காந்தி பயணித்த இங்கிலாந்து கார் இப்போது இந்தியாவுக்கு வருகிறது..! #Morris | Morris garages coming to india

வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (25/03/2018)

கடைசி தொடர்பு:11:06 (25/03/2018)

காந்தி பயணித்த இங்கிலாந்து கார் இப்போது இந்தியாவுக்கு வருகிறது..! #Morris

1896-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 14-ம் தேதி சனிக்கிழமை. மழையின் ஈரம் படிந்த அந்த லண்டன் சாலையில் வரலாற்று சிறப்புமிக்க 87 கி.மீ பயணம் தொடங்குகிறது. அழகான கடற்கரை நகரமான பிரைடனுக்கு, இங்கிலாந்தின் சாலைகளில் கார்களுக்கான வேகம் கூட்டப்பட்டு கார்கள் வேகமெடுக்க ஆரம்பித்த முதல் நாள் அது. அந்தப் பயணத்தில் முன்வரிசையில் இருந்தவை மோரிஸ் (Morris) கார்கள்தான்.

மோரிஸ் Morris கார் - காந்தி படக்காட்சி

இன்றளவும் மோரிஸ் மைனர் கார்களை நம் கடற்கரை நகரமான, சென்னையிலும் புதுச்சேரியிலும் பார்க்கலாம். மோரிஸுக்கு, தமிழ்நாட்டில் வரலாறுகள் உண்டு. காந்தியே பயணித்துள்ளார் இந்த காரில்! பல காலங்களாக நாம் மறந்திருந்த மோரிஸ் கார், இப்போது நினைவுக்குவருவதற்குக் காரணம், இந்த நிறுவனம் சமீபத்தில் மீண்டும் தனது கார்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளதுதான். ஆனால், ஒரு சின்ன மாற்றம். இப்போது மோரிஸ் கராஜ் நிறுவனம், சீனாவின் கார் நிறுவனமான SIAC motor corporation-னிடம் இருக்கிறது.

MG motors

கடந்த செப்டம்பர் மாதம் செவர்லேவின் ஹாலோல் தொழிற்சாலையை முழுவதுமாக வாங்கிய SIAC, 2,000 கோடி ரூபாய் செலவில் தொழிற்சாலையைப் புதுப்பித்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் மோரிஸ் கராஜ் பிராண்டில் வாகனங்களை உற்பத்திசெய்து விற்பனை செய்யப்போகிறதாம். மோரிஸ் கராஜின் இந்தப் பெரிய சைஸ் கராஜில் தற்போது ஆண்டுக்கு 80,000 கார்களைத் தயாரிக்க முடியும். அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தத் தொழிற்சாலையிலிருந்து 2,00,000 வாகனங்கள் வெளிவரவிருக்கின்றன என்பது கான்ஃபிடன்ட் தகவல். முதல் காரை அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடவிருக்கும் SIAC, இந்தியச் சந்தையை நன்றாகவே புரிந்துவைத்துள்ளது. இந்தியாவில் டாப் கியர் போட்டு வேகமாக வளர்ந்துவருகிறது எஸ்யூவி சந்தை. அதிலும் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்தான் இப்போது ட்ரெண்டிங். ஹேட்ச்பேக் கார்கள் விற்பனைக்குப் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும்போது அசால்ட்டாக மாசம் 10,000 விட்டாரா ப்ரெஸா மற்றும் க்ரெட்டா கார்கள் விற்பனையாகின்றன. இந்தச் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு முதல் காராக எஸ்யூவி-யைக் கொண்டுவருகிறது இந்த நிறுவனம்.

மோரிஸ்

மோரிஸ் கராஜுடன் நல்ல வரவேற்பைப் பெற்ற டர்போ இன்ஜின் மற்றும் இரண்டு எஸ்யூவிகள் கார்கள் இருந்தாலும் அதைக் கொண்டுவராமல் இந்தியாவுக்கு வேறு ப்ளான் வைத்துள்ளது. ஜீப் காம்பஸில் உள்ள ஃபியாட்டின் 2.0 லிட்டர் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட எஸ்யூவி-யை உருவாக்கவுள்ளது. இதுமட்டுமல்ல, இந்த காரை ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்குப் போட்டியாகவே பொசிஷன் செய்யவுள்ளது. இதுவரை இந்தியாவில் இல்லாத IoT தொழில்நுட்பமும் இந்த காரில் வரவுள்ளது.

`மோரிஸின் இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யின் விலை 15 லட்சம்தான் இருக்கும்' என்கிறார்கள். இதுமட்டுமல்ல, அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் புது காரை வெளியிடவுள்ளது இந்த நிறுவனம். இதற்காக முயற்சிகள் டாப் கியரில் ஓடுகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் மோரிஸ் கராஜின் 300 டீலர்கள் உருவாகிவிடுவார்கள். அதற்கான வேலை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சீனாவின் வெற்றிகரமான எஸ்யூவியான Rowee RX5 காரையும் மோரிஸ் பிராண்டில் விற்கப்போகிறதாம் இந்த நிறுவனம்.

SAIC corporation limited mg cars

மோரிஸ் கார்கள், அதிகம் விற்பனையாகும் என்ற நம்பிக்கையுள்ளது. மோரிஸ் பிராண்டை மட்டுமே இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்குக் காரணம், அதன் மீது மக்களுக்கு உள்ள பரிச்சயம்தான். முன்பே சொன்னேன் அல்லவா, `காந்தி மதுரை வந்தபோது மோரிஸ் காரில் பயணித்தார்' என்று. இப்போதும் ரன்னிங் கண்டிஷனில் இருக்கிறது அந்த கார். மதுரைக்குப் போனால் பார்த்து வரவும்!


டிரெண்டிங் @ விகடன்