Published:Updated:

வீல் சேர் வாழ்க்கை, மிஸ் பிஹெச்.டி..! - அசத்தும் திருவனந்தபுரம் விரிவுரையாளர்

வீல் சேர் வாழ்க்கை, மிஸ் பிஹெச்.டி..! - அசத்தும் திருவனந்தபுரம் விரிவுரையாளர்
வீல் சேர் வாழ்க்கை, மிஸ் பிஹெச்.டி..! - அசத்தும் திருவனந்தபுரம் விரிவுரையாளர்

''ஹாய்... எப்படி இருக்கீங்க?'' என்றுதான் ஆரம்பித்தது, எங்களுக்கிடையேயான முகநூல் உரையாடல். சாரதா தேவியின் முகநூல் பக்கத்தைப் பார்த்ததும் அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது தெரிந்தது. ஆனால், தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை எந்த இடத்திலுமே பதிவுசெய்ய விரும்பாத, எந்த ஒரு நிலையிலும் வார்த்தையில் வெளிப்படுத்த நினைக்காத தன்னம்பிக்கைப் பெண், சாரதா தேவி. தானியங்கி வீல்சேரை இயக்கியவாறு, கம்பீரமாக வகுப்பறைக்குள் நுழைகிறார். மாணவர்களுக்குப் புன்னகையுடன் வகுப்பு எடுக்கிறார். தான் படித்த கல்லூரியிலேயே கெளரவ விரிவுரையாளராகப் பணியாற்றும் அவருடன் சில நம்பிக்கை நிமிடங்கள். 

''என் சொந்த ஊர், திருவனந்தபுரம். என் அப்பா பிசினஸ் பண்றார். அம்மா குடும்பத் தலைவி. என் தம்பி எம்.பி.ஏ படிச்சுட்டிருக்கார். இவங்கதான் என் பலம். நான் பிறக்கும்போதே எலும்புகள் வலு இல்லாமல்தான் இருந்துச்சாம். என்னால் தனியாக நடக்க முடியாது. வீல்சேர் வாழ்க்கைக்கு மாற வேண்டிய சூழ்நிலை. அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. நான் என்னைக்குமே இதை ஒரு குறையா நினைச்சதே இல்லை. எல்லா மனுஷங்க மாதிரிதான் என்னையும் நினைக்கிறேன். படிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். நான் திருவனந்தபுரத்தில் படிச்ச காட்டன் ஹில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உலகளவில் அதிகமான பெண்கள் படிக்கும் பள்ளி என ரெக்கார்டு வாங்கியிருக்கு. அந்தப் பள்ளியில் நான் சேர்ந்ததிலிருந்து என் வகுப்பு ஆசிரியர்களும், மாணவர்களும் என் மேலே அவ்வளவு அன்பா பழகினாங்க. எனக்காகப் பள்ளியின் சார்பா வீல்சேரைக் கொண்டுபோறதுக்கு வசதியா வகுப்பறை வரைக்கும் ரேம்ப் அமைச்சாங்க. பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் பி.ஏ ஆங்கிலம் படிக்க விரும்பினேன். அதற்கு பின்னர் யுனிவர்சிட்டி ஆஃப் கேரளாவில் எம்.ஏ., எம்.பில். முடிச்சு, பிஹெச்.டி பண்ணிட்டிருக்கேன். எனக்கு ஆசிரியர் ஆகணும்னு விருப்பம். நான் படிச்ச கல்லூரியிலேயே கெளரவ விரிவுரையாளரா பணியாற்ற வாய்ப்புக் கிடைச்சது. இந்த மாணவர்கள் இப்போ என்னுடைய உலகம்'' என்றவரின் பேச்சில் அன்பின் உச்சம். 

''என் வெற்றிக்கு பின்னாடி நிற்கும் பெற்றோர்தான், என் வலிகளையும் தாங்கி நிற்கிறாங்க. நான் எதுக்காகவும் ஃபீல் பண்ண மாட்டேன். எந்தக் கஷ்டமும் வராத அளவுக்கு என் குடும்பத்துல உள்ளவங்க அன்பாகவும், அக்கறையாகவும் என்னைப் பார்த்துக்கிறாங்க. என் அம்மா, அப்பா மட்டுமில்ல என் தம்பியும் எனக்குத் தேவையான உதவிகளை முகம் சுளிக்காம செய்வான். அவங்களைப் பொறுத்தவரைக்கும், நான் குழந்தைதான். குழந்தையை எப்படிக் கண்ணும், கருத்துமா பார்த்துக்கிறாங்களோ அப்படித்தான் என்னையும் பார்த்துக்கிறாங்க. வீட்டிலிருந்து கல்லூரி வாசல் வரை வேனில் வந்து விட்டுட்டுப் போவாங்க. என் எலக்ட்ரானிக் சேரில் உட்காருவதற்கு ஏற்ற மாதிரி ரேம்ப் வசதியோடு எங்களுடைய வேனை ரெடி பண்ணியிருக்கோம். நெட் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டு, அரசு வேலைக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன். ரெண்டு வருஷத்தில் பிஹெச்.டி முடிச்சிடுவேன். நிறைய கல்லூரிகளில் செமினார் எடுக்கிறேன். மாணவர்கள் எல்லோரும் என்கிட்ட ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பழகறாங்க. எந்தச் சந்தேகமா இருந்தாலும் தயங்காம கேட்பாங்க. நானும் அவங்களுக்குப் புரிகிற மாதிரி எப்படி வித்தியாசமா வகுப்பு எடுக்கலாம்னு நிறைய ஹோம் ஒர்க் பண்ணுவேன்'' எனச் சொல்லும்போதே சாரதா தேவியின் குரலில் பெருமித வசந்தம். 

பெங்களூரில் ஆரம்பிக்கப்பட்ட, ஒன் ஸ்டெப் அட் எ டைம் (one step at a time) என்கிற அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். ''அந்த அமைப்பு மூலமா ஏதாவது குறையினால் பாதிக்கப்பட்டவங்களுக்கு கவுன்சலிங் கொடுக்கிறேன். அவங்க வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கறேன். என்னை மாதிரி பலர் தங்களுக்கு ஏற்பட்டதை குறையாவே நினைக்கிறதில்லே. ஆனால், இந்தச் சமூகமும் சுற்றியுள்ள சிலரின் புறக்கணிப்பும்தான், முகச்சுளிப்பும் காயப்படுத்துது. உங்க பக்கத்தில் ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால், அவங்களுக்கு அன்பைப் பரிசாக கொடுங்க. அது போதும்; மத்ததை அவங்க பார்த்துப்பாங்க'' என்கிறார் இந்தத் தன்னம்பிக்கை மனுஷி.