வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (22/03/2018)

கடைசி தொடர்பு:09:09 (22/03/2018)

சொர்க்கம், நரகம்... இரண்டில் எதில் நீங்கள் இருக்கிறீர்கள்? - தன்னை உணரச் செய்யும் கதை!  #MotivationStory 

தன்னம்பிக்கை கதை

`ன்னுடைய அனுமதியில்லாமல் யாராலும் என்னைக் காயப்படுத்த முடியாது’ - இவ்வளவு தைரியமான வார்த்தைகளைச் சொன்னவர், வன்முறை வழிகளில் நம்பிக்கையில்லாத அஹிம்சாவாதி மகாத்மா காந்தி. ஆனால், நாமோ பிறர் உதிர்க்கும் சின்னச் சின்ன வார்த்தைகளில் சுருங்கிப்போகிறோம்; யாரோ, ஏதோ சொன்னதற்காக கவலையைத் தோளில் ஏற்றிக்கொண்டு அலைகிறோம்; உற்ற நண்பர்களை, நெருக்கமானவர்களையே சந்தேகத்தோடு பார்க்கிறோம். நமக்குப் பிறரிடமிருந்து கிடைக்கும் எதிர்வினைகளுக்கு நாம்தான் காரணம் என்பதை நம்மில் பலர் உணர்ந்திருப்பதில்லை. இடவலப் பிழை தவிர, தன்முன் நிற்கும் உருவத்தை அப்படியே பிரதிபலிப்பது கண்ணாடி. உறவுகளும் அப்படித்தான். நாம் பிறர்க்கு என்ன செய்கிறோமோ, அதுதான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். இந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை. 

ஃபோர்ட்டாலேஸா (Fortaleza)... பிரேசிலில் இருக்கும் மிகப் பெரிய நகரம். அங்கே ஒரு பெரும் பணக்காரர் இருந்தார். அவரின் தந்தை விட்டுவிட்டுச் சென்றிருந்த சொத்து ஏகத்துக்கும் இருந்தது. அது போதாதென்று, 20 வருட காலம் `பிசினெஸ்... பிசினெஸ்...’ என அலைந்து திரிந்ததில் அதைவிட கணிசமாகச் சொத்து சேர்த்திருந்தார். அண்மைக்காலமாக அவரை ஒரு கவலை அரித்துக்கொண்டிருந்தது. அவரை வீழ்த்த உடனிருப்பவர்களே முயற்சிக்கிறார்கள் என்கிற எண்ணம். `என்னைச் சுற்றியிருக்கும் யாரும் எனக்கு உண்மையாக இல்லை’ என்கிற நினைப்பு நாளுக்கு நாள் அவருக்கு வலுத்துக்கொண்டே போனது. அவரைக் கொலை செய்ய யாரோ முயற்சிக்கிறார்கள், பின்தொடர்கிறார்கள் என்கிற பயம்கூட அவருக்கு வந்தது. அந்த சந்தேகம் அவரை மனதளவில் வீழ்ந்துபோகச் செய்தது. 

கண்ணாடி

எல்லோரிடமும் எரிந்துவிழுந்தார். அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார். இரவுகளில் நித்திரையின்றி தவித்தார். சாப்பாடு குறைந்துபோனது. பயம் ஒரு வேலிபோல அவரைச் சுற்றிப் படர்ந்தது. மருத்துவரிடம் போகலாமா என்றுகூட அவர் யோசித்தார். ஒருநாள் அவருக்கு ஒரு பாதிரியார் நினைவுக்கு வந்தார். சிறு வயதிலிருந்து அந்தப் பணக்காரரின் குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தவர் அந்த பாதிரியார். கருணைவடிவான அவரின் முகம் நினைவுக்கு வந்ததுமே அவருக்கு பாதி தெம்பு வந்துவிட்டது. `அடடே... இத்தனை நாள்கள் அவர் ஞாபகம் இல்லாமல் போய்விட்டதே...’ என்று யோசித்தார். பல மாதங்களாக சர்ச்சுக்குப் போகாததும் அவருக்கு உறைத்தது. உடனே தன் காரை எடுத்துக்கொண்டு பாதிரியாரைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். 

அது ஒரு மதிய நேரம். வார நாள்கள் என்பதால் சர்ச்சில் ஒருவரைக்கூடக் காண முடியவில்லை. பணக்காரருக்கு பாதிரியாரின் அறை தெரியும். நேரே அங்கே போனார். பாதிரியாருக்கு, பணக்காரரைப் பார்த்ததும் ஆச்சர்யம். வரவேற்றார், விசாரித்தார். கொஞ்ச நேரம் கழித்து, ``உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஃபாதர்...’’ என்றார் பணக்காரர். 

``சொல்லுப்பா...’’

``என்னைச் சுத்தியிருக்குறவங்க யாரையும் என்னால நம்ப முடியலை. என் மனைவி, பிள்ளைகள் எல்லாருமே எனக்கு சுயநலக்காரங்களா தெரியறாங்க. இங்கே யாருமே சரியில்லை...’’ என ஆரம்பித்து, பல சம்பவங்களைச் சொல்லிப் புலம்பினார் பணக்காரர். பாதிரியார் அவர் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டார். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுக் கேட்டார்... ``சின்ன வயசுல உன் அம்மாவோ, அப்பாவோ கதை சொல்லி கேட்டிருக்கியா?’’ 

``கேட்டிருக்கேனே... அப்பா சொல்லிக் கேட்டதில்லை. அவருக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. ஆனா, அம்மா பல கதைகளைச் சொல்லியிருக்காங்க. `கதை சொன்னாத்தான் தூங்குவேன்’னு நான் அடம்பிடிச்சிருக்கேன்...’’ சொல்லும்போதே பழைய நினைவுகள் இதமாக அவர் மனதில் விரிந்தன. 

``இப்போ நான் ஒரு கதை சொல்லட்டுமா?’’ 

பணக்காரர் இப்போது ஒரு குழந்தைபோல ஆகிப்போனார். ``சொல்லுங்க ஃபாதர்...’’ என்றவர், தன் இருக்கையிலிருந்து ஆர்வமாக முன்னகர்ந்தார். 

பெண்

``ரொம்ப காலத்துக்கு முன்னால ஒரு கிராமத்துல பெரிய வீடு ஒண்ணு இருந்தது. அந்த வீட்டுக்குள்ள ஒரு ரூம்ல நூத்துக் கணக்குல கண்ணாடிகள் இருந்துச்சு. யார் வேணும்னாலும் அந்த வீட்டுக்குள்ள போகலாம். ஒரு சின்னப் பொண்ணு ஒரு நாள் அந்த வீட்டுக்குள்ள போனா. சுத்தியிருந்த கண்ணாடியில அவளை மாதிரியே நூத்துக்கணக்குல பொண்ணுங்க. இவ சிரிச்சா, அத்தனைபேரும் சிரிச்சாங்க. இவ கைதட்டினா, அவங்களும் கைதட்டினாங்க. `இந்த உலகத்துலயே அழகான, சந்தோஷமான இடம் இந்தக் கண்ணாடி வீடு’னு நினைச்சா அந்தப் பொண்ணு. அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்துட்டுப் போவா.

 அதே வீட்டுக்கு ரொம்ப துயரத்தோட, மனஅழுத்தத்துல இருந்த ஒரு ஆள் வந்தான். அவனும் சுத்திப் பார்த்தான். சுத்தியிருந்த நூத்துக்கணக்கான கண்ணாடியில அவனை மாதிரியே இருந்த உருவங்கள் எல்லாமே சோகத்தோட இருந்தாங்க. அவனையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அவன் பயந்துபோய் அவங்களை அடிக்கக் கை ஓங்கினான். அவங்களும் அவனை அடிக்கக் கை ஓங்கினாங்க. `இந்த உலகத்துலயே மிக மோசமான இடம் இந்தக் கண்ணாடி வீடு’னு நினைச்சான் அவன். உடனே அங்கேயிருந்து வெளியேறிட்டான். 

இந்த உலகமும் அந்த வீட்ல இருக்குற ரூம் மாதிரிதான். அதுக்குள்ள நாம இருக்கோம். நம்மைச் சுத்தி நூத்துக்கணக்கான கண்ணாடிங்க இருக்கு. நாம சிரிச்சா, அதுல தெரியுற பிம்பங்களும் சிரிக்கும்; நாம அழுதா பிம்பங்களும் அழும். இந்த உலகமும் சொர்க்கம், நரகம் மாதிரிதான். அதை எப்படி எடுத்துக்குறதுங்கறது நம்ம கையிலதான் இருக்கு. குறை சொல்றதைவிட்டுட்டு, மத்தவங்களை நம்புறதுக்கு முதல்ல நீ பழகு. மத்தவங்ககிட்ட அன்பு காட்டு... எல்லாம் சரியாப் போயிடும்.’’ 

***  
   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்