நீங்கள் சிட்டி ரோபோவா இல்லை டாக்டர் வசீகரனா? - மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்! #MorningMotivation | Choose the right job, to escape from pressure

வெளியிடப்பட்ட நேரம்: 08:33 (23/03/2018)

கடைசி தொடர்பு:08:53 (23/03/2018)

நீங்கள் சிட்டி ரோபோவா இல்லை டாக்டர் வசீகரனா? - மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்! #MorningMotivation

எல்லோரும் பேசும், எல்லோரும் கேட்கும், எல்லோரும் விவாதிக்கும் வார்த்தையாக இருக்கிறது மன அழுத்தம். இந்த மன அழுத்தத்துக்கு முதல் காரணமாக எல்லோருமே சொல்வது வேலை அழுத்தம். வொர்க் ப்ரஷர்தான் பெரிய பிரச்னையே எனப் புலம்பாதவர்களை இந்தத் தலைமுறையில் பார்க்க முடியாது. நமக்கான சரியான வேலையைத் தேர்ந்தெடுத்தால், சரியான வேலை சூழலில் இருந்தால் மட்டுமே இந்த வேலை அழுத்தத்தில் இருந்து தப்பிக்க முடியும். அப்படியானால் சரியான வேலை, சரியான சூழலுக்குள் நாம் ஃபிட்டாவது எப்படி?

மன அழுத்தம்

1. வெறுக்கும் வேலையில் இருக்காதீர்கள்!

முதலும், முடிவுமான ஒரே யோசனை, விரும்பும் வேலையில் இருக்க வேண்டும் என்பது. ஒரு வேலையைப் பிடித்துச் செய்யும்போது மன அழுத்தமோ அல்லது வேறு எந்த அழுத்தங்களோ, அங்கே உங்களை சூழ முடியாது. வேலை உங்களுக்கு எப்போது பாரமாக இருக்கிறது, 'அய்யோ இன்னைக்கு வேலைக்குப் போகணுமா' என்று தோன்றுகிறதோ, அப்போது நீங்கள் வேலையை, பணியிடத்தை மாற்ற வேண்டிய சூழல் வந்துவிட்டது என்று அர்த்தம். நிறைய பேர் இந்த வேலைதான் நமக்கு செட் ஆகும், நமக்கு வேறு வேலை கிடைக்குமா என்று தயங்கும்போதுதான் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.

வேலை மாறியதால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் என்று யாரும் கிடையாது. உழைப்பு உங்களுடையது. அதனால் எந்த வேலை மாறினாலும் கடுமையாக உழைக்க முடியும் என்று நம்புபவர்கள் வேலையை மாற்றத் தயங்க வேண்டியதில்லை. தொடர்ந்து மோசமான வேலை சூழலில் இயங்கும்போது அது மன அழுத்தத்தை அதிகரித்து தீவிர உடல், மன பிரச்னைகளில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் வேலை கசக்க ஆரம்பிக்கும்போதே வேலை மாற்றத்துக்கான சிறுசிறு முயற்சிகளை எடுக்க மறக்காதீர்! 

2. உங்களுக்கு நீங்களே டாக்டர்!

வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், உடல் பலத்தை இழுந்துவிட்டால் அதன்பிறகு எந்த வேலையையுமே செய்ய முடியாது. ஒருவர் தான் விடுமுறை எடுத்தால் தன்னுடைய வேலைக்கு வேறு யாராவது வந்துவிடுவார்கள் என்று பயந்தே குடும்பத்தோடு எந்த விடுமுறைக்கும் வெளியூர் சென்றதில்லை. எந்நேரமும் வேலை, அது தரும் பிரஷர், வேலை போனால் என்ன செய்வது என்கிற பயம் என எல்லாம் சூழந்து 38 வயதிலேயே அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நம்முடைய உடல் என்பது ரோபோ அல்ல. யாரும் எதையும் ப்ரோகிராம் செய்ய முடியாது. அதனால் 24/7 என எந்நேரமும் நம் உடல் இயங்காது. குறைந்தபட்சம் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் என்பது கட்டாயம். அதனால் டாக்டர் வசீகரனாக மாறி சில கேட்ஜெட்கள் துணையை நாடுங்கள். இப்போது ஃபிட் பிட் என ஃபிட்னஸ் ஸ்ட்ரிப்புகள் பெருமளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதை போனோடு ப்ளூடூத்தில் கனெக்ட் செய்துவிட்டால் போதும். உங்களுடைய உடல் சார்ந்த முக்கால்வாசி இயக்கங்களை அது சொல்லிவிடும். அந்த ஃபிட் பிட் நீங்கள் எவ்வளவு நேரம் ஆழ்ந்து தூங்குகிறீர்கள் என்பதைச் சொல்லும். அதையே நீங்கள் ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ளலாம். 

3. காது... நல்லா கேளு!    

காதுகள்தான் நம் உடலின் மிக முக்கியமான பகுதி என்பதை வேலை, வேலை எனச் சுழல்கிற எல்லோருமே நிச்சயம் மறந்திருப்போம். வேலையில் மூழ்கிவிட்டால் யார் என்னப் பேசுகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனம் திரும்பாது. ஆனால், காதுகள் மிகமிக முக்கியம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, உடன் வருபவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள், எதைப் பற்றி அதிகம் விவாதிக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அந்தப் பேச்சுகளை வைத்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதற்கு அந்த உரையாடல்கள் நிச்சயம் உதவும். உங்களைப் பற்றியும், உங்கள் வேலையைப் பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்று உங்கள் சகாக்கள், உங்கள் மேலதிகாரிகள் என எல்லோரிடமும் அடிக்கடி பேசி கருத்துக்களை வாங்குங்கள். நீங்கள் சரியான திசையில்தான் செல்கிறீர்களா என்று கணக்குப்போட அது அவசியம்.

மன அழுத்தம்

4. தோல்விகள் பலப்படுத்தும்!

தோல்வி என்பது முடிவல்ல. தோல்விகள்தான் உங்களை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுபோகும் என்பதோடு உங்களை எல்லா சூழலையும் தாங்கும் மனிதராக/மனுஷியாக மாற்றும். தோல்விகளைக் கடந்துவரும்போது மிகப்பெரிய வலிகளைத் தாங்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அந்த வலிகளைத்தாங்கினால் பின்னர் பெரிய வெற்றிகளைத் தூக்கிக்கொண்டாட முடியும். மிக முக்கியமாக கிரியேட்டிவான வேலைச்சூழலில் தோல்விகள் அல்லது ஏமாற்றங்கள் என்பது சகஜம். பாசிட்டிவ் எண்ணங்களோடு இதைக் கடந்துவரவேண்டும்.

5. சகோக்கள் முக்கியம்!

பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்ட மனிதர்களோடு பழகுங்கள். அடுத்தவர்களைப் பற்றியும், வேலையையைப் பற்றியும் எப்போதும் புலம்பிக்கொண்டே இருக்கும் சகாக்களிடம் இருந்து விலகியே இருங்கள். அவர்களின் நெகட்டிவ் பேச்சுக்களை உங்களையும், உங்கள் வேலையையும் நிச்சயம் பாதிக்கும்.

6. பணம் உங்கள் மகிழ்ச்சியின் அளவீடு அல்ல!

உங்களிடம் போதுமான பணம், சொந்தமாக வீடு, கார் என எல்லாம் இருக்கிறது என்பதற்காக வேலையில் எமோஷனலான முடிவுகளை எடுக்கக்கூடாது. பணம் அதிகம் இருப்பது வெற்றிக்கான குறியீடு கிடையாது. பணத்தைத்தாண்டி நல்ல விஷயங்களில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். பணத்தைத்தாண்டி உடன் இருப்பவர்களின் மகிழ்ச்சி மட்டுமே வெற்றிக்கான அளவுகோல். அதை அடையும் முயற்சிகளில் இறங்குங்கள்.

7. உங்கள் வாழ்விடம் அலுவலகம் அல்ல வீடு!

நீங்கள் அதிகம் செலவழிக்க வேண்டிய இடம் அலுவலகம் அல்ல, வீடு. அதிகபட்சம் 9 மணி நேரம் என்பது வேலைக்கு ஓகே. அதைத்தாண்டி போகக்கூடாது. 9 மணி நேரத்துக்கு மேல் என்றால் நீங்கள் வேறு யாருக்கோ உழைத்துக்கொண்டிருகிறீர்கள் என்றுதான் அர்த்தம். அதிக நேரம் அவர் அலுவலகத்தில் இருப்பார் என்பதற்காக எல்லாம் யாரும் ஊதிய உயர்வு தருவதில்லை. அலுவலக இ-மெயில், வாட்ஸ்அப்களை மறந்துவிட்டு குடும்பத்துக்கான நேரத்தை குடும்பத்தினருடன் மட்டுமே செலவிடுங்கள்.

8. வருத்தப்பட்டு பாரம் சுமக்காதீர்கள்!

வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தால் எந்த பாரமும், அழுத்தமும் குறையாது. ஏதாவது ஒரு மாற்றம் செய்தால் மட்டுமே மனம் நிம்மதியடையும். அதனால் உங்களுக்குள்ளே நீங்கள் வருத்தப்படுவது, அல்லது அருகில் உள்ளவர்களிடம் வருத்தப்படுவது தேவையற்றது.வருத்தமும், பயமும் உங்களை சூழந்துகொண்டால் நீங்கள் எந்தத் தெளிவான முடிவையும் எடுக்கமுடியாது.

9. கற்றுகொண்டேயிரு!

கற்றுக்கொண்டேயிருப்பதும், வேலையில் அப்டேட்டாக இருப்பதும் மட்டும் செய்தால் போதும் நீங்கள் வேலை குறித்து பயப்படவேண்டியதேயில்லை. உங்கள் துறையில் என்னென்ன மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கிறது என்பதை கவனியுங்கள். ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்தால் அது குறித்துப் படியுங்கள். அதற்கான கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். எல்லாவகையிலும் அப்டேட்டாக இருக்கும்போது புதிய வேலைகள் உங்களைத் தேடிவரும்.

10. உங்கள் மகிழ்ச்சிதான் முக்கியம்!

`வெற்றிபெற்றால்போதும். அதுதான் எனக்கு சந்தோஷம்’ என்பதுதான் பலரின் ஸ்டேட்மென்ட். வெற்றி என்பது ஒரு ப்ராசஸ். அதற்கு எவ்வளவு காலம் என்கிற வரைமுறை இல்லை. உங்களின் தற்போதைய நிலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியாகவும், உண்மையாகவும் இருக்கும்போது பயமும், அழுத்தமும் உங்களை விட்டுப்பபோய்விடும்.

கூல் நண்பர்களே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்