ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்பது பள்ளிகளை நடத்திவரும் கைரிக்‌ஷா ஓட்டுநர்!

கைரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக மூன்று தொடக்கப் பள்ளிகள், ஐந்து நடுநிலைப் பள்ளிகள், ஒரு மேல்நிலைப் பள்ளி என ஒன்பது பள்ளிகளைத் திறந்து, பலருக்கும் கல்வி கிடைக்க உதவிவருகிறார் என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

ரிக்‌ஷா ஒட்டுநர்

இந்தியாவில் அரசியல் பின்புலமோ அல்லது தொழில் பின்புலமோ இருந்தால்போதும் பெருமளவில் முதலீடு செய்து பள்ளியை ஆரம்பித்து, `கல்வித் தந்தை' ஆகிவிடலாம். ஆனால், குடும்ப வறுமை காரணமாக தனக்குச் சரியான கல்வி கிடைக்காததால் ஏற்பட்ட கஷ்டத்தை உணர்ந்து, ஏழைக் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்த்து ஒன்பது பள்ளிகளை நடத்திவருகிறார் அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டம் பத்திர்கண்டி பகுதியில் அமைந்துள்ள மதோர்பாண்ட் கிராமத்தைச் சேர்ந்த ரிக்‌ஷாக்காரர் அகமது அலி. 

குடும்ப ஏழ்மை காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் கைரிக்‌ஷா ஓட்டி வறுமையை விரட்டியுள்ளார் அகமது அலி. தன்னைப்போல் ஏழைக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காகவே, தன் பெயரில் இருந்த நிலத்தை விற்று தொடக்கப் பள்ளியைக் கட்ட ஆரம்பித்திருக்கிறார். கட்டுமானத்தைத் தொடங்கியபோதே பணம் முழுவதும் கரைந்திருக்கிறது. கட்டுமானப் பணிகள் பாதியில் நின்றபோது, உள்ளூரில் உள்ள மக்கள் நிதி உதவி செய்யும்படி ரிக்‌ஷாவில் அலைந்த அகமது அலிக்கு, பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இவர்கள், பள்ளியின் கட்டுமானப் பணி முடிந்தவுடன் தங்களுடைய பிள்ளைகளை அகமது அலியின் பள்ளிக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். 

அகமது அலியின் பள்ளி குறித்த விவரங்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவியிருக்கிறது. சுற்றுவட்டார மக்களும் அகமது அலியிடம் தங்கள் பகுதியிலும் பள்ளி திறக்க கோரிக்கைவைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று பல பள்ளிகளைத் தொடங்கியிருக்கிறார் அகமது அலி. இவர் தொடங்கிய பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. தற்போது, மூன்று தொடக்கப் பள்ளிகள், ஐந்து நடுநிலைப் பள்ளிகள், ஒரு மேல்நிலைப் பள்ளி என ஒன்பது பள்ளிகளை நடத்திவருகிறார் அகமது அலி. 

தன்னுடைய பள்ளியில் படித்த மாணவர்கள் உயர்கல்விக்காகக் கல்லூரி இல்லாத குறை இருப்பதைக் கண்ட அகமது அலி, தற்போது கல்லூரி தொடங்குவதற்கு முயன்றுவருகிறார். ``கல்லாமை ஒரு பாவம். இந்தப் பாவம் எல்லா வகைகளிலும் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும். பெரும்பாலான குடும்பங்கள் அடிப்படை கல்வியைப் பெறாமல் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனக்கும் வயதாகிவிட்டது. குறைந்தபட்சம் என்னுடைய கிராமத்தையாவது முன்னேற்ற வேண்டும். அதுவும் கல்வியின் வழியே முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். பள்ளி மாணவர்கள், நன்கு படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும். படிக்காமல் யாரும் கஷ்டப்படக் கூடாது" என்கிறார் அகமது அலி. 

இவரது பள்ளியில் படித்த மாணவர்கள் பலரும் நல்ல வேலைவாய்ப்பைப் பெற்று பொருளாதார அளவில் முன்னேறிவருகின்றனர். அகமது அலி ஒன்பது கல்வி நிறுவனத்தை நடத்திவந்தாலும், இன்னமும் ரிக்‌ஷா ஓட்டுகிறார். ``ரிக்‌ஷா ஓட்டுவதால் வருத்தப்படவில்லை. ஒவ்வொரு தொழிலுக்கும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. இந்த ரிக்‌ஷா ஓட்டுவதுதான் என்னைத் தனித்து அடையாளப்படுத்தியிருக்கிறது" என்கிறார். 

ரிக்‌ஷா ஒட்டுநர்

அகமது அலி எந்தப் பள்ளியிலும் தன்னுடைய பெயரைச் சேர்த்ததில்லை. ஊர்மக்களின் கோரிக்கையை ஏற்று மேல்நிலைப் பள்ளியில் மட்டும் தன்னுடைய பெயரைச் சேர்த்திருக்கிறார். இவருடைய சேவையைக் கண்டு வியந்த பதர்கஞ்ச் எம்.எல்.ஏ கிருஷ்னென்டு பவுல், ``அகமது அலி அபூர்வமான நபர்" என்று பாராட்டி, மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து 11 லட்சம் ரூபாய் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தந்திருக்கிறார். 

வறுமை, அகமது அலியின் கல்வியை வேண்டுமானால் தடுத்திருக்கலாம்; `கல்வி, எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்' என்கிற அவரின் கனவு நிஜமாவதை ஒருபோதும் தடுக்க முடியாது.

படங்கள் உதவி: telegraphindia

Do you like the story?

Please Appreciate the Author by clapping!