நிச்சயதார்த்த மோதிரம் வரை நீளும் பியர்ஸிங் ட்ரெண்ட்... அதென்ன டெர்மல் பியர்ஸிங்?! #dermalpiercing

இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கும் `டெர்மல் பியர்ஸிங் (Dermal Piercing)', ஃபேஷனின் உச்சகட்டம். `அதென்ன டெர்மல் பியர்ஸிங்?' என்று பலர் தேடவும் தொடங்கிவிட்டனர். காது மற்றும் மூக்கில் சிறு துளையிட்டு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களினால் ஆன அணிகலன்களை அணிந்துகொள்வதை, பல நூற்றாண்டுக்கு முன்பிலிருந்தே வெவ்வேறு கலாசாரத்துக்கு ஏற்றவாறு பின்பற்றி வந்தனர். முதலில், ஆண்-பெண் இருவரும் இந்த அணிகலன்களை அணிந்திருந்தாலும், நாளடைவில் பெண்கள் மட்டுமே அணியும் ஆபரணமாக மாறியது. காது மற்றும் மூக்கில் துளையிடுவதால், பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தும் என்றும், மூக்கின் இடப்பக்கத்தில் துளையிடுவதால் பேறுகால வலியைக் கட்டுப்படுத்தும் என்றும் காலகாலமாக நம்பப்படுகிறது. இப்படி ஏகப்பட்ட நம்பிக்கை மற்றும் மருத்துவ குணம் நிறைந்த இந்தத் துளையிடும் கலாசார வழக்கம், ஒருகட்டத்தில் ஃபேஷனாகவும் மாறியது.

Dermal Piercing

மூக்கு, காதுகளையும் தாண்டி புருவம், உதடு என முகம் மற்றும் உடலின் பெரும்பாலான பகுதிகளில் துளையிடுதலை ட்ரெண்டாக்கினர் சில `பியர்ஸிங் விரும்பிகள்'. அதன் உச்சக்கட்டமாக, தற்போது நிச்சயதார்த்த மோதிரத்தை தங்களின் விரல்களில் பதித்துவருகின்றனர் சில வெளிநாட்டு ட்ரெண்டி கப்புள்ஸ். வலியையும் தாண்டி, `இது எங்கள் காதலின் ஆழம்' என்று தங்களின் சமூக வலைதளங்களில் பதிவும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

Piercing

இந்த டெர்மல் பியர்ஸிங் செய்வதற்கு, இரண்டு உலோகங்கள் அவசியம். ஒன்று, அடித்தளமாகச் செயல்படுகிறது. அதாவது `screw' போன்று தோலின் அடிப்பரப்பில் இருக்கும். மற்றொன்று, மேல்புறத்தில் பதிக்கப்படும் `Stud'. பொதுவாக இந்த stud, வைரம், முத்து போன்ற நவரத்தினங்களைக்கொண்டு பதித்திருப்பார்கள்.

இது தொடர்பாக, டெர்மல் பியர்ஸிங்கில் தேர்ச்சிபெற்ற பில்லி டீபெர்ரி, மேல்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் உரையாடியபோது, ``மைக்ரோ டெர்மல் பியர்ஸிங் மிகவும் பாதுகாப்பானது. `டைட்டானியமினாலான' அடித்தளம், உடலுக்கு எந்தவித பாதிப்புமின்றி நீண்டகாலம் உழைக்கும். இது, மற்ற துளையிடும் நுட்பங்களைவிட வித்தியாசமானது. அடித்தளத் தட்டு மட்டுமே விரலோடு ஒட்டியிருக்கும். ஆனால், மேல்புற stud அதாவது பதிக்கப்படும் கற்களை, விருப்பத்துக்கேற்ப அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம். இந்த டெர்மல் பியர்ஸிங்கை, நான் 10 வருடங்களாகச் செய்துவருகிறேன். ஆனால், இப்போதுதான் பிரபலமாகிறது" என்று கூறி நெகிழ்ந்தார் பில்லி.

டெர்மல் பியர்ஸிங்

நியூயார்க்கின் பிரபலமான பியர்ஸிங் ஸ்டூடியோவின் உரிமையாளர் சாம் அப்பாஸ், ``இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இதைப் பாதுகாக்க பல முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். இதில் உள்ள பெரிய பிரச்னையே துளையிட்ட பகுதியை மாசு படாமல் பார்த்துக்கொள்வதுதான். எந்நேரமும் சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், infection ஆவதற்கு நிறைய வாய்ப்புண்டு. அதேபோல், டாட்டூ போட விரும்பினால், தேர்ந்தெடுத்த அனுபவசாலிகளை மட்டுமே நம்புங்கள். நீங்கள் ரத்தத்தைக் கையாள்கிறீர்கள். எனவே, பாதுகாப்பு மிகவும் அவசியம். இதைச் செய்து முடிக்க 10 நிமிடம் ஆகும். முதலில், மையப்பகுதியை மார்க் செய்து, அதன் சுற்றுப்பகுதியை alcohol மற்றும் iodine கொண்டு சுத்தம்செய்ய வேண்டும். பிறகுதான் துளையிட வேண்டும்" என்று எச்சரிக்கையுடன் செய்முறையையும் விளக்கினார் அப்பாஸ்.

பியர்ஸிங்

ஏராளமானோர் இதைப் பற்றி பாசிட்டிவாகப் பதிவிட்டிருந்தாலும், சிலர் தங்களின் மோசமான அனுபவத்தையும் பதிவுசெய்திருந்தனர். ஏற்கெனவே, `ஃபேஷன்' என்ற பெயரில் `Fishtail eyebrow', 'avacado proposal' என்று வேடிக்கையான பல செயல்கள் மக்களிடம் பிரபலமானது. அந்த வரிசையில் இன்று டெர்மல் பியர்ஸிங் ட்ரெண்டாக இருந்தாலும் ஆபத்தானதாகவும் உள்ளது. வெளிநாட்டில் பிரபலம். இந்தியாவிலும் கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!