வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (20/03/2018)

கடைசி தொடர்பு:14:38 (20/03/2018)

நாஞ்சில் சம்பத் முதல் சூர்யா வரை... இனோவாவில் அப்படி என்ன இருக்கு?!

`தானா சேர்ந்த கூட்டம்' என தன்னை வைத்து மாஸ் காட்டிய இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த அன்புப் பரிசு, டொயோட்டா இனோவா  கார். சில ஆண்டுகளுக்கு முன்பு நாஞ்சில் சம்பத் வைரலாகக் காரணம் இதே இனோவா கார்தான். சம்பத்துக்கு, அது ஜெயலலிதா கொடுத்த பரிசு. ரஜினி, பி.எம்.டபிள்யு வைத்திருந்தாலும் அதிகம் பயன்படுத்தும் கார் இனோவா. இப்படிப் பெரும்பாலானோர் விரும்பிப் பயன்படுத்தும் இனோவாவில், லேட்டஸ்ட்டாக `க்ரிஸ்டா' என்னும் அப்டேட்டட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது டொயோட்டா. எல்லோரும் விரும்பும், எல்லோரும் பயன்படுத்தும், எல்லோரும் வாங்கத் துடிக்கும் இனோவாவில் அப்படி என்னதான் இருக்கிறது?

விக்னேஷ் சிவன்/சூர்யா

இனோவா க்ரிஸ்டா பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, இனோவாவைப் பற்றிய சின்ன எஸ்டிடி. ஆமாம்... எஸ்டிடி-ன்னா வரலாறுதானே?!

இந்த நூற்றாண்டின் வெற்றிகரமான பயணிகள் கார், டொயோட்டா இனோவா. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் இனோவாதான் எம்.பி.வி (மல்ட்டி பர்ப்பஸ் வெஹிக்கிள்) செக்மென்ட்டில் மார்க்கெட் லீடர். காரணம், இந்த செக்மென்ட்டில் தரம், வசதிகள், இன்ஜின் பர்ஃபாமென்ஸ், பராமரிப்பு என எல்லாவற்றிலுமே பெஞ்ச்மார்க் கார் இனோவாதான். போட்டியாளர்கள் யாருமே கிட்டே நெருங்க முடியாததால், இனோவாவின் விலையை அதிகரித்துக்கொண்டே போனது டொயோட்டா. இனோவா, முதன்முதலாக 2009-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. 10 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வந்த இனோவாவின் இப்போதைய விலை 27 லட்சம் ரூபாயைத் தொடுகிறது. விலை கூடக்கூட, இனோவாவின் விற்பனையும் அதிகரித்துக்கொண்டே போவதற்கான ரகசியம் என்ன?

இனோவா க்ரிஸ்ட்டா

காலத்துக்கேற்ற டிசைன், அதிக வசதிகள்கொண்ட டேஷ்போர்டு, தரமான இருக்கைகள், சிறப்பான ஓட்டுதல் அனுபவம் என அசத்தலாக வடிவமைக்கப்பட்ட இனோவா க்ரிஸ்டா, சொகுசு எம்.பி.வி எனும் செக்மென்டின் முதல் கார். பார்ப்பதற்கு பழைய இனோவாவையே நினைவுபடுத்தினாலும், ஒவ்வொரு பாடி பேனலும் புத்தம் புதிது. காரின் முன் பகுதியில் எஸ்.யு.வி-களில் இருப்பது போன்ற க்ரோம் கிரில், ஷார்ப்பான புரொஜெக்டர் ஹெட்லைட், V வடிவ பானெட் ஆகியவை சேர்ந்து, இனோவா க்ரிஸ்டாவுக்கு கெத்தான தோற்றத்தைத் தருகின்றன. பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் பாடி லைன்கள் மற்றும் D-பில்லர், காரின் ஸ்டைலிங்கை உயர்த்துகின்றன. பின்பக்கத்தில் இருக்கும் L-வடிவ டெயில் லைட், பெரிய வீல் ஆர்ச்சுகள் காரின் பிரமாண்டத்தைக் கூட்டுகின்றன.

இனோவா க்ரிஸ்ட்டா

ஒரு ப்ரீமியம் காரின் கேபின் எப்படி இருக்குமோ, அப்படி ஸ்டைலிஷ்ஷாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது க்ரிஸ்டா. கறுப்பு வண்ண டேஷ்போர்டில் செய்யப்பட்டுள்ள வுட் ஃபினிஷ் செம க்ளாஸ். சென்டர் கன்சோல், டோர் பேட், பக்கவாட்டு வென்ட்டுகளில் இருக்கும் சில்வர் ஃபினிஷ் டாப் க்ளாஸ் ரகம். லெதர் இருக்கைகள் செம சொகுசு. LED மூட் லைட்டிங், இரவு நேரப் பயணத்தை ரசிப்பதற்காக உள்ளது. தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, ஜிபிஎஸ் நேவிகேஷன், ரிவர்ஸ் கேமரா உடன் 7 இன்ச் டச் ஸ்க்ரீன், சென்டர் கன்சோலில் மல்ட்டி இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே, பாதுகாப்புக்கு 7 காற்றுப்பைகள், எக்கோ - பவர் மோடுகள் என ஒரு சொகுசு காரில் என்னவெல்லாம் இருக்குமோ அது அத்தனையும்  இனோவா க்ரிஸ்டாவில் உண்டு.

காரின் ட்ரிப் கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் எரிபொருளின் அளவுடன், அதற்கான ரூபாய் மதிப்பும் தெரியும் என்பது இந்திய பட்ஜெட் மனங்களுக்கான கூடுதல் போனஸ். நடுப்பக்க இருக்கைகளில் கால்களை நீட்டி மடக்கி உட்கார அதிக இடவசதி உண்டு. கடைசி வரிசை இருக்கைக்குப் போக எளிதாக இருப்பதோடு, உட்கார்ந்து பயணிப்பதற்கான இடவசதியும் ஓகே. காரில் 20 பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன. ஆனால், போனை சார்ஜ் செய்ய, பென்டிரைவை இணைக்க ஒரே ஒரு யு.எஸ்.பி ஸ்லாட்தான். `எதற்கு இந்தக் கஞ்சத்தனம்?' என்றே யோசிக்க வைக்கிறது. 

இனோவா இன்ட்டீரியர்

டிரைவர்கள் வைத்து ஓட்டுபவர்களுக்கு சொகுசு போதும். ஆனால், டிரைவிங் ப்ரியர்களுக்கு பர்ஃபாமென்ஸ்தானே  முக்கியம்!

புதிய இனோவாவில் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 16 வால்வுகள், சிறிய ஆனால் வேகமான டர்போ சார்ஜர், இன்ஜினின் ஆயுள்காலம் வரை இயங்கக்கூடிய டைமிங் செயின் என இன்ஜின் பே-வை மிக மிகத் தரமாகக் கொடுத்திருக்கிறது டொயோட்டா. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் என கியர்பாக்ஸிலும் மூன்று ஆப்ஷன்கள் உண்டு. பிரபலங்களுக்குப் பிடித்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார் 174bhp பவர், 36kgm டார்க் தரக்கூடியது. எக்கோ, பவர் என இரண்டு மோடுகள் தவிர, ஸ்போர்ட்ஸ் மோடும் ஆட்டோமேட்டிக்கில்  உண்டு. எக்கோ மோடு, ரிலாக்ஸ் க்ரூஸுங்குக்கும் மைலேஜுக்குமானது. பவர் மோடு, பர்ஃபாமென்ஸுக்கானது. ஒவ்வொரு மோடிலும் இன்ஜின் ரெஸ்பான்ஸையும் சத்தத்தையும் நீங்கள் தனித்தனியாக உணரலாம். 

இனோவா க்ரிஸ்ட்டா

சொகுசுக்கு, டிரைவிங்கிற்கு ஓகே. பாதுகாப்புக்கு எப்படி எனக் கேட்டால்,  17 இன்ச் அலாய் வீலுடன் வரும் 215/55 செக்‌ஷன் டயர்கள், ஏபிஎஸ், ESP, குழந்தைகள் சீட்டுக்கு ISOFIX பாயின்ட்கள், 7 காற்றுப்பைகள் என மிகவும் பாதுகாப்பான காராக இருக்கிறது இனோவா.

மற்ற மல்ட்டி பர்ப்பஸ் வெஹிக்கிள்களுடன் ஒப்பிடும்போது இனோவாவின் விலை அதிகம்தான் என்றாலும் இத்தனை சிறப்புகள்கொண்ட காருக்கு இந்த விலை ஓகேதான் என்றே தோன்றுகிறது. இனோவா க்ரிஸ்டாவின் விலை சென்னையில் 18.5 லட்சம் ரூபாயில் தொடங்கி 27 லட்சம் ரூபாய் வரை வேரியன்ட்டுக்கு ஏற்ப மாறும்.

குடும்பத்தோடு பயணிக்கத் தரமான, பாதுகாப்பான, அதிக வசதிகள்கொண்ட கொஞ்சம் பட்ஜெட்டுக்குள் அடங்கக்கூடிய கார் வேண்டுமென்றால், டொயோட்டா இனோவா க்ரிஸ்டாதான் இப்போதைக்கு ஓரே சாய்ஸ்!

அதனால்தான் அத்தனை பேரும் இனோவாவையே விரும்புகிறார்கள்!


டிரெண்டிங் @ விகடன்