`கடவுளே... எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை?’ - கேள்விக்கு பதில் சொல்லும் கதை! #FeelGoodStory | Success Story of Arthur Ashe

வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (27/03/2018)

கடைசி தொடர்பு:11:01 (27/03/2018)

`கடவுளே... எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை?’ - கேள்விக்கு பதில் சொல்லும் கதை! #FeelGoodStory

மிகப் பெரும் துயரம், இன்னல்கள் ஏற்பட்டாலும், அவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு இயல்பாக வாழ்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவரின் கதை இது. 

 

பிரபல அமெரிக்க நடிகர் பிரெண்டென் ஃப்ரேஸசர் (Brendan Fraser) ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்...  `என் வாழ்க்கையில் நான் மிகுந்த திருப்தியை அடைந்துவிட்டேன். அழகான மனைவி வாய்த்திருக்கிறார்; சுவாரஸ்யமான தொழில் (Career), என்னை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கிறது; நான் மிக மிக மகிழ்ச்சியான ஆள் என்பதையும் நான் அறிவேன்.’ பிரெண்டென் ஃப்ரேஸருக்குக் கிடைத்த மன நிறைவு யாருக்கும் எளிதில் வாய்க்காதது. இந்த நிறைவு கிடைப்பது வரம். கிடைத்த வாழ்க்கையில் திருப்தியடையாதவர்களுக்குத் தெரியாது... அவர்கள் இடத்தை அடைய எத்தனையோ லட்சம் பேர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள் என்பது. எளிமையாக, அடக்கமாக, மகிழ்ச்சியாக, பிறர் மேல் கள்ளம் கபடமில்லாத அன்பு செலுத்தி வாழ்வதுதான் வாழ்க்கை. இப்படி வாழ்பவர்களுக்குத்தான் திருப்தி கிடைக்கும். ஆரோக்கியத்தோடு, அடிப்படைத் தேவைகளுக்குப் பிரச்னையில்லாமல், சுற்றம் சூழ திருப்தியாக வாழ்வது இருக்கட்டும்; மிகப் பெரும் துயரம், இன்னல்கள் ஏற்பட்டாலும், அவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு இயல்பாக வாழ்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவரின் கதை இது. 

தன்னம்பிக்கை கதை

மூன்று `கிராண்ட் ஸ்லாம்’ பட்டம் (ஆஸ்திரேலியன் ஓப்பன், விம்பிள்டன், யு.எஸ்.ஓப்பன்) வென்ற டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷே (Arthur Ashe). அமெரிக்காவின் டேவிஸ் கோப்பை டீமில் (United States Davis Cup team) சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் கறுப்பின வீரர். அமெரிக்காவின் வர்ஜீனியாவிலிருக்கும் ரிச்மாண்டில் பிறந்தவர். அவருக்கு ஏழு வயது ஆன போது அம்மா இறந்து போனார். ஆர்தரும் அவருடைய தம்பியும் அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். அப்பாவும் பிரமாதமான வேலையெல்லாம் பார்க்கவில்லை. குழாய் ரிப்பேரிலிருந்து, எலெக்ட்ரிக்கல் வேலை வரை கிடைக்கும் வேலைகளைச் செய்யும் கூலித்தொழிலாளி (Handyman). ஆனாலும், அக்கறையோடு பிள்ளைகளை வளர்த்தார். பல கறுப்பினக் குழந்தைகளின் பிடித்த விளையாட்டாக இருந்த கால்பந்து பக்கம் ஆர்தரின் கவனத்தைச் செல்லவிடாமல் தடுத்து, டென்னிஸில் ஆர்வம் ஏற்படச் செய்தார். 

ஆர்தருக்கு, ஜான்சன் என்கிற நல்ல கோச்சரும் கிடைத்தார். 1963-ம் ஆண்டு, அமெரிக்காவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் டீமில் சேர்ந்ததிலிருந்து ஆர்தருக்கு ஏறுமுகம்தான். பல பரிசுகள், பதக்கங்கள், கிராண்ட் ஸ்லாம் பட்டம்... வெற்றியில் ஏறிக்கொண்டிருந்தவருக்கு இடிபோல ஒரு துயரம் வந்து சேர்ந்தது. 1979-ம் ஆண்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்காக பைபாஸ் சர்ஜரியும் செய்துகொண்டார். இதய அறுவைசிகிச்சை நடந்து சில மாதங்கள் கழிந்த பிறகும்கூட அவரால் முன்பைப் போல ஓட முடியவில்லை. ஓடினால், மார்பில் வலி வந்தது. இதைச் சரிசெய்வதற்காக இன்னொரு இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டார். 1988-ம் ஆண்டு மற்றோர் இடி. அவருக்கு ஹெச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு இதய அறுவைசிகிச்சை நடந்தபோது ஏற்றப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ் இருந்திருக்கலாம் எனக் காரணம் சொல்லப்பட்டது. 1992-ம் ஆண்டு தனக்கு ஹெச்.ஐ.வி இருப்பதை பகிரங்கமாக அறிவித்தார் ஆர்தர். 

FeelGoodStory

ஆர்தர் ஆஷே-வுக்கு எய்ட்ஸ் இருந்ததோ, அதனால் அவர் உயிரிழந்தார் என்பதோகூடப் பெரிய செய்தியல்ல. அதை அவர் இயல்பாக எடுத்துக்கொண்டதுதான் நம்மை இன்றுவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் செய்தி. அவருக்கு இப்படியொரு கொடிய நோய் இருப்பதை அறிந்ததும் அவருடைய ரசிகர்கள் பலர் அவருக்குக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆர்தர் பதிலெழுதுவார். 

ஒரு ரசிகரிடமிருந்து வந்த கடிதத்தில் இப்படி எழுதியிருந்தது... `இப்படி ஒரு மோசமான நோய்க்கு கடவுள் ஏன் உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?’ 

அதற்கு ஆர்தர் ஆஷே பதிலெழுதினார்... ``ஐந்து கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவர்களில் 50 லட்சம் குழந்தைகள்தான் முறையாக டென்னிஸ் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களிலும் ஐந்து லட்சம் பேர்தான் தேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்களாகிறார்கள். அந்த ஐந்து லட்சம் பேரில் 50,000 பேர்தான் இந்த விளையாட்டில் தீவிரமாக இறங்குகிறார்கள். அவர்களிலும் 5,000 பேர்தான் கிராண்ட் ஸ்லாம் போட்டி வரைக்கும் வருகிறார்கள். அவர்களில் 50 பேர் விம்பிள்டன் வரைக்கும் தேறுகிறார்கள். கடைசியாக நான்கே நான்கு பேர் செமிஃபைனலிலும், இரண்டு பேர் ஃபைனலிலும் விளையாடுகிறார்கள். அந்த இருவரில் நான் வெற்றி பெற்று, கோப்பையைக் கையில் வாங்கியபோது, நான் கடவுளிடம் `என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாய்?’ என்று கேட்கவில்லை. இப்போது நான் வலியோடும் வேதனையோடும் இருக்கும்போது மட்டும் `கடவுளே என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாய்?’ என்று கேட்பது எப்படி நியாயம்?’ 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close