100 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்த உலகின் தண்ணீர் தேவை... ஆனால், தண்ணீர் வளம்? #WorldWaterDay | UN reports Urge to take necessary action to prevent water scarcity

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (22/03/2018)

கடைசி தொடர்பு:09:39 (22/03/2018)

100 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்த உலகின் தண்ணீர் தேவை... ஆனால், தண்ணீர் வளம்? #WorldWaterDay

"20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த உலகின் காடுகள் மற்றும் ஈர நிலப்பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கை நாம்  இழந்துவிட்டோம்" - யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசூலே வெளியிட்டுள்ள அறிக்கை இது. இன்று (மார்ச் 22) உலக தண்ணீர் தினம். இந்த தினத்தில் பேசப்பட வேண்டிய முக்கியமான விஷயமாக இருக்கிறது சமீபத்திய ஐ.நா அறிக்கை.

தண்ணீர்

ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இப்போதுள்ள நிலை நீடித்தால் 2050-ம் ஆண்டுக்குள் 5 பில்லியன் மக்கள் நீர் பற்றாக்குறையால் அவதிப்படுவார்கள். மேலும், உலக அளவில் தண்ணீரானது குறைவான அளவிலேயே இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், ஈரநிலங்களை ஆக்கிரமித்துள்ள மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். இதேபோல உலக வன அறிக்கையானது வறட்சி நிறைந்த பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "தண்ணீர் வளத்தை அதிகரிப்பதற்கு விவசாயம் சார்ந்த துறைகள்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் இரும்பையும், கான்கிரீட்டையும் விட்டுவிட்டு மண் மற்றும் மரங்களை நோக்கி நகர முன்வர வேண்டும்" எனச் சொல்லப்பட்டுள்ளது. 

1 கப் டீ தயாரிக்க 27 லிட்டர் தண்ணீர் தேவை என்பது தெரியுமா? 

ஐ.நா அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,600 கன கிலோமீட்டர் நீரை மனிதர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 70% விவசாயம், 20% தொழில் மற்றும் 10% குடும்பங்களுக்குச் செல்கிறது என்று அறிக்கை தெளிவாக சொல்கிறது. உலகத்தின் தண்ணீர் தேவை கடந்த 100 ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1 சதவிகிதம் என்ற வீதத்தில் தண்ணீர் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது உலக அளவில் 7.7 பில்லியனில் இருக்கும் மக்கள்தொகை 2050-ம் ஆண்டில் 9.4 முதல் 10.2 பில்லியன் வரை அதிகரிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் அப்போது மிகப்பெரிய தண்ணீர் தேவை உருவாகும் என ஐ.நாவின் அறிக்கை சொல்கிறது. மேலும் வளர்ந்த நாடுகளில் நீர் ஆதாரங்களை அதிகரிக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டுள்ளன. இதற்கிடையே பூமியில் காலநிலை மாற்றத்தால் வறட்சி ஏற்பட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கொடுக்கும். இதற்கான ஆரம்பம்தான் தற்போது கேப்டவுனில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. அங்குக் குடியிருப்பவர்கள் தண்ணீருக்காகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வறட்சிக் காலங்களில் 2 மில்லியன் பிரேசில் மக்கள் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரைப் பெறுகின்றனர். 

மெக்சிகோ, மேற்கு தென் அமெரிக்கா, தெற்கு ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் வறண்ட நிலப்பரப்பில், எதிர்காலத்தில் மழை குறையக்கூடும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை நிச்சயம் ஏற்படும். அதை நிலத்தடி நீர் விநியோகம் மூலம் மட்டுமே ஈடுசெய்ய முடியாது. அப்போது உலகில் மூன்றில் ஒருபங்கு நாடுகள் மிகுந்த துயரத்தைச் சந்திக்கும். வளரும், வளர்ந்த என அனைத்து நாடுகளிலும் குறைந்த செலவில் தண்ணீரைத் தேக்க சாத்தியமான வழிமுறைகளைக் கண்டறிய முன்வர வேண்டும். அதற்கு அணைக்கட்டுகள் மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களை அமைப்பதும், பலப்படுத்துவதும் ஒரு தீர்வாக இருக்கலாம்.

 வீட்டில் தண்ணீர் சிக்கனத்துக்கு வழிகாட்டும் 20 டிப்ஸ்! 

தண்ணீர்1990-களின் தொடக்கத்தில் இருந்தே தண்ணீரின் மாசுபாடு ஆரம்பித்துவிட்டது. அதிலும், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க கண்டங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆற்றின் நிலையும் மிக மோசமாகிவிட்டது. வரும் காலங்களில் நிலைமை மேலும் மோசமடையும். முக்கியமாக விவசாய வேளாண் விளைபொருட்களில் நோய்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். இதற்குத் தொழில் நகரங்கள் ஒரு முக்கியமான பிரச்னையாகும். சுமார் 80% தொழிற்துறை மற்றும் நகராட்சி கழிவுப்பொருள்கள் மறுசுழற்சி செய்யாமல் நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது. மேலும் இந்த அறிக்கையானது 'பாதுகாப்பு வேளாண்மைக்கு' அழைப்பு விடுகிறது. பாதுகாப்பான வேளாண்மையானது மழைநீரை முறையாகத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதாகும். இது பயிர் சுழற்சி முறையைக் கொண்டு வரும். இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள நல்ல விஷயம் என்னவென்றால், தண்ணீர் தேவையை உணர்ந்து அனைத்து நாடுகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், உலகில் தேவைப்படும் மொத்த நீரையும் சேமிக்கும் அளவுக்குச் சாத்தியம் உள்ளது. இதற்கு ராஜஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுத்ததும், ஜோர்டானிலுள்ள வறட்சி நிலைக்குத் தள்ளப்பட்ட ஜர்கா நீரோட்டத்தை மீட்டெடுத்து பாரம்பர்ய மண் பாதுகாக்கப்பட்டதும் சிறந்த எடுத்துக் காட்டு. மீட்டெடுத்த நீர்நிலைகளால் விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையானது உள்நாட்டு அமைதியின்மை, மக்களின் இடம்பெயர்வு மற்றும் நாடுகளுக்குள்ளேயே மோதல்களுக்கு வழிவகுக்கும். அதனால் உலக நாடுகள் அனைத்தும் தண்ணீர் விஷயத்தில் கவனம் செலுத்த முன்வர வேண்டும். இது உலக நாடுகள் அனைத்திற்குமான எச்சரிக்கை மணி. 

1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47-வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. இந்த வருடத்துடன் உலக தண்ணீர் தினம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தண்ணீரின் விஷயத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்தவில்லை என்பது உறுதியாகிறது. இன்று ஒருநாள் மட்டும் நீரைப்பற்றிப் பேசிவிட்டு மீதமுள்ள நாட்களில் அதனைப் பற்றி மறந்துவிடுகிறோம். தண்ணீருக்கான பற்றாக்குறையைப் போக்குவதற்காக இனி உலக நாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தண்ணீர் சிக்கனத்தை தன்னிடமிருந்தே தொடங்கவும் முன்வரவும் வேண்டும். இந்த அக்கறை நம் பூமிக்காக அல்ல; தாகம் எடுக்கும் நமக்காக!

வீட்டில் தண்ணீர் சிக்கனத்துக்கு வழிகாட்டும் 20 டிப்ஸ்! 


டிரெண்டிங் @ விகடன்