சிட்டுக்குருவிகளுக்கு தினம் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிடுகிறதா? #WorldSparrowDay | preventive measures should be taken to save sparrows

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (20/03/2018)

கடைசி தொடர்பு:09:25 (20/03/2018)

சிட்டுக்குருவிகளுக்கு தினம் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிடுகிறதா? #WorldSparrowDay

வீட்டைச் சுற்றி மரங்களை வளர்த்துப் பேணிவரும் நபர்களுக்கு அந்தக் கீச்... கீச்... ஓசையின் இனிமையைப் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. சின்னஞ்சிறு மென்மையான உடலின் அழகை அவர்கள் ரசிக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. குறுகுறுவென அங்கும் இங்கும் நொடிக்கொரு முறை நோட்டமிடும் அந்தக் கண்களையும், சிதறிக்கிடக்கும் சிறுதானியங்களைக் குதித்து குதித்து கொத்தித் திண்ணும் அந்தச் சிற்றலகுகளையும் கண்களால் பருகிப் பரவசமடையாமலும் இருந்திருக்க முடியாது. சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும் அந்தச் சிட்டுக்குருவிகளின் அடிப்பாகத்தில் படர்ந்திருக்கும் வெள்ளை நிறம் கூட அதற்குத் தனி அழகுதான்.

சிட்டுக்குருவி

"மனையுறைக் குரீஇ" என்று சங்க இலக்கியங்களால் இவை குறிப்பிடப்படுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மனை என்பதற்கு வீடு என்றொரு பொருளுண்டு. வீட்டில் உறைந்து வாழும் குருவி என்று காரணப் பெயர் வைத்து அழைத்துள்ளார்கள் ஆதித் தமிழர்கள். அது உண்மைதான் அல்லவா, வீட்டின் சந்து பொந்துகளிலும் கூட சில வைக்கோல்களை வைத்து கூடு கட்டி வாழக்கூடியவை சிட்டுக்குருவிகள். வீட்டில் இருக்கும் சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைப்பது பாவமாகத்தான் 1990-கள் வரையிலுமே கருதப்பட்டது. இருந்த கொஞ்சம் அரிசியையும் பசியோடு கீச்சிட்ட சிட்டுக்களுக்குத் தானமளித்து பாரதியே செல்லம்மாவிடம் திட்டு வாங்கியுள்ளார். கேட்டவுடன் கட்டியிருக்கும் வேட்டியையும் கழட்டித் தருபவராயிற்றே. ஆனால் சிட்டுக்களுக்குத் தெரியுமா, தங்களுக்காகத் திட்டு வாங்குவது பாரதி என்று. அப்படி பாரதிக்குத் திட்டு வாங்கித் தந்த பாவமோ என்னவோ, இந்தக் குருவிகள் அன்று போல் மனிதர்களோடு இயைந்து வாழும் வாய்ப்பினைப் பெரும்பாலும் இழந்துவிட்டன என்று நினைக்கத் தோன்றுகிறது.

கற்பனைகளை ஒதுக்கிவிட்டுச் சிறிதளவு பகுத்தறிவோடு சிந்தித்தாலே போதும், உண்மை புரிந்துவிடுகிறது. ஆம், அவற்றின் இந்நிலைக்குக் காரணம் அதுவல்ல. இன்று நாம் வாழும் வீடுகள் அனைத்தும் அவை வாழமுடியாமல் போனதுதான் முதல் காரணம். இன்று நம்மால் அவற்றின் இனிமையான கீச்சொலியைக் கேட்கமுடியவில்லை என்றவுடன் அவை அழிந்துவிட்டன அல்லது அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்று சொல்லி அதற்கென ஒரு நாள் வைத்துப் பற்பல முயற்சிகளை முன்னெடுக்கிறோம். அது ஒருபுறமிருக்க இதை அறிவியலால் இன்னும் முழுமையாக நிரூபிக்க முயலவில்லை என்றே தோன்றுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் சிட்டுக்குருவிகள் தென்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் போன்ற பகுதிகளில் அவை வழக்கம்போல் வாழ்வதும், அத்தோடு கிராமங்களிலும், சிறுநகராட்சிகளிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் ஆங்காங்கே நடத்தப்படும் குறுகிய ஆய்வுகளைத் தொகுத்துப் பார்க்கும்போது புரிகிறது.

சிட்டுக்குருவி

முதலில் ஒரு உயிரினம் அழிந்து வருகிறது என்று சொல்வதற்கு முன் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை பற்றிய தெளிவான அறிக்கை வேண்டும். அதைப் பொறுத்தே கான மயில், உள்ளான் போன்ற பறவைகள் அழிவின் விளிம்பில் இருப்பவைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிட்டுக்குருவிகள் பற்றிய முழுமையான ஆய்வறிக்கை இதுவரை இந்தியளவில் வெளியிடப்படவில்லை. மேற்குறிப்பிட்ட எண்ணிக்கைக் குறைவு மற்றும் அதிகரிப்பு பற்றிய தகவல்கள் கூட ஆங்காங்கே சில சூழலியலாளர்களால் சிறு அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமே தெரியவந்தது. உலகளவில் இன்று 54 கோடி சிட்டுக்குருவிகள் இருக்கின்றன என்கின்றனர். பிறகு எப்படி சிட்டுக்குருவிகளை அழிந்துவரும் பறவையாகக் கூறுகிறார்கள்?

சிட்டுக்குருவிகள் அழிந்துவருவதாகக் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1.) அவை முன்போல் அதிகமாகக் காணப்படாதது.

2.) 2005-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அங்கே சிட்டுக்குருவிகள் அழிந்துவருவதாகக் கூறியது.

இங்கிலாந்தில் குருவிகள் குறைந்து வருவதாகக் கூறியதன் தாக்கமே இந்தியாவிலும் எதிரொலித்தது. இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கிலாந்தில் சிட்டுக்குருவிகள் குறைந்த அதே சமயத்தில் அதன் அருகே இருக்கும் ஸ்காட்லாந்திலும், வெல்ஷிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒருவேளை அது வாழ்வதற்கான சூழல் இங்கிலாந்தில் அழிந்து வந்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்து இங்கே வந்திருக்கலாம். அதுபோலத்தான் இந்தியாவிலும், நகரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு, அவைகளுக்கு ஏற்ற சூழலுக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. வாழ்விடங்களைக் கண்டறியும் இந்தப் போராட்டத்தில் சில குருவிகள் மட்டுமே வெல்கின்றன. மற்றவை நகர்ப்புறங்களில் வாழ முடியாமல் மடிந்துபோகின்றன.

சிட்டுக்குருவி

பூனைகள், காக்கைகள் போன்றவற்றிற்கு இரையாவது, கூடுகட்டப் போதிய புதர் பகுதிகளோ, வீட்டில் பொந்துகளோ இல்லாமை, அவற்றுக்கு உணவாகும் பூச்சிகளின் எண்ணிக்கைக் குறைவு, பயிர்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்துகள் போன்றவற்றால் அவை அழிந்துவருவது என்னவோ உண்மைதான். ஆனால், செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சுகள் சிட்டுக்களின் அழிவிற்கு வழிவகுப்பதாகக் கூறப்படுவது உண்மை எனச் சொல்லமுடியாது. காரணம், இதுவரைக்கும் எந்த ஆய்வும் இதனை இன்னும் உறுதிசெய்யவில்லை. மனிதர்களிடையே வாழும் பறவைகள் என்பதால் இவற்றின் அழிவு நம் கண்ணுக்கு நன்கு தெரிகிறது. ஆனால், சிட்டுக்குருவிகள் போல இன்னும் பறவையினங்கள் இன்றோ நாளையோ என தங்கள் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கின்றன. அவற்றையும் சிரத்தை எடுத்து கவனிப்பது அவசியம். ஆனால், நாம் இன்னும் சிட்டுக்குருவிகளைக் காப்பதற்கே போதுமான முயற்சிகள் எடுப்பதாகத் தெரியவில்லை. வருடந்தோறும் இந்நாளைக் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகிறோம். இதனை அரசுதான் செய்யவேண்டும் என்பதில்லை. தனி மனிதர்களாகிய நம்மிடம் இருந்தே தொடங்கலாம். கொஞ்சம் அறமும், அக்கறையும் இருந்தாலே அதற்கு போதும். இதற்கு நல்ல உதாரணம், கோவை பாண்டியராஜன். 


டிரெண்டிங் @ விகடன்