய்விடுமோ என்கிற பயமும் எழும். அந்த நேரத்தில்தான் தேவை கிரியேட்டிவிட்டி. இது இருந்தால் வெற்றியைச் சிக்கென்று பற்றிக்கொண்டுவிடலாம். பிரசென்ஸ் ஆஃப் மைண்ட் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் இக்கட்டையும் சமாளிக்கலாம்; எதிலும் வெற்றி பெறலாம்; நினைக்கும் உயரங்களையெல்லாம் அடையலாம். இந்த உண்மையை எடுத்துச் சொல்லும் கதை இது.

அமெரிக்காவின், நியூயார்க்கிலிருக்கும் மிகப் பிரபலமான பிசினஸ் ஸ்கூல் அது. அந்தப் பள்ளியில் படித்தவர்களில் பலரும் புகழ் பெற்ற தொழிலதிபர்களாகியிருந்தார்கள். பலர், பெரிய நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தார்கள். அந்தப் பள்ளியில் படித்து முடித்தவுடனேயே வேலைக்கு உத்தரவாதம் என்கிற நிலை. ஆனால், அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. அந்த பிசினஸ் ஸ்கூலில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை; சேர விரும்பும் மாணவரின் தனித் திறமையை ஆராய்வார்கள். பல சோதனைகளை வைப்பார்கள். அந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை ஆரம்பித்திருந்தது. இருக்கும் சொற்ப இடங்களுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். மாணவர்களை இன்டர்வியூ செய்ய ஐந்து பேர்கள் நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவே அமைக்கப்பட்டிருந்தது.

நேர்முகத் தேர்வு

நியூஜெர்ஸியைச் சேர்ந்த ஒரு மாணவன், அந்தப் பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே வந்திருந்தான். அவனுக்கு அந்தப் பள்ளியில் சேரவேண்டுமென்பது கனவு, விருப்பம், லட்சியம். தனக்கு முன்னால் இன்டர்வியூ அறைக்குள் நுழைந்த மாணவர்களில் பலர் வெளிறிப் போன முகத்துடன் திரும்பி வருவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுக்கும் நடுக்கமாகத்தான் இருந்தது. ஆனால், அதை வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்தான். அவனுடைய முறை வந்தது. அவன் இன்டர்வியூ நடைபெறும் அறைக்குள் நுழைந்தான். அந்த நிபுணர்கள் குழுவுக்கு எதிரே நாற்காலியில் அமர்ந்தான். வெகு இயல்பாக இருக்க முயற்சி செய்தான். அவர்களுக்கு ``ஹலோ சார்...’’ சொன்னான்.

இன்டர்வியூ செய்யும் நிபுணர் குழுவிலிருந்தவர்களில் ஒருவர், அவனுடைய கல்விச் சான்றிதழ்களையும் மற்றவற்றையும் சரிபார்த்தார். பிறகு இன்டர்வியூ ஆரம்பமானது. மற்றொருவர் தொண்டையைச் செருமிக்கொண்டு சொன்னார். ``மிஸ்டர்... நாங்க உன்கிட்ட கேட்கிறதுக்கு ஈஸியான பத்து கேள்விகளும், கஷ்டமான ஒரேயொரு கேள்வியும் இருக்கு. உனக்கு எது வேணுமோ அதைத் தேர்ந்தெடுத்துக்கலாம். நீ பதில் சொல்றதைப் பொறுத்துதான் இந்த ஸ்கூல்ல உனக்கு இடம் கிடைக்கும்...’’

அந்த மாணவன் ஒருகணம் யோசித்தான். ``சார் என்கிட்ட கஷ்டமான அந்த ஒரேயொரு கேள்வியையே கேளுங்க சார்...’’

``சரி... நீ உன் சாய்ஸைச் சொல்லிட்டே. பெஸ்ட் ஆஃப் லக்’’ என்றவர் அந்தக் கேள்வியைக் கேட்டார். ``இரவு முதலில் வந்ததா, பகல் முதல்ல வந்ததா? இதுக்கு பதில் சொல்லு...’’

அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? சரியாக பதில் சொல்லவில்லையென்றால் பள்ளியில் இடம் கிடைக்காது. அவன் கற்பனை செய்து வைத்திருந்த எதிர்காலம்..?

``ம்... சொல்லுப்பா?’’ இன்னொரு நிபுணர் அவசரப்படுத்தினார்.

இன்டர்வியூவ்

அவன் நிறுத்தி, நிதானமாகப் பதில் சொன்னான்... ``பகல் சார்.’’

``எப்படிச் சொல்றே?’’


``ஸாரி சார். `கஷ்டமான ஒரேயொரு கேள்விக்கு பதில் சொன்னா போதும், ரெண்டாவது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை’னு ஏற்கெனவே நீங்க சொல்லியிருக்கீங்க... ’’

மாணவனுக்குப் பள்ளியில் இடம் கிடைத்துவிட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!