RTR 160- 2.0-ன் 10 அசத்தல்கள்... அப்பாச்சி காதலர்கள் கவனத்துக்கு..! #FirstDriveReport

ஹீரோ ஹேண்டா CBZ பைக்குக்கு அடுத்தபடியாக, 160சிசி இன்ஜினைப் பிரபலப்படுத்திய பெருமை, இந்த பைக்கையே சேரும்.

RTR 160... அப்பாச்சி சீரிஸின் ஆரம்பப்புள்ளியாக இருக்கும் இந்த பைக், விற்பனைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருமுறை மட்டுமே பைக் பேஸ்லிஃப்ட் கண்டிருக்கிறது. யதார்த்தம் இப்படி இருந்தாலும், பல்ஸருக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என்ட்ரி லெவல் பர்ஃபாமென்ஸ் பைக் அப்பாச்சிதான்! (உலகளவில் இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமான பைக்குகள் விற்பனை ஆகிவிட்டது). ஹீரோ ஹேண்டா CBZ பைக்குக்கு அடுத்தபடியாக, 160சிசி இன்ஜினைப் பிரபலப்படுத்திய பெருமை, இந்த பைக்கையே சேரும்.

அப்பாச்சி

ஆனால் FZ, ஜிக்ஸர், ஹார்னெட், NS160 என புதிய போட்டியாளர்கள், 160சிசி பிரிவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றுவிட்டார்கள். இந்த நிலையில் இந்த ஆட்டத்துக்கு லேட்டாக வந்தாலும், கார்ப்பரேட்டர் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷனுடன், ஆயில் கூல்டு இன்ஜினுடன் லேட்டஸ்ட்டாக வெளிவந்திருக்கிறது, முற்றிலும் புதிய அப்பாச்சி RTR 160 4V. இரண்டு மாடல்களையும், ஓசூரில் அமைந்திருக்கும் டிவிஎஸ் தொழிற்சாலையின் டெஸ்ட் டிராக்கில் ஓட்டிப்பார்த்தோம். பைக் எப்படி இருக்கிறது?

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

அப்பாச்சி சீரிஸின் தலயாக இருக்கும் RTR 200 4V பைக்கைப் பின்பற்றியே, RTR 160 4V பைக்கை வடிவமைத்திருக்கிறது டிவிஎஸ். இதே பாணியை நாம் பல்ஸர் NS200 - பல்ஸர் NS160 பைக்கிலும் பார்த்திருந்தோம். ஆனால், இரண்டு பைக்குக்கு இடையேயான வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது சுலபமாகவே இருந்தது.

rtr 160 4v

வழக்கமான அலாய் வீல்கள், பைக்கின் நடுவே இருக்கும் சில்வர் நிற பாடி பேனல், சிங்கிள் பீஸ் சீட், ஒன் பீஸ் ஹேண்டில்பார், Faux ஏர் வென்ட் இல்லாத பின்பக்க பாடி பேனல், டெயில் லைட்டுக்குக் கீழே இருக்கும் சீட்டின் லாக், 3 Gloss கலர் ஆப்ஷன்கள் (சிவப்பு, கறுப்பு, நீலம்) ஆகியவை இதற்கான உதாரணம். RTR 200 4V பைக்குக்கு என பிரத்யேகமாக சிறிய வைஸர், மேட் கலர்கள், டூயல் டோன் கிராஃபிக்ஸ், ஸ்ப்ளிட் சீட், 2 பீஸ் ஹேண்டில்பார், ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகிய அம்சங்களை வைத்துவிட்டது டிவிஎஸ். 

apache side view

பூமராங் வடிவ LED DRL உடனான ஹெட்லைட் மற்றும் LED டெயில் லைட், முன்-பின் மட்கார்டு மற்றும் டயர்கள், முன்பக்க 270மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்விட்ச் கியர் மற்றும் ரியர் வியூ மிரர்கள், ஷார்ப்பான 12 லிட்டர் பெட்ரோல் டேங்க், ஸ்போர்ட்டியான இன்ஜின் கவுல், எக்ஸாஸ்ட் பைப், பேட்மேன் லோகோவை நினைவுபடுத்தும் கிராப் ரெயில் எனப் பல பாகங்கள் அப்படியே RTR 200 4V பைக்கில் இருந்து பெறப்பட்டிருப்பதால், 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸுடன் கட்டுமஸ்தான பைக்காகக் காட்சிதருகிறது RTR 160 4V.

apache fuel tank

பெட்ரோல் டேங்க்கில் டிவிஎஸ்-ஸின் குதிரை லோகோ, ஹெட்லைட்டின் வலப்புறத்தில் தேசியக்கொடி, பெட்ரோல் டேங்க்கின் மீது ரேஸிங் ஸ்ட்ரிப், முன்பக்க மட்கார்டில் டிவிஎஸ் ரேஸிங் ஸ்டிக்கர், ஹாஃப்செட் முறையில் இருக்கும் பெட்ரோல் டேங்க் மூடி எனக் குட்டிக் குட்டி டீட்டெய்லிங்கில் வழக்கம்போல அசத்தியிருக்கிறது டிவிஎஸ். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளைப்போலவே, இந்த பைக்கின் ஃபிட் அண்டு ஃப்னிஷ் மற்றும் கட்டுமானத்தரம் மிகச் சிறப்பாக இருக்கிறது. 

apache profile

மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் அப்பாச்சி RTR 160 4V பைக்கில், ஒவ்வொன்றுக்கும் இடையே சில வேறுபாடுகள் இருக்கின்றன. 143 கிலோ எடையுள்ள கார்ப்பரேட்டர் மற்றும் பின்பக்க டிரம் பிரேக் கொண்ட மாடலில், மெலிதான 110/70-17 டயர்தான் இருக்கிறது. மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு Amber பேக்லிட் மற்றும் ஹெட்லைட்டுக்கு 35/35W பல்ப்தான் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் மீட்டரில் கியர் இண்டிகேட்டர் மற்றும் லேப் டைமர் கிடையாது.

apache seat

145 கிலோ எடையுள்ள கார்ப்பரேட்டர் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக்கொண்ட மாடலில், முன்னே சொன்ன அம்சங்கள் தொடர்கின்றன. ஆனால், பின்பகுதியில் அகலமான 130/70-17 டயர் உள்ளது. இதுவே, 147 கிலோ எடையுள்ள ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் என்றால், 60/55W பல்ப் கொண்ட ஹெட்லைட் மற்றும் வெள்ளை நிற பேக்லிட்கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. தவிர, டிஜிட்டல் மீட்டரில் கியர் இண்டிகேட்டர் மற்றும் லேப் டைமர் இதில் இடம்பெற்றுள்ளது. 

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

160சிசி பிரிவில் பவர்ஃபுல் இன்ஜினாக, பல்சர் NS 160 பைக்கின் ஆயில் கூல்டு இன்ஜின்தான் இருந்தது. தற்போது அந்த இடத்தை பல்சரிடமிருந்து தட்டிப்பறித்திருக்கிறது அப்பாச்சி! ஆம், RTR 160 4V பைக்கில் இருக்கும் 159.7சிசி, ஆயில் கூல்டு, 4 வால்வ், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 16.5bhp பவர் (கார்ப்பரேட்டர்) / 16.8bhp பவர் (ஃப்யூல் இன்ஜெக்‌ஷன்) மற்றும் 1.48kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதனால் தனது வகையிலேயே சிறந்த பவர் டு வெயிட் ரேஷியோ உடைய பைக்காகவும் மாறியிருக்கிறது RTR 160 4V. முந்தைய பைக்கைவிட இதன் ஐடிலிங் மற்றும் கம்ப்ரசன் ரேஷியோ அதிகமாகியுள்ளது. என்றாலும் பைக்கை ஸ்டார்ட் செய்த உடனேயே, முந்தைய பைக்கைவிட இதன் இன்ஜின் ஸ்மூத்தாக இருப்பதை உணர முடிந்தது.

apache handlebar

இதனுடன் இன்ஜினை ரெவ் செய்வதும் நல்ல அனுபவமாகவே இருந்தது. அதற்குக் காரணமும் இருக்கிறது. ஆம், ஆறு முறை INMRC ரேஸ் சாம்பியன்ஷிப் வென்ற RTR 165 பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், 160சிசி பிரிவில் ஷார்ட் ஸ்ட்ரோக் அமைப்பைக்கொண்ட ஒரே இன்ஜின், அப்பாச்சி RTR 160 4Vதான். 7,000 ஆர்பிஎம்-மைத் தாண்டும்போது, பெட்ரோல் டேங்க்கில் அதிர்வுகள் லேசாக எட்டிப்பார்க்கின்றன. இது முந்தைய பைக்குடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான். 

apache engine

கார்ப்பரேட்டர்கொண்ட பைக்கின் ஆக்ஸிலரேஷன் ஷார்ப்பாக இருந்தது. இதுவே ஃப்யூல் இன்ஜெக்‌ஷன்கொண்ட பைக் ஸ்மூத்தாக இயங்குவதுடன், பவர் டெலிவரியும் சீராக இருந்தது. இதனால் அந்த பைக்கில் 4-வது கியரிலேயே 115 கி.மீ வேகம் (ஸ்பீடோ மீட்டரில்) செல்ல முடிந்தது. என்னுடன் சேர்ந்து பைக் ஓட்டிய மற்ற பத்திரிகையாளர்களில் சிலர், 120 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் (ஸ்பீடோ மீட்டரில்) சென்றதாகச் சொன்னார்கள்! ஆனால், 60 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தை எட்டிப்பிடிப்பதில் இருந்த பவர், 100 கி.மீ வேகத்தைத் தாண்டிய பிறகு கொஞ்சம் குறைந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். எக்ஸாஸ்ட் சத்தம் நன்றாக இருந்தாலும், அதில் முந்தைய பைக்கிலிருந்த கெத்து இல்லை.

apache brake

எடை குறைவான க்ளட்ச்சைப் பிடித்தால், ஐந்து கியர்களும் துல்லியமாக மாறுகின்றன. 0 - 60 கி.மீ வேகத்தை 4.73 / 4.8 (கார்ப்பரேட்டர்/ஃப்யூல் இன்ஜெக்‌ஷன்) விநாடியிலும், 0 - 100 கி.மீ வேகத்தை 15.9 / 16.6 (கார்ப்பரேட்டர்/ஃப்யூல் இன்ஜெக்‌ஷன்) விநாடியிலும், அப்பாச்சி RTR 160 4V பைக் எட்டிப்பிடிக்கும் என டிவிஎஸ் தெவித்துள்ளது. டெஸ்ட் டிராக்கில் பைக்கை விரட்டியபோதும், இன்ஜின் சூடு அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால், நம் ஊர் சாலைகளில் பைக்கை ஓட்டும்போதுதான், ஆயில் கூலரின் உண்மையான செயல்பாடு தெரியவரும். 

ஓட்டுதல் அனுபவம்

அப்பாச்சி RTR 160 4V பைக்கில் உட்கார்ந்ததும், புதிய அகலமான ஒன் பீஸ் ஹேண்டில்பார் நம்மை வரவேற்றது. சீட் உயரம் 10 மிமீ அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் ஃபுட் பெக் கொஞ்சம் பின்னோக்கி வைக்கப்பட்டிருப்பதால், உயரமான அதே சமயம் ஸ்போர்ட்டியான சீட்டிங் பொசிஷன் கிடைத்துவிடுகிறது. சிங்கிள் பீஸ் சீட்டின் குஷனிங் கச்சிதமாக இருக்கிறது. ஆனால், பில்லியன் சீட்டின் சொகுசுத்தன்மையை நம் ஊர் சாலைகளில்தான் செக் செய்ய முடியும்.

apache monoshock

அப்பாச்சி RTR 200 4V பைக்கில் இருக்கும் டபுள் க்ரெடில் ஃப்ரேமையே இதிலும் பயன்படுத்தியுள்ளது டிவிஎஸ். ஆனால், 160சிசி பைக் என்பதால் சஸ்பென்ஷனில் அதற்கேற்ப இந்த நிறுவனம் மாறுதல்களைச் செய்துள்ளது. அப்பாச்சி RTR 200 4V பைக்கில் கயாபா நிறுவனத்தின் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் இருந்தது என்றால், அப்பாச்சி RTR 160 4V பைக்கில் இருப்பது ஷோவா நிறுவனத்தின் 33 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன்.

apache rear

சஸ்பென்ஷன் டியூனிங்கில் ஷோவாவுடன் இணைந்து செயல்பட்டிருப்பதால், பைக்கில் டிவிஎஸ் எதிர்பார்த்த மாற்றம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் டெஸ்ட் டிராக்கில் வரும் நீண்ட வலதுபுறத் திருப்பம் மற்றும் சிறிய இடதுபுறத் திருப்பத்தில், 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் செலுத்தியபோதும், எந்த ஆட்டமும் இல்லாமல் ஸ்டெடியாகச் சென்றது அப்பாச்சி RTR 160 4V. மேலும் இதே டெஸ்ட் டிராக்கின் இருபுறமும் இருந்த நேர்க்கோட்டுச் சாலைகளில் டாப் ஸ்பீடை எட்டுவதற்காக விரட்டினாலும், முந்தைய பைக்குடன் ஒப்பிடும்போது நிலைத்தன்மை அசத்தலாக இருந்தது.

apache grab rail

இது அனைத்துக்கும் சஸ்பென்ஷன் செட்-அப், 57 மிமீ கூடுதல் வீல்பேஸ், டிவிஎஸ்ஸின் ரெமோரா டியூப்லெஸ் டயர்கள்தான் காரணம். ஆனால், சஸ்பென்ஷனின் உண்மையான திறன், நம் ஊர் சாலைகளில் பைக்கை ஓட்டும்போதுதான் வெளிப்படும். முன்பக்க - பின்பக்க டிஸ்க் பிரேக் தனது பணியைத் திறம்படச் செய்தாலும், ஃபீட்பேக் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம்.

முதல் தீர்ப்பு

டிசைன், வசதிகள், பர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் அனுபவம், கட்டுமானத் தரம் என ஒரு என்ட்ரி லெவல் பர்ஃபாமென்ஸ் பைக்குக்குத் தேவையான ஏரியாக்களில் முன்னேறியிருக்கும் அப்பாச்சி RTR 160 4V, எடையிலும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. வேரியன்ட்டுக்கு ஏற்ப, முந்தைய பைக்கைவிட 6 கிலோ முதல் 10 கிலோ வரை எடை அதிகரித்துவிட்டது. ஆனால், அதிக பவர் மற்றும் திறன்மிக்க சேஸி அமைப்பு, அதை ரைடருக்குக் குறையாகத் தெரியாதவிதத்தில் அப்பாச்சி RTR 160 4V பைக்கைக் கொண்டுவந்ததில், டிவிஎஸ்ஸின் 35 ஆண்டுகால ரேஸிங் அனுபவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. முந்தைய RTR 160 மற்றும் RTR 180 பைக்குகளும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

apache front

ஆக, பல்ஸர் 150, யூனிகார்ன் 150 யமஹா SZ-RR, ஹீரோ எக்ஸ்ட்ரீம் போன்ற 150சிசி பைக்குக்குப் போட்டியாக முந்தைய அப்பாச்சி RTR 160 இருக்கும் என்றால், ஹார்னெட் - ஜிக்ஸர் - FZ - NS 160 போன்ற 160சிசி பைக்குகளுக்குப் போட்டியாக புதிய அப்பாச்சி RTR 160 4V இருக்கிறது. சென்னை எக்ஸ் ஷோரூம் விலைகளை வைத்துப் பார்க்கும்போது, முந்தைய பைக்கைவிட புதிய பைக்கின் விலை 3,500 ரூபாய் மட்டுமே ஏற்றம் கண்டிருக்கிறது. அப்பாச்சி RTR 160 4V பைக்கில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களுக்கு, இந்த விலையைக் கொடுக்கலாம் என்றே தோன்றுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!